Sunday 9 June 2024

நிலையான அரசு

 இந்த பதிவை 1991 மே 21ம் தேதியிலிருந்து துவக்குவது சில விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன். 21.05.1991 அன்று இரவு இந்தியாவின் முன்னாள் பிரதமரும் இந்திரா காங்கிரஸ்ஸின் பிரதமர் வேட்பாளருமான ராஜிவ் காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் வேட்பாளரை ஒரு சிறிய நாட்டின் பயங்கரவாத அமைப்பு குரூரமாகக் கொன்றது உலகையே திகைக்க வைத்தது. அரசியல் படுகொலைகள் அரிதாக நிகழக் கூடியவையே என்றாலும் ராஜிவ் கொல்லப்பட்ட விதம் குரூரமானது. அவர் கொல்லப்பட்ட விதம் இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் அச்சத்தை அளிப்பதாக இருப்பது தங்கள் பலத்தைக் காட்டுவதாக அமையும் என விடுதலைப் புலிகள் எண்ணினர். தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள உலக நாடுகளின் உலக மக்களின் அச்சம் தங்களுக்கு உதவும் என அவர்கள் எண்ணினர். இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களும் தங்கள் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடத் தயக்கம் காட்டுவார்கள் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது. 

1991 மே 22ம் தேதி ராஜிவ் படுகொலை நிகழ்ந்து சில மணி நேரத்தில் இந்திய புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு ராஜிவ் படுகொலை வழக்கை புலன் விசாரணை செய்ய பணிக்கப்பட்டது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரியான டி. ஆர். கார்த்திகேயன் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருடைய குழு ராஜிவ் கொலையாளிகளின் தடங்களைப் பின் தொடரத் தொடங்கியது. 

காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை கட்சித் தலைவராகும் படி கேட்டது. சோனியா காந்தி ராஜிவைத் திருமணம் செய்து கொண்டு இந்தியா வந்து பல ஆண்டுகளுக்குப் பின்பே தனது இத்தாலியக் குடியுரிமையைத் துறந்தார். எனவே அவரது இந்தியக் குடியுரிமை தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தன. மேலும் 1977ம் ஆண்டு நெருக்கடி நிலைக்குப் பின் ஜனதா அரசு பதவியேற்ற சூழலில் இந்திரா காந்தி நெருக்கடி நிலை காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு மீறல்கள் தொடர்பாக விசாரணைக்கு ஆளாகியிருந்தார். அந்த காலகட்டத்தில் சோனியா தன் குழந்தைகளுடன் இத்தாலி சென்று விடலாமா என்ற பரிசீலனையில் இருந்தார். இந்திராவின் படுகொலையும் ராஜிவ்வின் படுகொலையும் அவரை அரசியல் வேண்டாம் என்ற முடிவை நோக்கித் தள்ளின. காங்கிரஸ்ஸின் அழைப்பை சோனியா மறுத்தார். 

காலம் ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.நரசிம்ம ராவ் அவர்களை காங்கிரஸ் தலைமைக்குக் கொண்டு வந்தது. கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இருந்தார் ராவ். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். ஆந்திர முதலமைச்சராக இருந்தவர். அறிஞர். பல மொழிகள் தெரிந்தவர் என அவர் தலைமைக்கு வர பல காரணங்கள் இருந்தன. ராஜிவ் படுகொலைக்குப் பின் மூன்று கட்டத் தேர்தல்கள் நிகழ்ந்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸ் 232 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான அண்ணா தி.மு.க 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 

