நேற்று நானும் நண்பனும் நான்கு விஷ்ணு ஆலயங்களை சேவித்தோம். திருக்குடந்தை சார்ங்கபாணி, குடந்தை ராம சுவாமி, நாச்சியார் கோவில் ஸ்ரீநிவாஸன், திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலன்.
உலகம் சுழல சுழல நம் அனுபவங்கள் மேலும் நிறைகின்றன. சுகம் துக்கம் இன்பம் துன்பம் என பலவிதமான உணர்வுகளுக்கு ஆட்படுகிறோம். பலமுறை தரிசித்த ஆலயங்கள் என்றாலும் நேற்றைய தரிசனம் நெஞ்சத்தை உலுக்குவதாய் இருந்தது.
கிடந்த திருக்கோலத்தில் சார்ங்கபாணி பெருமாள். கருவறை நிறைய சயனித்திருக்கிறார். சுவாமியின் முகம் மூன்று வயது குழந்தையின் முகம் போல இருக்கிறது. ஒரு குழந்தை உறங்குவதைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறான் மாயவன். உறங்கும் குழந்தையின் பாதங்களைத் தொடுவது போல அவனது பாதங்களை அகம் தொட்டது. அவன் கடவுள் இல்லை ; குழந்தை. குழந்தை மட்டுமே. நாராயணா நாராயணா நாராயணா என அவன் நாமத்தை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். மனிதர்க்கு இறைமையன்றி வேறு துணை இல்லை. இதனை உணராத மனிதர் இல்லை. எனினும் அதனை முற்றாக உணர்ந்தவர்கள் வெகு சிலரே.
குடந்தை ராமசுவாமி ஆலயம் சென்றோம். ஸ்ரீராமன் பட்டாபிராமனாக காட்சி தரும் தலம். அரசியாக சீதை வீற்றிருக்க பட்டாபிராமன் அவளருகே அரசனாக அருள் புரிகிறான். ஸ்ரீராமனின் மூன்று தம்பிமார்களும் கருவறையில் இருக்கிறார்கள். அனுமன் ஒரு கையில் வீணையுடனும் இன்னொரு கையில் இராமாயணப் புத்தகத்துடனும் இராமனை கண்டு களித்தவாறு கருவறையில் இருக்கிறார்.
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி
ராமசுவாமி கோவிலில் எனக்கு இந்த பாடல் நினைவுக்கு வந்தது. அயோத்தி மன்னனின் அரியணையை கருநாடகப் பகுதியான கிஷ்கிந்தையின் அமைச்சனான அனுமன் தாங்குகிறான். அதன் இளவரசான அங்கதன் இந்த அயோத்தி அரசிற்கு எப்போதும் கிஷ்கிந்தை துணை நிற்கும் என்பதற்கு அடையாளமாக உடைவாள் ஏந்துகிறான். திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் கிரீடத்தை எடுத்துக் கொடுக்க வசிஷ்டர் ஸ்ரீராமனுக்கு கிரீடம் சூட்டுகிறான். மகத்தான கவி உள்ளம் கண்ட மகத்தான கற்பனை.
நாச்சியார் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் சேவித்தோம். பட்சிராஜனைக் கண்டோம். பட்சிகள் எப்போதும் இனியவை. அகத்தை மகிழச் செய்பவை. பட்சிராஜன் பெருமாளின் வாகனம். பெருமாள் எப்போதும் யோக நித்திரையில் சயனித்திருப்பவர். அவரை பக்தனுக்காக பக்தனிடம் கொண்டு சேர்க்கும் வாகனமாக இருக்கிறார் கருடன். கருடா உன் பராக்கிரமத்தின் முன்னால் எங்கள் குறைகள் சுவடின்றி அழியட்டும் என வேண்டிக் கொண்டேன். நின்ற திருக்கோலத்தில் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார் ஸ்ரீநிவாசன்.
திருக்கண்ணமங்கை சென்றோம். அங்கே இருக்கும் திருக்குளம் தமிழகத்திலேயே பெரிய திருக்குளங்களில் ஒன்று. பக்தவத்சல பெருமாளை சேவித்தோம். அந்த ஆலயத்தின் தாயார் குறித்து வடலூர் வள்ளலார் ஒரு பாடல் இயற்றியிருக்கிறார்.