Monday 5 August 2024

பெரிதினும் பெரிது கேள்


பாரதம் விந்தையான ஒரு நிலம். பாரதத்தின் குடிகள் ஒவ்வொன்றிடமும் அபூர்வமான தன்மைகளும் பிரத்யேகமான குணாதிசயங்களும் இருந்திருக்கின்றன. தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை இறையின் வடிவமாகக் காணுதல் என்பது இங்குள்ள சகல குடிகளுக்குமான வழக்கமாக இருந்திருக்கிறது. எழுதாக் கிளவி இயற்கையை உபாசிக்கும் தன்மை கொண்டது என்பதால் தென்குமரி தொடங்கி வட இமயம் வரை உள்ள பல சமூகங்களால் ஏற்கப்பட்டதாக இருந்திருக்கிறது. எழுதாக் கிளவியைத் தொகுத்த தொகுப்பாளனான கிருஷ்ண துவைபாயனனே உலகின் பெரும் காவியமான மகாபாரதத்தைப் படைத்தவன். அவனது சொற்கள் இந்த நாடெங்கும் பல்வேறு கதைசொல்லிகளால் இசைப்பாடகர்களால் சாமானிய மக்களை சென்றடைந்து கொண்டே இருந்தன. இந்த மண்ணின் ஒவ்வொரு வில்லாளியும் தன்னை அந்தரங்கமாக அர்ஜூனனாக உணர்ந்தான். ஒவ்வொரு பலசாலிக்கும் பீமசேனனே இலட்சிய வடிவமானான். திரௌபதியை நினைத்து காந்தாரியை நினைத்து ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் சிந்தினர். ஞானப் பாதையில் நடக்கும் ஒவ்வொருவருக்கும்ம் கிருஷ்ணன் சொன்ன சொற்கள் கைவிளக்காய் அமைந்து வழிகாட்டின. ஆதிகவி வால்மீகி படைத்த ஆதிகாவியம் இந்த நிலத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்து கொண்டேயிருந்தது. தசரத குமாரர்களின் ஒற்றுமையே சகோதர ஒற்றுமைக்கும் சகோதர உணர்வுக்குமான மேலான சாத்தியமானது. தசரத குமாரனே தனிமனித மேன்மையின் உச்சபட்ச சாத்தியமானான். அவன் அன்பால் நிறைந்தவன் ; மாவீரன் ; தன்னை நம்பி அபயம் என வந்தவர்க்கு அடைக்கலம் எப்போதும் அளிப்பவன். செல்வத்தைப் பெரிதென எண்ணாதவன். தந்தை சொல்லை எப்போதும் சென்னி சூடியவன். இந்த நிலத்தின் ஒவ்வொரு பெண்ணும் தசரத குமாரனை தனது மகவாகவே கண்டாள். அனுமன் ஆற்றலின் அறிவின் ஸ்தூல வடிவமானான். முயற்சிக்கும் பராக்கிரமத்துக்கும் பக்திக்கும் அனுமனை உதாரணமாகக் கொண்டது இந்த நிலம். தன்னைக் கடந்த - தன்னை வென்ற தீர்த்தங்கரர்களின் சரிதங்கள் அருகநெறி மேற்கொண்ட துறவிகளால் நாட்டின் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு மலைக்குடிக்கும் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. அருக நெறி வலியுறுத்தும் பஞ்சசீலங்கள் ஒவ்வொரு சமூகத்தின் கவனத்திலும் அருகத் துறவிகளால் கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. மனிதப் பிறவிகளை வலியிலிருந்தும் துயரிலிருந்தும் மீட்க துக்க நிவாரண மார்க்கம் அருளிய புத்தனின் கருணையும் அருளும் பௌத்தத் துறவிகளால் பாரத நிலமெங்கும் சென்று சேர்ந்தது. எழுதாக் கிளவியும் ஆதிகாவியமும் உலகின் பெரிய காவியமும் சமண் நெறியும் புத்தரின் சொற்களும் சென்று சேர்ந்து உருவான குமுகங்கள் பாரத குமுகங்கள். சொல்லால் உயிர் கொண்ட தேசம் பாரதம். 

கங்கையில் படகு ஓட்டுபவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ராமனையும் சீதையையும் குகனையும் பாடுகிறார்கள். போர்வீரர்கள் அனுமனுக்கு வாழ்த்து கூறி சன்னதம் கொண்டு எழுகிறார்கள். இடையர்கள் ஓயாமல் இளைய யாதவனின் கீர்த்தியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொற்களால் கதைகளால் ஆனது இந்த நிலம்.  கதை கேட்டு கதை பயின்று கதை சொல்லி கதைகளால் வாழ்கின்றனர் இந்த நிலத்தின் மக்கள். 

