Saturday, 5 October 2024

தோழன்

பள்ளி நாட்களிலிருந்து எனது தோழனாக இருப்பவர் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பள்ளி நாட்களில் எங்கள் பகுதியில் நூல் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் அவர். ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், மகாபாரதம் ஆகிய நூல்களை அவர் தனது வீட்டின் மாடிப்படியில் அமர்ந்து வாசிக்கும் காட்சி எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் உத்யோக நிமித்தமாக சென்னை சென்று விட்டார்.  தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் ஓரிரு தினங்கள் ஊருக்கு வந்து விட்டு சென்னை சென்று விடுவார் என்பதால் கடந்த 20 ஆண்டுகளாக சாவகாசமாக உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களில் அடிக்கடி தோழனை எங்கள் பகுதியில் காண முடிந்தது. ஒருநாள் விசாரித்த போது ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதால் ஒரு மாத இடைவெளி கிடைத்ததால் சொந்த ஊரில் சில நாட்கள் இருக்கலாம் என இங்கே இருப்பதாகக் கூறினார். கடந்த வாரத்தில் இரண்டு மூன்று முறை அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். தருமபுரம் வரை இரண்டு முறை வாக்கிங் சென்றோம். பள்ளி நாட்களின் பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது இருவருக்கும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருவருமே எங்களுக்கு 20 வயது குறைந்து விட்டதாக எண்ணினோம். இன்று இருவரும் தரங்கம்பாடி கடற்கரைக்குச் சென்று வந்தோம். வழி நெடுக வாசிப்பு குறித்தும் வரலாறு குறித்தும் பேசிக் கொண்டோம். இன்னும் இரண்டு வாரம் அவர் இங்கே இருப்பார் என்பதால் மேலும் பல முறை சந்திக்க முடியும் என்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.