சிதை எரியும் மயானம்
தீ உண்டு கொண்டிருக்கிறது
ஆயிரம் கோடி எண்ணங்களை
இச்சைகள்
விழைவுகள்
வேட்கைகள்
மெல்லத் துவங்கி
உறுதியாக நிலை கொண்டு
சப்தத்துடன் களிநடம் புரிந்து
மகிழ்ந்து பரவி
நீறு பூத்து
இருக்கிறது நெருப்பு
சிதை நீறை
மேனியெங்கும் பூசி
உறுதியாக நடக்கிறான்
கபாலீசன்
அவன் பாதங்கள் காய்த்திருக்கின்றன
அவன் கால்கள் தீரா உறுதி கொண்டிருக்கின்றன
அவன் தோள்களில் பரவியிருக்கிறது
விஷமான விஷம் கொண்ட கரு நாகம்
உடுக்கடித்துக் கொண்டே முன்னே செல்கிறான்
நாதத்தில் உருவாகின்றன
லட்சோப லட்சம் வாழ்க்கைகள்
நாதத்துடன் இணைந்து கொள்கின்றன
லட்சோப லட்சம் கூக்குரல்கள்
கதறல்கள்
அரற்றல்கள்
கண்ணீர்
பிரார்த்தனை
அவன் பாதச் சுவட்டின்
மண்ணை
பூசிக் கொள்கிறான்
பால் மணம் மாறா
நாவில் மொழி படியா
பாலகன் ஒருவன்