சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஒன்றில் மெக்காலேவை சிறப்பிக்கும் வசனங்கள் பேசப்பட்டிருக்கின்றன. மெக்காலே அத்தகைய சிறப்புகளுக்கு உரியவரா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
இந்திய நிலத்தில் பயணிக்கும் எவருக்கும் எளிதில் புரியக் கூடிய விஷயம் இந்தியா ஒரு விவசாய நாடு என்பது. நிகழ்காலத்தில் கூட இந்தியா விவசாய நாடு என்பதிலிருந்து கடந்த 3000 ஆண்டு காலத்திலும் இந்தியா விவசாய நாடாகவே இருந்திருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் அடைய வேண்டிய கல்வி என்பது பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கல்வியாக மட்டுமே இருந்திருக்கும் அல்லவா? ஊரில் பருவமழை பொழியும் காலங்கள் எவை ? விதை நேர்த்தி செய்வது எவ்வாறு? பயிர்களின் கால அளவுகள் என்ன? அறுவடை செய்யும் முறைகள் யாவை என்பதை பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் பாரம்பர்ய அறிவாக விவசாயிகள் கொண்டிருந்தனர். இந்தியாவின் விவசாய சமூகங்கள் கொண்டிருந்த இந்த பாரம்பர்ய கல்வியும் அதன் 3000 ஆண்டு தொடர்ச்சியுமே மகத்தான விஷயங்கள்.
சமூகவியலும் பொருளியலும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. பொருளியல் நிலையே சமூகங்களின் வாழ்நிலையை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கிராமங்கள் முழுமையான பொருளியல் அலகாக இருந்திருக்கின்றன. ஒரு கிராமத்தின் உற்பத்தி என்பது உணவு தானியங்களே. உற்பத்தி ஆகும் தானியங்கள் அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்குள்ளேயே பங்கிடப்பட்டன. அதன் இன்னொரு பக்கமாக, ஒரு கிராமத்திற்குள் பகிர்ந்து கொள்ளும் அளவிலேயே அந்த கிராமத்தின் உற்பத்தி இருந்திருக்கிறது. இந்த பொருளியல் அடிப்படையை புரிந்து கொண்டால் மட்டுமே இந்திய சமூகவியலைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு கிராமம் என்பது 1000 ஏக்கர் நிலம் கொண்டது. அதில் 500 ஏக்கர் விவசாய நிலமாக இருக்கும். ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு 2000 கிலோ நெல் கிடைப்பதாகக் கொள்ளமுடியும். எனில் 500 ஏக்கருக்கு 1,00,000 கிலோ உற்பத்தி ஆகும். ஒரு ஆண்டுக்கு இரண்டு போகங்கள் பயிரானால் 2,00,000 கிலோ உற்பத்தி ஆகும். கிராமத்தின் மக்கள் தொகை 2000. அவ்வாறெனில் அங்கே 400 குடும்பங்கள் இருப்பார்கள். இந்த 400 குடும்பங்களுக்கும் இடையே இந்த 2,00,000 கிலோ நெல்லே பரிவர்த்தனை ஆகும். இப்போது இங்கே ஒரு கேள்வி எழும். இந்த உற்பத்தி சமமாகப் பங்கிடப்பட்டிருக்குமா என்ற கேள்வி. இந்த 2000 மக்கள் தொகையில் நில உரிமையாளர்கள் இருப்பார்கள். நிலத்தில் பணி புரிபவர்கள் இருப்பார்கள். நிலத்தை உரிமை கொண்டவர்களுக்கு அதிகமாகவும் நிலத்தில் பணி புரிபவர்களுக்கு குறைவாகவுமே பங்கீடு இருந்திருக்கும். அதனை உச்சபட்ச பாரபட்சம் என்று கூற முடியாது. ஏனென்றால் கிராமத்தில் உற்பத்தி என்பது தானியம். அந்த தானியத்தை காலவரையறையின்றி சேமித்து வைக்க முடியாது. காலவரையறையின்றி சேமித்து வைக்க அது தங்கம் போன்ற உலோகம் இல்லை. விவசாயப் பணியாளர்களுக்கு ஊதியம் தானியமாகவே வழங்கப்பட்டது. இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டும். விவசாயத்தில் விவசாயப் பணியாளரின் ஒத்துழைப்பு என்பது குறைந்தபட்சமாகவேனும் தேவை. நில உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் உடைமையாளர்கள் என்னும் வகையில் தனித்தனியானவர்களே. