Tuesday 23 July 2024

துலா

 

எனது நண்பர் ஒருவருக்கு காலில் சிறு புண் ஏற்பட்டிருந்தது. அவருக்கு உடலில் சர்க்கரைக் குறைபாடு உண்டு. எனவே காலில் இருந்த புண் ஆறுவதில் தாமதம் ஆனது.  சில நாட்களுக்கு முன்னால் அவர் உடல்நிலை மோசமடைந்தது. உடல் எடை பெரிதாகக் குறைந்தது. மயக்கமடைந்தார். குருதி வங்கியிலிருந்து குருதி அளிக்கப்பட்டது. 

திருச்சியில் ஒரு மருத்துவமனைக்கு நண்பரை அழைத்துச் சென்றார்கள். அந்த மருத்துவமனையில் நண்பரின் கால் அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். மூன்று மருத்துவர்கள் நண்பரைச் சூழ்ந்து கொண்டு அன்று மாலையே அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என விதவிதமாக கூறியிருக்கிறார்கள். இந்த தகவலைக் கேள்விப்பட்ட போது ஏன் அந்த மருத்துவமனை இன்னொரு மருத்துவரின் ‘’செகண்ட் ஒப்பீனியன்’’ கேட்கக் கூட முயலவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. நண்பர் அங்கிருந்து தப்பி ஊர் திரும்பி விட்டார். 

இவ்விதமான சர்க்கரை நோய் - கால் புண் ஆகியவற்றை கும்பகோணத்தில் ஒரு மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அந்த மருத்துவமனையில் நண்பர் சென்று சேர்ந்திருக்கிறார். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சாதாரண சிகிச்சையின் மூலமே குணப்படுத்திட முடியும் என்று அங்கே கூறியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர வேண்டும் என்பது அவசியமில்லை ; இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ‘’ஓ.பி பேஷண்ட்’’ ஆக வந்து ‘’டிரெஸ்ஸிங்’’ செய்து கொண்டாலே போதுமானது என்றும் கூறியிருக்கிறார்கள். இருப்பினும் நண்பர் தன் விருப்பத்தின் பேரில் அங்கே அட்மிட் ஆகி விட்டார். 

நேற்று நண்பரைக் காண அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த மருத்துவமனையின் இயங்குமுறையின் சிறு சிறு விஷயங்களில் கூட குறைந்தபட்ச மருத்துவ அறம் இருப்பதை உணர முடிந்தது. தினமும் எல்லா நோயாளிகளுக்கும் ஒரு மருத்துவரைக் கொண்டு நோயாளிகளின் நோய் தீர்க்க உதவும் யோகாசனங்கள் கற்பிக்கப்படுகின்றன. அலோபதி மருத்துவமனையில் யோகாசனம் கற்றுத் தருவது என்பது சிறப்பான விஷயம். தலைமை மருத்துவர் முழு நேரமும் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையின் ஒரு பகுதியில் அவரது வீடு அமைந்திருக்கிறது. எனவே எப்போதும் அவரை ஏதேனும் ஒரு அவசரம் எனில் அழைக்க முடியும். 

நண்பர் இப்போது நலமுடன் இருக்கிறார். நண்பருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அனேகமாக இன்றோ நாளையோ டிஸ்சார்ஜ் ஆகி ஊர் திரும்பி விடுவார். திருச்சி மருத்துவமனை அனுபவம் அவருக்கு பேரச்சத்தை அளித்திருந்தது. குடந்தை மருத்துவமனை அனுபவத்தால் அந்த கொடிய நினைவிலிருந்து மீண்டிருக்கிறார்.