Sunday 23 June 2024

மரங்களும் மக்களும்

வனத்தின் மௌனம் சில்வண்டுகளின் ஒலியாலானது என்பதை வனத்திற்குச் சென்றவர்கள் உணர்ந்திருப்பார்கள். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான சில்வண்டுகள் தங்களையும் மற்றவற்றையும் தனித்தனி என பிரித்து உணர்வது இல்லை. அவை தங்களை ஒன்றென்றே உணர்கின்றன.  சில்வண்டுகள் மட்டுமல்ல காட்டில் வாழும் அனைத்து உயிர்களுமே தங்களை ஒன்றென்றே உணர்கின்றன. தனது உணவு யாது என்பதையும் தான் எதன் உணவு என்பதையும் மட்டும் தன் உணர்வில் கொண்ட அவ்வுயிர்கள் சூழலுடன் முற்றும் இணைந்தே இருக்கின்றன. வாழ்விலும் சாவிலும். வனம் தன் பரப்பில் இருக்கும் எல்லா உயிர்த்தொகைகளும் வாழும் விதத்தில் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக நான் உணரும் விஷயம் ஒன்று உண்டு. மரங்கள் மேல் கிராம மக்களுக்கு நிச்சயம் ஈடுபாடு இருக்கிறது. பூ மரங்களைக் கிராமத்துப் பெண்கள் விரும்புகிறார்கள். வீட்டில் விளக்கேற்றும் போது தீபத்துக்கு மலரிட ; மங்கல அணியாய் மலர்ச்சரம் சூடிக் கொள்ள ; ஆலயங்களில் இறைவனுக்கு அர்ப்பணிக்க என அவர்கள் பூ மலர்களை விரும்ப காரணங்கள் பல இருக்கின்றன. நந்தியாவட்டை , விருட்சி, அரளி ஆகிய மரக்கன்றுகள் அதிக எண்ணிக்கையில் பூக்கும் இயல்பு கொண்டவை. பெரிய உயரம் போகாதவை. அவற்றை வளர்த்து விடுகின்றனர். எனினும் பாரிஜாதம், செண்பகம் ஆகிய பூமரக் கன்றுகளை வளர்ப்பதில் அவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அவற்றை ஆடுகள் மேய்ந்து விடும். தான் வளர்த்த செடி ஆடுகளால் மேயப்பட்டால் மனமுடைகிறார்கள். அந்த உடைவு அவர்களை ஆடுகள் மேயும் வாய்ப்புள்ள மரக்கன்றுகளை வளர்ப்பதிலிருந்து தடுக்கிறது. விளைவு யாதெனில் ஒரு கிராமத்தில் எல்லா விதமான பூமரக் கன்றுகளும் உள்ளன என்ற நிலையை உருவாக்குவது சிரமமாக இருக்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளின் பொருளியல் நிலையை உயர்த்த தேக்கு மரக்கன்றுகளை அளித்து அவர்கள் வயல் வரப்புகளிலோ வீட்டுத் தோட்டங்களிலோ நடச் சொல்லலாம் என்ற முறையில் தனது முயற்சிகளை முன்னெடுத்தது. நமது முன்னெடுப்புக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருந்தது; எல்லாரும் பிரியம் காட்டினார்கள். அன்பு செலுத்தினார்கள். மதிப்பு அளித்தார்கள். இருப்பினும் அதிலும் ஆடுகளின் மேய்ச்சல் என்ற சாத்தியம் ஒரு தடையாக வந்தது. 

மின்சாரக் கம்பிகள் கிராமங்கள் முழுதும் எல்லா பகுதிகளிலும் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. கிராமத்தின் பரந்த பரப்பில் மரக்கிளைகள் காற்றில் மின்சாரக் கம்பிகளில் உரசினால் அந்த பகுதியில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கிராம மக்கள் உயரமாக கிளை பரப்பு வளரக் கூடிய மரங்கள் மீது லேசான மனவிலக்கம் கொள்கின்றனர். சற்று முயற்சித்தால் சரி செய்யக் கூடிய விஷயமே இது. இருப்பினும் மின்சாரமே முதன்மை பெற்று பொது இடத்தில் மரம் வளர்க்கும் முயற்சிகள் தடையாகின்றன. 

மரங்கள் ஒவ்வொரு தலைமுறையாலும் நட்டு பராமரித்து வளர்க்கப்பட வேண்டியவை என்ற எண்ணமும் உணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். பல வகையான மரங்கள் ஒரு கிராமத்தில் இருக்க வேண்டும். புங்கன், வேம்பு, ஆல், அரசு, இலுப்பை, வன்னி, கொன்றை, பனை, பலா, வில்வம் என விதவிதமான மரங்கள் ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட வேண்டும். கிராம மக்களுக்கு அந்த உணர்வு உருவாக்கப்பட வேண்டும். மரங்கள் வளர்ப்பதில் மக்களுக்கு அந்த உணர்வை உருவாக்குவதில் ஈடுபடுவதே அடிப்படையான முக்கியமான பணியாக உள்ளது.