Friday, 11 October 2024

மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்


நாடு முழுதும் சுற்றித் திரிந்த ஒரு கலைஞன் அவன். படைப்பூக்கம் பிரவாகிக்கும் கலை உள்ளம் கொண்டவன். நாட்டின் அனைத்து புண்ணியத் தலங்களுக்கும் சென்றவன். நாட்டின் அனைத்து புண்ணிய நதிகளிலும் தீர்த்தமாடியவன். மகாத்மா காந்தியை தன் அகத்தில் வழிகாட்டியாக ஏற்றவன். ஒரு பத்திரிக்கையில் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக எழுதியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான். சிறையை அவன் அகம் உலகின் ஒரு பகுதி என்றே பார்க்கிறது. சிறையில் இருக்கும் போது மனதுடன் ஆழமாகப் பிணைத்துக் கொண்டால் உலகம் கூட ஒரு பெரிய சிறை தானே என்று நினைக்கிறான்.  சிறையில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் இருக்கிறார்கள். சிறிய குற்றங்களைப் புரிந்தவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் அவனிடம் நட்பு பாராட்டுகிறார்கள். சிறையில் இருக்கும் பெருமரங்களுடனும் அதில் வசிக்கும் அணில் பறவைகளுடனும் அவனுக்கு நட்பு இருக்கிறது. காவலர்களும் அதிகாரிகளும் அவனுக்கு நண்பர்கள் ஆகிறார்கள். சிறையில் கைதிகளைச் சேர்த்துக் கொண்டு ஒரு காய்கறித் தோட்டம் அமைக்கிறான். மலர்த் தோட்டத்தை சிறைக்குள் உருவாக்குகிறான். சிறையின் பெரிய மதிலுக்கு அப்புறத்தில் பெண்கள் சிறை இருக்கிறது. பெரு மதில் இருப்பதனால் இந்த பக்கத்தில் இருப்பவர்களும் அந்த பக்கத்தில் இருப்பவர்களும் பார்த்துக் கொள்ள முடியாது. எனினும் அவனுக்கு அந்த பக்கம் இருக்கும் ஒரு பெண்ணுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது. சில நாட்கள் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். தனக்கு ஒரு ரோஜாச் செடியை அளிக்குமாறு அவள் கேட்கிறாள். தனது தோட்டத்திலிருந்து ஒரு ரோஜா பதியனை எடுத்து அதன் வேர்ப்பகுதியை ஈரமான துணியால் சுற்றி மதிலைத் தாண்டி எறிகிறான். அதனை நட்டு வைக்கிறாள் அந்த பெண். இருவரும் சிறையின் மருத்துவமனையில் அடுத்த ஓரிரு நாட்களில் சந்தித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகிறது. இருவரும் சந்தித்தார்களா என்பதே கதையின் உச்சம்.