***

 பாரதத்தின் மொழிகளில் செவ்வியல் மொழிகள் இரண்டு. தமிழும் சமஸ்கிருதமும். தமிழ் நிலத்தில் தமிழ் அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். சமஸ்கிருத அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். தொல்காப்பியக் காலத்திற்குப் பின் தொகுக்கப்பட்டிருக்கும் சங்க இலக்கியத்தில் சமணர்களாலும் பௌத்தர்களாலும் இயற்றப்பட்ட நூல்கள் கணிசமானவை. பிற்காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்கள் பாசுரங்கள் மூலமும் பதிகங்கள் மூலமும் தமிழ் மக்களின் அகமெங்கும் நிறைந்து மொழியின் மாண்புக்கு மேலும் மாண்பு சேர்த்தனர். அவர்களின் காலகட்டத்துக்கு அப்பால் தமிழின் ஆகப் பெரிய காவியம் கம்பனால் பாடப்பட்டது. தமிழ் நிலத்தின் ஆலயங்கள் அனைத்திலும் தேவாரப் பதிகங்களும் ஆழ்வார் பாசுரங்களும் ஒலித்துக் கொண்டேயிருந்தன. பதிகம் பாடவும் பாசுரம் பாடவும் ஆலயம் தோறும் ஊழியர்கள் இருந்தனர். பாடசாலைகளில் மாணவர் பதிகங்களையும் பாசுரங்களையும் பயின்று கொண்டிருந்தனர். 

***

தமிழகம் இஸ்லாமியப் படையெடுப்புக்கு ஆளாகிறது. தமிழகப் பண்பாட்டின் மையச் சரடான ஆலயங்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன. ஆலயங்களை மையமாகக் கொண்ட மொழிக் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இருளில் மூழ்கியிருந்த தமிழகத்தை விஜயநகரப் பேரரசு மீட்கிறது. மீண்டும் ஆலயங்கள் உயிர் பெறுகின்றன. பண்பாட்டு அமைப்புகள் புத்துயிர் கொள்கின்றன. விஜயநகரப் பேரரசும் அதன் தொடர்ச்சியான நாயக்கர் அரசுகளும் பின்னர் வந்த மராத்திய அரசும் ஆலயங்களையும் பண்பாட்டுக் கல்வியையும் பேணுகின்றன. பின்னர் தமிழகம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வருகிறது. தொடர்ந்து நிகழ்ந்த போர்களும் பஞ்சங்களும் மக்கள் வாழ்வை தாழ்நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அந்த காலகட்டத்தில் பதிகங்களும் பாசுரங்களுமே மொழிக்கல்வியையும் பண்பாட்டுக் கல்வியையும் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் இருக்கச் செய்தன. பேரிருளில் சிறு விளக்காக அவை பங்காற்றியிருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தமிழ் மறுமலர்ச்சி காண்கிறது. சங்க இலக்கியங்கள் புத்தக வடிவம் பெறுகின்றன. தமிழ் மொழியை புதிய திசைகளுக்கு திசைதிருப்பிய பாரதி என்ற கவியின் சொற்கள் தமிழ் அகங்களில் நிறையத் தொடங்கின. பாரதம் சுதந்திரம் பெற்று கல்வி பரவலாக மக்களைச் சென்றடையத் துவங்குகிறது. உலகின் செவ்வியல் மொழிகளில் ஒன்றான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழைத் தாய்மொழியாகப் பேசும் கோடிக்கணக்கான மக்கள் எழுத்தறிவு பெறத் தொடங்குகின்றனர். 