நரசிம்ம ராவ் ஆட்சியையும் தனது கட்சி அரசியலையும் தனித்தனியே வைத்திருந்தார். நாட்டுக்கு நலன் பயக்கும் விஷயங்களை திறமையான நபர்களைக் கொண்டு நிறைவேற்றினார். கட்சி அரசியலிலும் நுட்பமாக காய் நகர்த்தி தனது அரசியல் எதிரிகளை முடக்கினார். காங்கிரஸ் கட்சியை சோனியா குடும்ப ஆதிக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர தான் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து முயன்றார் ராவ். சர்தார் வல்லபாய் படேலுக்கு ‘’பாரத ரத்னா’’ அளித்தது ராவ் அரசு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ‘’பாரத ரத்னா’’ அளித்தது ராவ் அரசு. நேரு இந்திரா சோனியா குடும்ப அரசியலை முடிவுக்குக் கொண்டு வர பெருவிருப்பம் கொண்டிருந்தார் நரசிம்ம ராவ். ராவ் ஆட்சிக் காலத்தில் அவரால் ஒரு சாதுர்யமான நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு அரசியல் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதாவது பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரும் எந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் ஆதரிப்பதில்லை என தீர்மானம் இயற்றினர். மார்க்ஸிஸ்டு கட்சிக்கு அப்போது நாடாளுமன்றத்தில் 35 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் வெளிநடப்பு செய்தால் ராவ் அவையில் எளிதில் பெரும்பான்மை பெற்று விடுவார். மார்க்ஸிஸ்டுகள் இவ்வாறு தீர்மானம் இயற்றியவுடன் பா.ஜ.க மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வரும் எந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் ஆதரிப்பதில்லை என முடிவு செய்தது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க வுக்கு அப்போது 119 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்தாலும் அரசு எளிதில் பெரும்பான்மை பெற்று விடும். 

நரசிம்ம ராவ் கால கட்டம் ஒரு கொந்தளிப்பான காலகட்டம். புயல் வீசும் கடல் போல் இருந்தது இந்திய அரசியல். திறன் வாய்ந்த மாலுமியாக நாட்டை அக்காலகட்டத்தில் வழிநடத்தினார் நரசிம்ம ராவ். ஜெனீவாவில் பாகிஸ்தான் ஐ நா வில் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற சீன ஆதரவுடன் முயற்சி மேற்கொண்டிருந்தது. பாரதிய ஜனதா கட்சி தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஒரு ராஜதந்திரிகள் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பி அந்த தீர்மானம் நிறைவேறாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளுமாறு பணித்தார். வாஜ்பாய் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது . அந்த தீர்மானம் உலக நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதரக் கட்டமைப்பை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தார் ராவ். அவர் காலகட்டத்தில் பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது. மும்பை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது. ‘’காட்’’ ஒப்பந்தம் கையெழுத்தானது. கொந்தளிப்பான இந்த விஷயங்களை நிதானமாக ராவ் எதிர்கொண்டார். 

1991 - 1996 காலகட்டத்தில் சிறப்பு புலனாய்வு குழு ராஜிவ் படுகொலையை புலனாய்வு செய்து ராஜிவைக் கொன்றது தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதை நிறுவியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அதன் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மனும் குற்றவாளிகள் என்றது சி.பி.ஐ. 

1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் 140 உறுப்பினர்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை காங்கிரஸ் வரலாற்றிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கை என்று கூறி நரசிம்ம ராவ் க்கு கட்சிக்குள் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு கட்சித் தலைமையிலிருந்து ராவ் அகற்றப்பட்டார். ( அதன் பின்னர் 1998ல் காங்கிரஸ் 140 உறுப்பினர்களைப் பெற்றது. 1999ல் 114 உறுப்பினர்களைப் பெற்றது. 2014ல் 44 உறுப்பினர்களைப் பெற்றது. 2019ல் 52 உறுப்பினர்களைப் பெற்றது. 2024ல் 99 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் கட்சித் தலைமைக்கு எதிராக எந்த குரலோ விமர்சனமோ எழவில்லை என்பதுடன் 1996ல் காங்கிரஸில் ராவ் தலைமை அகற்றப்பட்டதை இணைத்து யோசித்துப் பார்க்க வேண்டும்) 

1996ல் இந்தியப் பாராளுமன்றத்தில் 161 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாய் உருவெடுத்திருந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. பா.ஜ.க அல்லாத காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்து ‘’ஐக்கிய முன்னணி’’ என்ற கூட்டணியை உண்டாக்கின. 46 எம்.பி க்களைக் கொண்ட ஜனதா தளம், 20 எம்.பி க்களைக் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் , 16 எம்.பி க்களைக் கொண்ட தெலுங்கு தேசம், 16 எம்.பி க்களைக் கொண்ட தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து உருவானது ஐக்கிய முன்னணி. பாரதிய ஜனதா ஆட்சி அமையாமல் தடுக்க இந்த அணிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தந்தது. ஹெச் . டி . தேவ கௌடா பிரதமர் ஆனார். அதன் பின் ஐ. கே. குஜ்ரால் பிரதமர் ஆனார். இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய முன்னணியில் இரண்டு பிரதமர்கள் வந்தார்கள். 