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலத்தில் விளைச்சல் அதிகம் கிடைக்க பணியாளர்களின் உழைப்பை சார்ந்தே இருப்பவர். அந்த சார்பு முழுமையானது இல்லை எனினும் பகுதி அளவிலாவது சார்ந்தே இருந்தாக வேண்டும். இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் நிலத்தில் பணி புரியும் விவசாயத் தொழிலாளர்கள் 300 பேர் இருப்பார்கள் என்றால் அந்த கிராமத்தின் 1000 ஏக்கர் நிலத்தையும் அந்த 300 பேரைக் கொண்டே விவசாயம் செய்ய முடியும். நிலத்தை உழுதல்,நீர் பாய்ச்சுதல், விதைத்தல், களை எடுத்தல், அறுவடை என அனைத்து பணிகளையும் இந்த 300 பேரே 1000 ஏக்கருக்கும் செய்ய வேண்டும். பயிர் என்பது பருவத்தே செய்ய வேண்டியது. பருவம் தப்பினால் வேளாண்மையில் நட்டம் வந்து விடும். எனவே ஒரு கிராமத்தில் விவசாயத்தில் அதிகபட்சமாக எத்தனை உழைப்பு சாத்தியமோ அந்த உழைப்பைக் கொண்டே ஒரு கிராமத்தின் பொருளியல் தீர்மானமாகும். அதன் சமூக நிலையும் தீர்மானமாகும். விவசாயத் தொழிலாளர்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டிருப்பார்களா? உடைமை என்னும் விஷயத்தில் மனிதர்கள் எப்போதும் பாரபட்சமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இந்திய கிராமம் என்னும் அமைப்பில் அந்த பாரபட்சம் குறைவாக இருந்திருக்கும் என்று கூற முடியும். சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் தலைவரான ஜோசஃப் ஸ்டாலின் ஆட்சியாளராக இருந்த போது 70 லட்சம் விவசாயிகள் கொன்று அழிக்கப்பட்டார்கள் என்பதையும் ஸ்டாலின் அந்த படுகொலைச் சாவுகள் குறித்து ‘’ஒருவர் இறந்தால் அது துக்கம் ; ஒரு கோடி பேர் இறந்தால் அது புள்ளிவிபரம் எனக் கூறியதையும் இந்த விஷயத்துடன் சேர்த்து யோசிக்கலாம்.
உலக வரலாற்றை கவனிப்பவர்களால் ஒரு விஷயத்தை அவதானிக்க முடியும். அதாவது சுரண்டல் என்பது தொழில் மயமான சமூகத்திலேயே மிகப் பெரிய அளவில் மிக அதிக அளவில் நிகழ முடியும். தொழில் மயமான சமூகம் ஒரு மலை எனில் விவசாய சமூகம் என்பது சிறு கூழாங்கல்.
சமூகக் கட்ட்மானத்தை பொருளியல் கட்டுமானமாகப் பார்க்கும் பார்வை மார்க்ஸுக்கு இருந்தது. நான் மேலே கூறியிருக்கும் விஷயங்கள் இந்திய கிராமத்தை பொருளியல் கட்டுமானமாகப் பார்ப்பதிலிருந்து விளைந்தவை என்பதை எவரும் அறிய முடியும்.
உலக சமூகங்களைப் பற்றி இப்போது பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. அவை இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கடந்த 2000 ஆண்டுகளாக உலகின் ஜி.டி.பி க்கு நாடுகளின் பங்களிப்பு எத்தனை சதவீதம் என அளவிடப்பட்டுள்ளது. பொது யுகம் 1800 வரை உலக ஜி.டி.பி யில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு 90 சதவீதமாக இருந்திருக்கிறது.
தரம்பால் என்ற காந்திய அறிஞர் ‘’அழகிய மரம்’’ ( The beautiful tree) என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்திய பாரம்பர்ய கல்வி முறையின் மகத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல் அது. பிரிட்டிஷார் எவ்விதம் இந்தியக் கல்வி முறையை அழித்தனர் என்பதை பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டே விளக்கி வெளிச்சம் போட்டு எடுத்துச் சொன்ன நூல் அது. இந்திய பாரம்பர்யக் கல்வி முறையை அழகிய மரம் என்று கூறியவர் மகாத்மா காந்தி. தனது நூலுக்கு அதனையே பெயராக சூட்டினார் தரம்பால்.