Saturday 13 July 2024

வன வாழ்க்கை - அத்தியாயம் 1 - லௌகிகம்

 ஹென்றி டேவிட் தோரோ வால்டன் ஏரிக்கரையில் தானே ஒரு சிறு மரவீடு - அதனை மர வீடு என்பதை விட மர அறை என்பது பொருத்தமானது- கட்டிக் கொண்டு அங்கே இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் வாழ்கிறார். அந்த எண்ணூறு நாட்களின் வாழ்வனுபவத்தை தனக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறார். அங்கிருந்து தனது பழைய நகருக்குத் திரும்பிய பின்னர் அந்த வாழ்க்கை குறித்து தன்னிடம் தொடர்ந்து கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக வன வாழ்க்கை என்ற நூலை எழுதுகிறார். அதன் முதல் அத்தியாயம் லௌகிகம். சாமானிய மனிதனின் லௌகிகம் எவ்விதம் அவனது வாழ்வில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதையும் அதனை ஒரு மனிதன் எவ்விதம் கூர்ந்து அவதானித்து அந்த தாக்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் குறித்து தனது அபிப்ராயங்களை தெரிவித்த வண்ணம் முன்னே செல்கிறார். 

சாமானிய லௌகிகம் கோடிக்கணக்கானோரோல் ஏற்கப்படுவது. தீவிரமாக நம்பப்படுவது. அது கோடிக்கணக்கானோரால் நம்பப்படுகிறது ; ஏற்கப்படுகிறது என்பதாலேயே பெரும் வலுவும் பேருருவும் கொண்டது. அதன் முன் நின்று அதனை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு பேசுவது என்பது ஒரு அறிஞனுக்கும் ஒரு ஞானிக்கும் மட்டுமே சாத்தியம். தோரோ வன வாழ்க்கை நூலாசிரியராக ஒரு அறிஞனாகவும் ஒரு ஞானியாகவும் நின்று கோடிக்கணக்கான சக மனிதர்களை நோக்கி பேசுகிறார். 

மனிதர்கள் தற்காலத்தில் அமைக்கும் வீடுகள் கூட ஏன் இன்னும் குகை போல் இருக்கின்றன என வினா எழுப்புகிறார். இன்னும் குகை மனிதர்கள் மனநிலையிலிருந்து மனிதர்கள் விடுபடவில்லையா என்னும் ஐயத்தை எழுப்புகிறார். திறந்த வெளி என்பது வாழ்வதற்கு மிகச் சிறப்பானது. அதில் சூரியனின் கதிர்கள் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. சூரியக் கதிர்கள் உடல் மேல் படும் வகையில் பகல் வாழ்வை ஏன் மனிதர்கள் அமைத்துக் கொள்வதில்லை என தோரோ அங்கலாய்க்கிறார்.

உணவு என்பதை உடல் இயங்குவதற்கான எளிய உணவாக ஏன் அருந்தக் கூடாது என்னும் கேள்வி தோராவுக்கு இருக்கிறது. தான் வால்டனில் வசித்த நாட்களில் வால்டன் கரையில் காய்கறிகளை விவசாயம் செய்து தனது தேவைக்கு வைத்துக் கொள்கிறார். 

மனிதர்கள் பொருள் சார்ந்த வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வானத்தின் அருளைத் தவற விட்டு விடுகிறார்கள் என்னும் எண்ணம் தோரோவுக்கு இருக்கிறது. நீண்ட நாள் வாழ்ந்த மனிதன் ஏன் தன் அனுபவத்தின் பெரும் பகுதியாக கசப்புணர்வையே கொண்டிருக்கிறான் என வியக்கிறார் தோரோ. வாழ்வனுபவம் இனிமையானது. அதனை நாளும் உணரும் வகையில் நம் மனத்தை பக்குவப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்கிறார். 

எளிய உடைகள் வாழ்க்கைக்குப் போதுமானவை என்னும் அபிப்ராயம் கொண்டிருக்கிறார் தோரோ.  

‘’வன வாழ்க்கை’’யின் முதல் அத்தியாயத்தை வாசித்த போது அதில் தோரோ மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழிக்கிறான் என வருத்தப்படுகிறார். அவர் எழுதியது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில். அப்போது மிக மிகச் சிறிதாக இயற்கை அழிவு தொடங்கிய காலம். இன்று ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் இயற்கை மீதான் சுரண்டலை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. 

மலைப்பாக இருப்பினும் தோரோ முன் வைக்கும் ஒவ்வொரு சிந்தனையும் இன்றும் பொருத்தமாகவும் இருக்கிறது. தோரோவின் சொற்களுக்கு செவி மடுக்க வேண்டிய அவசியம் அவர் காலத்தினை விட இப்போது மிகவும் அதிகரித்திருக்கிறது.