நீதிபதி ஜெயின் என்பவர் தலைமையில் ராஜிவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையில் ஸ்ரீபெரும்பதூரில் ராஜிவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததாக அப்போதைய தி.மு.க அரசு மீது குற்றம் சாட்டியது. அதனால் ஆட்சியிலிருந்த தி.மு.க மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியது காங்கிரஸ். தி.மு.க ராஜினாமா செய்யாததால் அரசுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்தது. 

இரண்டு ஆண்டுகளில் நாடி இரண்டு பிரதமர்களைக் கண்டு இரண்டு தேர்தல்களைக் கண்டதால் ‘’நிலையான அரசு - திறமையான பிரதமர்’’ என்னும் முழக்கத்துடன் தேர்தல் களம் கண்ட பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. பதவியேற்று சில வாரங்களில் இந்திய ராணுவத்தை அணு குண்டு சோதனை செய்யுமாறு பணித்தார் வாஜ்பாய். இந்திய ராணுவம் பொக்ரானில் அணுகுண்டு சோதனையும் ஹைட்ரஜன் குண்டு சோதனையும் செய்தது. இந்திய பாதுகாப்பு வரலாற்றில் அது ஒரு முக்கியமான மைல்கல். ராஜிவ் படுகொலை வழக்கை உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது வாஜ்பாய் அரசு. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி. ஆர். கார்த்திகேயன் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானியைச் சந்தித்து அந்த முக்கியமான கோரிக்கையை வைத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. 

18 கட்சி கூட்டணியாக விளங்கியது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. கூட்டணியில் அங்கம் வகித்த அண்ணா தி.மு.க தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் வாஜ்பாயை பாராளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். வாஜ்பாய் கொண்டு வந்த அந்த தீர்மானம் ஒரு வாக்கு வித்யாசத்தில் தோல்வி அடைந்தது. 

சோனியா காந்தி 273 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை குடியரசுத் தலைவரிடம் அளித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த 273 உறுப்பினர்களும் வாஜ்பாயின் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பது என்பது ஒரு நிலைப்பாடு ; காங்கிரஸ்க்கு ஆதரவு கொடுப்பதா இல்லையா என முடிவெடுப்பது இன்னொரு நிலைப்பாடு எனக் கூறி சோனியா பிரதமராக தனது ஆதரவு இல்லை என்பதை தெரியப்படுத்த நாடு இன்னொரு தேர்தலைச் சதித்தது. 

1996ம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டுக்குள் தோராயமாக 3 ஆண்டுகளில் அதாவது ஆயிரம் நாட்களில் நாடு நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவ கௌடா, ஐ.கே. குஜ்ரால் என நான்கு பிரதமர்களைச் சந்தித்தது. மூன்று ஆண்டுகளில் இரண்டு தேர்தல்கள் நிகழ்ந்தன. இந்திய பொதுத் தேர்தலை நடத்துவது என்பது மிகவும் செலவேறிய ஒரு விஷயம் என்பதால் நிலையான ஆட்சி என்பது நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் அவசியமான ஒன்றானது. 

1999ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். தனது முழுப் பதவிக் காலத்தை வாஜ்பாய் பூர்த்தி செய்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் நான்கு மெட்ரோ நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலைக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அந்த சாலைகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டன. ஆயிரம் பேர் மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்தையும் பிரதான சாலையுடன் இணைக்கும் ‘’கிராம் சதக் யோஜனா’’ அந்த காலத்தில் உருவாக்கப்பட்டு செயலாக்கப்பட்டது. ரயில்வே துறையில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் குடியரசுத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களை கொண்டு வந்தது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. 

2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை. சோனியா காந்தி தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களைக் கோரினார். சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையில் சில சர்ச்சைகளும் ஐயங்களும் இருப்பதால் வேறு ஒருவரை காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்குமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.  மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். பத்து ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங். 

2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இருந்தது. 2019ம் ஆண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. 2024ம் ஆண்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த ஆட்சியும் தனது முழுப் பதவிக் காலத்தை பூர்த்தி செய்யும்.