Monday 24 June 2024

நன்முயற்சி

சமீபத்தில் இருபது கல்லூரி மாணவர்கள் இணைந்து திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கும் ஒரு நன்முயற்சியைப் பற்றி அறிந்தேன். ( ஜனநாயக சோதனை அறிக்கை - பெருந்தலையூர் )

ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது வாக்காளரின் சுயமரியாதையை இல்லாமல் ஆக்கும் செயல் என்பதையும் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் நடவடிக்கை என்பதையும் மிகப் பரிவுடன் பொறுமையுடன் பல்வேறு விதங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். கிராம மக்களைச் சந்திக்கும் முன், மாணவர் குழுவின் இருபது மாணவர்களும் தேர்தல் அரசியல், ஜனநாயகத்தில் வாக்காளர் பெற்றிருக்கும் முக்கியத்துவம், தமிழகத்தில் வாக்குக்கு பணம் அளித்தல் பழக்கம் உருவானது எப்படி, நிலைபெற்றது எப்படி, பணம் பெறுவதற்கு கூறப்படும் காரணங்கள் , வாக்குக்கு பணம் பெறுதல் ஏன் மாண்பற்ற செயல் என பல விஷயங்களை அதன் சகல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து தாங்கள் சொல்லப்போகும் விஷயம் என்ன எதிர்கொள்ளப் போகும் கேள்விகள் என்ன என பல விதமான மனத் தயாரிப்புகளை மேற்கொண்டு பின்னர் மக்களைச் சந்தித்திருக்கின்றனர். 

எல்லாரும் பணம் பெறும் போது சிலர் பணம் பெறாமல் இருந்தால் அந்த  பணத்தை வாக்குக்கு பணம்  வினியோகம் செய்யும் கட்சிக்காரர் தானே வைத்துக் கொள்வார் ; அது அந்த நபருக்கு பயனாகப் போகும் என்ற காரணம் பலரால் கூறப்பட்டிருக்கிறது. மாணவர் குழு பொறுமையுடன் இந்த கேள்விக்கும் தக்க பதிலை அளித்து பொதுமக்கள் காணத் தவறும் பார்வைக்கோணத்தைக் காட்டி வாக்குக்கு பணம் பெறுதல் எல்லா விதத்திலும் தீமை என்பதை மக்களுக்குப் புரிய வைத்திருக்கின்றனர். 

மாணவர்கள் குழு வெவ்வேறு பரப்புரை பாணிகளில் அந்த கிராம மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து வாக்குக்கு பணம் பெற மாட்டோம் என்ற வாக்குறுதியை அளிக்கச் செய்திருக்கிறது. கிராமத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் மாணவர்கள் குழு 15 நாட்களில் மூன்று முறையேனும் சந்தித்திருக்கிறது. 

அந்த ஊரின் வாக்காளர்களில் 85 சதவீதம் பேர் வாக்குக்கு பணம் வாங்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்திருக்கின்றனர். இது நிச்சயமாக மாணவர் குழுவின் முயற்சிக்கு கிடைத்த பெருவெற்றி. 

ஜனநாயகத்தின் மாண்புக்கு வலு சேர்க்கும் விதமான இத்தகைய பெருஞ்செயலை எண்ணி திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கும் இருபது கல்லூரி மாணவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.