Wednesday 7 August 2024

திருநாங்கூர் திவ்ய தேசங்கள்

வைணவத்தில், ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஆலயங்களை திவ்ய தேசங்கள் என்று குறிப்பிடுவர். மொத்த வைணவ திவ்ய தேசங்கள் 108. அவற்றில் 106 பூலோகத்தில் உள்ளன. வைகுண்டம், பரமபதம் ஆகிய இரண்டும் விண்ணுலகில் உள்ளன. பூலோகத்தில் உள்ள 106 திவ்ய தேசங்கள் சோழ தேசத்து திவ்ய தேசங்கள் (40) , நடு நாட்டு திவ்ய தேசங்கள் (2), பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் ( 18), மலை நாட்டு திவ்ய தேசங்கள் (13),  தொண்டை நாட்டு திவ்ய தேசங்கள் (22), வட நாட்டு திவ்ய தேசங்கள் (11) என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40ல் 11 திவ்ய தேசங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நாங்கூர் என்ற ஊரைச் சுற்றி அமைந்துள்ளன. நாங்கூரை 11 திவ்ய தேசங்களின் தலம் என்று சொல்வதைப் போல அதன் மிக அருகில் அமைந்திருக்கும் காழிச் சீராம விண்ணகரத்தையும் தலைச்சங்க நாண் மதியத்தையும் சேர்த்து 13 திவ்ய தேசங்கள் என்றும் குறிப்பிடுவது உண்டு. 

சைவத்தில் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் எனக் குறிப்பிடப்படுவது உண்டு. அதே போல , வைணவத்தில் நாங்கூர் நாலாயிரம் என ஒரு சொல் உண்டு. அதாவது நாங்கூரில் நாலாயிரம் அந்தணக் குடிகள் இருந்ததாக அதன் பொருள். இதிலிருந்து வைணவத்தில் நாங்கூர் ஒரு முக்கிய இடம் வகித்ததை அறிய முடியும். வைணவ வரலாற்றில் நாங்கூர் ஒரு முக்கிய இடம் வகித்திருக்கிறது. வைணவத்தின் முக்கியமான பெரியவரான திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலமும் நாங்கூருக்கு மிக அருகில் உள்ளது. 

நாங்கூரில் நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் 11 ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஆலயம், அதனைச் சுற்றி உள்ள வீதிகள், திருக்குளம், சிறு கோபுரங்கள், பிரகாரம் ஆகியவற்றைக் கொண்டவை. பெருமாள் நின்ற திருக்கோலத்திலும் அமர்ந்த திருக்கோலத்திலும் சயனத் திருக்கோலத்திலும் சேவை சாதிக்கும் ஆலயங்கள். இந்த 11 ஆலயங்களில் ஒரு ஆலயம் பத்ரிநாத் ஆலயத்துக்கு சமமானது என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆலயமாக காலையில் சேவிக்கத் தொடங்கினால் மொத்த 11 ஆலயங்களையும் சேவிக்க மாலை ஆகி விடும். நாங்கூரைப் போல இத்தனை நெருக்கமாக வைணவ ஆலயங்கள் அமைந்திருப்பது தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் மட்டுமே. 

தை அமாவாசை அன்று நாங்கூரின் 11 பெருமாளும் கருட வாகனத்தில் மணி மாடக் கோயிலில் காட்சி தருவார்கள். நாங்கூர் கருட சேவை என்னும் இந்த உற்சவம் மிகவும் பிரசித்தியானது. 

இந்த 11 ஆலயங்களுக்கும் மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து பெருமாள்களை வணங்கும் வகையில் நாங்கூரை மையமாகக் கொண்டு சில விஷயங்கள் திட்டமிடப்பட வேண்டும். 

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மந்த்ராலயத்தில் ஒரு நடைமுறை உண்டு. பக்தர்கள் எவரும் அங்கே உள்ள பொதுக் கூடத்தில் தங்க முடியும். பக்தர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்ள பொருள் வைப்பறை(cloak room)யில் பூட்டும் சாவியும் கொண்ட ஒரு தடுப்பு தரப்படும். அதில் தங்கள் உடைமைகளை பக்தர்கள் வைத்துக் கொள்வார்கள். சுகாதாரமான பொது குளியல் அறைகளும், பொது கழிவறைகளும் தங்கும் கூடத்தின் ஒரு பகுதியாக தனியாக இருக்கும். பொருள் வைப்பறை தடுப்பில் மட்டுமே தங்கள் பொருட்களை வைத்திருக்க வேண்டும். பொதுக் கூடத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. இரவு 9 மணிக்கு கூடத்தில் உள்ள அனைவருக்கும் பாயும் தலையணையும் தரப்படும். காலை 5 மணிக்கு அதனைத் திருப்பித் தந்து விட வேண்டும். காலை 5 மணிக்கு மேல் எவரும் பொதுக் கூடத்தில் உறங்கக் கூடாது. காலையில் எழுந்து நீராடி அனைவரும் சுவாமி சன்னிதிக்கு சென்று விடுவார்கள். இந்த ஒட்டு மொத்த செயல்பாடுகளுக்கும் எந்த கட்டணமும் கிடையாது. ஒருவர் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். ஆலயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை அன்னதானம் உண்டு. காலை 11.30 மணிக்கு ஒருவேளை. இரவு 7 மணிக்கு இன்னொரு வேளை.  மந்த்ராலயம் தவிர ஆந்திரா , கர்நாடகாவில் பல ஆலயங்களில் இந்த விதமான வழிமுறை உண்டு. இது மிகவும் வெற்றிகரமான அனைவருக்கும் பயனளிக்கும் வழிமுறை. 

நாங்கூரில் இவ்விதமான நடைமுறை ஒன்றை செயல்படுத்திப் பார்க்கலாம். நாடெங்கும் இருக்கும் விஷ்ணு பக்தர்கள் நாங்கூர் வர வாய்ப்பு உருவாகும். நாங்கூரின் 11 ஆலயங்களுக்கும் தினமும் வணங்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடும். நாங்கூருக்கு அருகே புள்ளிருக்கு வேளூர் எனப்படும் ‘’வைத்தீஸ்வரன் கோவில்’’ அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாங்கூர் பெருமாள்களை வணங்க ஒரு வாய்ப்பு உருவாகும். இன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து திருக்கடவூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சஷ்டியப்த பூர்த்தி , பீம ரத சாந்தி ஆகிய சடங்குகளை செய்து கொள்வதற்கு வருகை புரிகிறார்கள். அந்த திருக்கடவூர் ஆலயமும் நாங்கூருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் தலமே. நாங்கூர் இப்போது நான்கு வழிச் சாலையாக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு கிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். எனவே சாலை இணைப்பு சிறப்பாக உள்ளது. 

மத்திய மாநில அரசுகளின் சுற்றுலாத் துறைகள், மத்திய மாநில அரசுகளின் பண்பாட்டுத் துறைகள், வைணவ அமைப்புகள் இது குறித்து சிந்தித்தால் நலம் பயக்கும்.