Thursday 1 August 2024

கடலின் கரையில்

 நேற்று நண்பர் ஒருவரைச் சந்திக்க கடலூர் சென்றிருந்தேன். பேருந்தில் பயணிக்கலாமா என யோசித்து பின்னர் முடிவை மாற்றி இரு சக்கர வாகனத்தில் சென்றேன். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையான பயணம் எனில் இரு சக்கர வாகனம் இலகுவானது என்பது என் அனுபவம். இந்த நெறியை நாடு முழுதும் பயணித்த போது முழுமையாகப் பின்பற்றினேன். இப்போதும் அந்த நெறி மனதில் இருப்பதால் இரவில் இரு சக்கர வாகனப் பயணத்தை இயன்ற அளவு தவிர்க்கிறேன். எனினும் நேற்று மதியம் உணவருந்தி விட்டு கிளம்பினேன். 

2014ம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டு வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆகப் பெரிய சாதனை என்பது நாடெங்கும் நடைபெற்றுள்ள சாலைப் பணிகள். அதனை சாலைகளில் பயணிக்கும் எவராலும் உணர முடியும். ஊரிலிருந்து 2.15க்குப் புறப்பட்டேன். 3.00 மணிக்கு சிதம்பரம் தாண்டியிருந்தேன். 4.00 மணிக்கு கடலூரில் இருந்தேன். நண்பர் 15 நிமிடத்தில் வந்து விடுவதாகக் கூறினார். மஞ்சக்குப்பம் போலீஸ் மைதானத்தில் காத்திருந்தேன். லேசான மழை பெய்தது. நண்பர் மழையினூடாக வந்து சேர்ந்தார். மைதானத்துக்கு எதிரில் ஸ்டேடியத்துடன் கூடிய கால்பந்து மைதானம் இருந்தது. ஸ்டேடியத்தில் சென்று அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். நிறைய விளையாட்டு வீரர்கள் மழை ஓய்வதற்காகக் காத்திருந்தார்கள். அந்த சூழல் இனிதாக இருந்தது. மைதானமும் மழையும் சூழலும் மனதுக்கு இனிமையாக இருந்தது. நான் எப்போதும் புதிய ஊர்களையும் புதிய சூழலையும் விரும்புவேன். 

மழை விட்டதும் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்றோம். கடலில் இறங்கினோம். கடலில் அதிக அளவு மழை பெய்திருக்க வேண்டும். கடல் மிகக் குளிர்ச்சியாக இருந்தது. 

கரையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். 

இரவு 7 மணிக்கு ஊருக்குக் கிளம்பினேன். இரு சக்கர வாகனப் பயணத்துக்கு பகல் ஒளியே சிறந்தது. பகல் ஒளியிலேயே சாலை துலக்கமாக இருக்கும். இரவின் ஒளி அத்தனை போதுமானதல்ல. மெதுவாக வாகனத்தை இயக்கி 9.30 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன். 

இனிய சந்திப்பு. இனிய உரையாடல். இனிய பயணம்.