***

பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் , மன்னார்குடிக்கு அருகே பரவாக்கோட்டை என்ற கிராமம். அங்கே ஒரு மளிகைக் கடைக்காரர் இருந்தார். அவரது பெயர் ஜெகநாதன். அவரது மனைவி நீலாம்பாள். பரவாக்கோட்டை கிராமத்தில் இருவரும் சேர்ந்து சிறு மளிகைக் கடையொன்றை நிர்வகித்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் தமிழ் எழுத்தறிவு இருந்தது. ஆனால் இருவரும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தவர்கள் இல்லை. தங்கள் சொந்த ஆர்வத்தின் காரணமாக எழுத்துக் கூட்டி படித்து நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்கப் பழகியிருந்தனர். தங்கள் கடையில் மளிகைப் பொருட்களை மடித்துக் கொடுக்க கிலோ கணக்கில் பழைய சஞ்சிகைகளை வாங்கிப் போடுவதுண்டு. ஓய்வாக இருக்கும் நேரத்தில் அந்த சஞ்சிகைகளை இருவரும் வாசிப்பதுண்டு. இந்த வழக்கத்தைக் காண நேர்ந்த அவர்களது குமாரனான சாந்தமூர்த்திக்கும் வாசிக்கும் பழக்கம் உருவாகிறது. தங்கள் மளிகைக்கடையில் பொருட்களை மடிக்க வைத்திருக்கும் சஞ்சிகைகளை வாசிக்கத் தொடங்கும் சாந்தமூர்த்தி உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராகிறார். நூலகத்தில் இருக்கும் நூல்களை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்குகிறார். பரவாக்கோட்டை நூலகம் சிறியது. மன்னார்குடி நூலகம் பெரியது. மன்னார்குடி நூலகத்திலும் உறுப்பினராகி வாசிக்கத் தொடங்குகிறார். நாட்கள் நகர்ந்து ஓடத் தொடங்குகின்றன. சாந்தமூர்த்தியின் வாசிப்பு ஆர்வம் குறையாமல் இருக்கிறது. தனது நாளின் சிறு பகுதியையேனும் வாசிப்புக்கு அளிக்கும் வழக்கம் சாந்தமூர்த்திக்கு பால பருவத்திலிருந்து இருந்திருக்கிறது. அவர் நூல்களை வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள்தொகையின்  எழுத்தறிவு சதவீதம் கூடிக் கொண்டிருந்ததே தவிர மொழியின் சாரமான இலக்கியம் வாசிக்கும் தன்மை தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவாகவே இருந்தது இன்றும் அந்நிலையே இருக்கிறது. ஏழு கோடி பேர் உள்ள தமிழகத்தில் தீவிர இலக்கிய ஆர்வமும் தீவிர இலக்கிய வாசிப்பும் உள்ள வாசகர்களில் எண்ணிக்கை 2000 ஆக இருக்கிறது. அதாவது ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் எனில் ஒருவர் மட்டும் தீவிர இலக்கியம் வாசிக்கக் கூடியவர் என்பது அதன் பொருள். நவீன தமிழ் இலக்கியத்தின் படைப்பாளிகளும் தங்கள் சொந்த ஆர்வத்தின் காரணமாக இலக்கிய மதிப்பீடுகளில் எந்த சமரசமும் இன்றி தீரா ஊக்கத்துடன் செயலாற்றி வந்தனர். 1990ம் ஆண்டு வரை வெகுஜன இலக்கியம் அச்சு ஊடகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. அந்த செல்வாக்கும் பெரும் செல்வாக்கு என்று கூறி விட முடியாது. 1990க்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள்  வந்த பின் தமிழின் வெகுஜன இலக்கிய வாசிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை இருபத்து  நான்கு மணி நேரமும் பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கியது. இந்த பின்னணியில் கேளிக்கை வெள்ளத்தில் சிக்காமல் நூல் வாசிக்கும் ஒருவர் தமிழ்ச் சூழலில் முக்கியமான ஒருவர் ஆகிறார். இவ்வாறான வாசிப்பை தமிழ்க்குடிகளிடம் கொண்டு சேர்க்க நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் எந்த செயல்பாடும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடு ஆகிறது. 

தமிழ் எழுத்தாளரும் காந்தி - இன்று தளத்தின் ஆசிரியருமான சுநீல் கிருஷ்ணன் 2019ம் ஆண்டு 1000 மணி நேர வாசிப்பு சவால் ஒன்றை அறிவிக்கிறார். அதாவது பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஓராண்டில் ஓராயிரம் மணி நேரம் வாசிக்க வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று மணி நேரம் வாசிக்க ஒதுக்க முடியும் என்றால் பங்கேற்பாளர்கள் ஓராண்டில் ஓராயிரம் மணி நேரம் வாசிக்க முடியும். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வாசிப்புக்குக் கொடுக்க முடியும் என்றால் ஆறே மாதத்தில் இலக்கை எட்ட முடியும். இது ஒரு சவால். இந்த சவாலை ஏற்பவர் ஏற்கும் நிலையிலேயே முக்கியமானவர்தான். பலர் வாசிப்பு சவாலுக்குள் வருகிறார்கள். பரவாக்கோட்டை பால வாசகர் சாந்தமூர்த்தியும் வாசிப்பு சவாலுக்குள் வருகிறார். சவாலை ஏற்கும் சாந்தமூர்த்தி இப்போது பாலர் இல்லை. மளிகைக்கடையில் கல்கண்டு வாசித்துக் கொண்டிருந்த சாந்தமூர்த்தி இப்போது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிக் கல்வி முடித்து பள்ளி ஆசிரியராகப் பணி நியமனம் பெற்று பல பள்ளிகளில் பணியாற்றி மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்று விட்டார். மனைவி இரு பெண் குழந்தைகள் என சிறு குடும்பம் சாந்தமூர்த்திக்கு. மகள்கள் இருவரும் கல்வி பயின்று ஒருவர் அமெரிக்காவிலும் இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் பணி புரிகின்றனர். சாந்தமூர்த்திக்கு இப்போது நான்கு பேரக்குழந்தைகள் 

