எனது நண்பரின் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் சமீபத்தில் எனக்கு அறிமுகமானார். அவரது சொந்த ஊர் கீரனூர். திருவாரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் வடக்கே வந்தால் மயிலாடுதுறை மாவட்ட எல்லை வந்து விடும். அவரது ஊரின் சிவன் கோவில் குறித்து என்னிடம் சொன்னார். பழைய தஞ்சாவூர் மாவட்டம் என்பது எப்போதுமே வியப்பளிக்கக் கூடியது. நாம் வாழும் பகுதிக்கு மிக அருகில் ஒரு நாம் அதுவரை கேள்விப்படாத ஓர் ஆலயம் இருக்கும். அந்த ஆலயம் பேராலயமாகவும் இருக்கும். இங்கே தொன்மையான எல்லா ஆலயங்களும் பேராலயங்களே.
+1 படித்த போது கீரனூரிலிருந்து ஒரு மாணவன் எங்கள் வகுப்பின் சக மாணவனாக இருந்தான். அவனுடன் நல்ல நட்பு இருந்தது. அவன் கீரனூர் குறித்தும் அங்கே இருக்கும் ஆலயங்கள் குறித்தும் கூறியது நினைவுக்கு வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் அவனைப் பார்த்தது. அதன் பின்னர் அவனைப் பார்க்கவில்லை.
நேற்று மாலை கீரனூர் ஆலயம் சென்றிருந்தேன். ஆலயம் , ஆலயக் குளம் இரண்டுமே பெரிதாக இருந்தன. நவராத்திரி காலம் ஆகையால் ஆகையால் கோவிலில் கொலு வைத்திருந்தனர். மாலை வழிபாட்டுக்கு கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் குழுமியிருந்தனர். கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை. ஆலயயத்தின் கருவறை தீபச் சுடரில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சுடரொளியில் ஆலயம் கண்டது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்ற உணர்வை அளித்தது.
கொலுவின் ஒரு பகுதியாக ஓர் இளம்பெண்ணின் வாய்ப்பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பெண் மிகச் சிறப்பாகப் பாடினார். அவரது குரல் மிக உணர்ச்சிகரமாக இருந்தது. தனது பாடல்கள் மூலம் அவ்வாலயத்தில் கலைமகளின் இருப்பை அனைவரையும் உணர வைத்தார். ‘’மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்’’ என்ற பாரதியின் வரி என் நினைவில் எழுந்தது. கலை நம் உள்ளத்தைத் தொடும் போது நமது மனமும் உணர்வுகளும் நெகிழ்கின்றன. நாம் நம் மீது மானுடம் மீது மேலும் நம்பிக்கை கொள்கிறோம். அத்தகைய தருணங்கள் அரியவை ; தூயவை.
அப்பெண் பாடி முடித்த பின் சிறிது நேரம் காத்திருந்து அவரிடம் சென்று வணங்கி கச்சேரி சிறப்பாக இருந்தது என்று சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த பெண் கல்லூரிக் கல்வியை முடித்திருப்பார் என்று எண்ணினேன். ஆனால் அவர் +1 படிப்பதாகக் கூறினார். அவரது இசை அவரது ஆளுமையை உயர்த்தியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன்.