Friday 2 August 2024

காணுகின்ற காட்சியாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்

 தமிழறிஞர் ரா. பத்மநாபன் அவர்கள் இயற்றிய ‘’தமிழ்ச் செய்யுள் வடிவில் பகவத் கீதை ‘’ நூலுக்கு தமிழறிஞரும் எழுத்தாளருமான திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய பணிந்துரையை இன்று வாசித்தேன். நாஞ்சில் சிறந்த கலைஞர். சிறந்த ஆசிரியர். அவர் எழுதியுள்ள சிறு குறிப்பான இந்த பணிந்துரையிலேயே அவரது அறிவின் விரிவையும் நுணுக்கமான கலைப் பார்வையையும் உணர முடிகிறது. 

திராவிட இயக்கத்தால் தமிழின் ஆகப் பெரிய கவிஞனும் உலகின் ஆகப் பெரிய கவிஞர்களில் ஒருவனுமான கம்பன் ஊருக்கு ஊர் மேடைக்கு மேடை தாக்குதலுக்கு ஆளான போது கம்பனின் சிறப்பை கம்பன் கவியின் மாண்பை தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டன கம்பன் கழகங்கள். நாஞ்சில் மும்பையில் இருந்த போது அங்கு நிறுவப்பட்டிருந்த தமிழ்ச் சங்கம் கம்பன் விழாக்களை மும்பையில் நடத்துகிறது. அதனை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் அறிஞர் ராய. சொ அவர்களின் மாணவரான ரா. பத்மநாபன். கம்பன் கழகம் நடத்தும் பட்டிமன்றங்களில் இளைஞரான நாஞ்சில் உரையாற்றுகிறார். அப்போது ரா. ப அவர்களிடம் கம்பனை முழுமையாகப் பாடம் கேட்கும் வாய்ப்பு நாஞ்சிலுக்குக் கிடைக்கிறது. 

தமிழ்ச் சங்க கட்டிடத்தில் கம்பராமாயண பாடம் நடக்கிறது. வகுப்பில் மொத்தம் 17 மாணவர்கள். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நாஞ்சில் மட்டும் ஒரே மாணவர் என்னும் நிலையை வகுப்பு அடைகிறது. ஒரு மாணவர் என்றாலும் ஊக்கம் குன்றாமல் கம்பனை நாஞ்சிலுக்குப் புகட்டுகிறார் ரா. ப. தமிழ்ச் சங்க கட்டிடம் இருக்கும் இடம் இருவருக்கும் தூரம் என்பதால் நாஞ்சிலை தனது வீட்டுக்கு வரச் சொல்லி பாடம் சொல்கிறார் ரா. ப. நான்கடி அகலம் ஆறடி உயரம் கொண்ட முடிசூடிய ராமன் சித்திரம் முன்பு தினமும் பாடம் நடக்கிறது. அந்த காட்சியை தம் உயிர்ப்பான எழுத்தால் உயிர்ப்புடன் தீட்டிக் காட்டுகிறார் நாஞ்சில். 

சிறு குறிப்பாயிருக்கும் ஒரு பணிந்துரையின் பரப்புக்குள் இலட்சியவாதம் கொண்ட ஆசிரியர் ஒருவரின் உயிர்ச்சித்திரம், மும்பையின் நில அமைப்பு விபரங்கள், மும்பை மற்றும் தமிழக உணவுகள் என பல விஷயங்களை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில். 

நாஞ்சிலின் கம்பன் மீதான பற்று யாவரும் அறிந்ததே. இந்த பணிந்துரை அவருக்கு தன் ஆசிரியர் மீதிருக்கும் பற்றையும் இணைத்துக் காட்டுகிறது. 

பாரதி கலைமகளை ‘’காணுகின்ற காட்சியாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்’’ என்கின்றான். அறிவின் இயல்பு அது.