அமைப்பாளர் தனது நண்பர் ஒருவரைச் சந்திக்க சென்னை செல்கிறார். சென்னை செல்லத் திட்டமிடுவது என்பது அவருக்கு ஒரு மலையேற்றம் போல. நாளை காலை 7.40க்கு ரயில். மதியம் 1.10க்கு எழும்பூர் சென்றடையும். நண்பரின் அலுவலகத்துக்கு 2 மணிக்கு சென்று சேரலாம். நண்பருடன் மதிய உணவு. பின்னர் ஒரு மணி நேரம் உரையாடல். மாலை 5 மணிக்கு எழும்பூரில் ஊர் வழியே செல்லும் ரயில் இருக்கிறது. அதைப் பிடித்தால் இரவு 10 மணிக்கு வீடு திரும்பி விடலாம்.
நண்பர் மாநில அரசின் உயர் அதிகாரி. நிர்வாகத் திறனும் கூர்மதியும் கொண்டவர். அரசு அதிகாரியாயினும் இரக்கம் மிக்க இதயம் கொண்டவர். சென்ற ஆண்டு தீபாவளியை ஒட்டி அவரை சந்திக்க நேர்ந்தது. இந்த ஆண்டும் தீபாவளியை ஒட்டி சந்தித்தால் அதனை ஒரு மரபாக ஆக்கலாம் என்பது அமைப்பாளரின் எண்ணம்.
அவரது குழந்தைக்கு சென்ற ஆண்டு சில நூல்களைப் பரிசளித்தார் அமைப்பாளர். பரிசு என்றாலே அமைப்பாளருக்கு நூல்கள் தான். நூல்களைத் தவிர வேறு என்ன பரிசளிக்கலாம் என யோசித்து யோசித்துப் பார்த்து நூல்களே சிறந்த பரிசு என்ற முடிவுக்கே ஒவ்வொரு தடவையும் வருவார். இம்முறை வேறு முடிவுக்கு வரலாமா என்று யோசிக்கிறார். என்ன முடிவு எடுத்தார் என்பது நாளைக்குத் தான் தெரியும்.