ஐம்பது ஆண்டுகளாக நூல்கள் வாசித்த அனுபவம் துணையிருக்க சாந்தமூர்த்தி ஆயிரம் மணி நேர வாசிப்பு என்ற சவாலை ஏற்கிறார். நிறைய ஐயங்கள். நிறைய சஞ்சலங்கள். தமிழ்ச் சூழலில் இந்த சவால் மிகப் புதிது என்பதால் இதனை எவ்விதம் அணுகுவது என்பது சாந்தமூர்த்திக்கு முழுமையாகப் புலப்படாத நிலை. மற்ற போட்டியாளர்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை. சாந்தமூர்த்தி காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழத் தொடங்குகிறார். காலை 4 மணியிலிருந்து காலை 6 மணி வரையும் பின்னர் 6.30லிருந்து 8.30 வரையும் தினமும் வாசிக்கத் தொடங்குகிறார்.காலைப் பொழுதில் முழுதாக நான்கு மணி நேரம் வாசிக்கக் கிடைத்து விடுகிறது. காலையிலேயே நான்கு மணி நேரம் வாசித்த ஊக்கம் அன்றைய பொழுதின் மீதி இருக்கும் நேரத்தில் கூடுதலாக மூன்று மணியிலிருந்து நான்கு மணி நேரத்தை வாசிப்புக்குக் கொடுக்க வைக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வாசிப்பு சவாலில் துவக்கத்தில் பத்தாம் இடத்தில் இருந்த சாந்தமூர்த்தி முன்னணிக்கு வருகிறார். ஐந்து மாதத்தில் ஆயிரம் மணி நேர வாசிப்பை பூர்த்தி செய்து சவாலை வெல்கிறார் சாந்தமூர்த்தி. 

இந்த வாசிப்பு சவாலில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரது பேத்தி மூன்று வயது அட்வி தாத்தா பாட்டியுடன் இருக்க மன்னார்குடி வருகிறார். பேத்திக்கு வாசிப்பு சவாலில் இருக்கும் ஐந்து மாதமும் மகாபாரதக் கதை சொல்கிறார் சாந்தமூர்த்தி. அட்வியின் கற்பனை மகாபாரதக் கதைகள் மூலம் உருவாகத் தொடங்குகிறது. பாரதத்தின் அரசர்கள், வீரர்கள், முனிவர்கள் ஒவ்வொருவரும் அட்வியின் நினைவின் அடுக்குகளில் வாசம் புரியத் தொடங்குகிறார்கள். தன் மழலை மொழியில் தன் மழலை உச்சரிப்பில் பாரத கதாமாந்தரை கூறத் தொடங்குகிறாள் அட்வி. 

1000 மணி நேர வாசிப்பு சவால் சாந்தமூர்த்தியை ஒரு எழுத்தாளனாக்குகிறது. சாந்தமூர்த்தி தனது வாசிப்பு சவால் அனுபவங்களை ஒரு நூலாக எழுதுகிறார். நூலின் தலைப்பு ‘’ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்’’. இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு வாசகர் ஒரு ஆண்டில் ஓராயிரம் மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்குவது என்பது முக்கியமான ஒரு செயல். முக்கியமான செயல் ஒன்றை ஆற்றியவரின் அனுபவக் குறிப்புகள் என்ற வகையில் இந்த நூலும் முக்கியமானது. 

நூல் : ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால் பக்கம் : 110. விலை : ரூ.100 பதிப்பகம் : நவீன விருட்சம்.   

நூல் வாங்க : https://wp.me/patmC2-YV
***