எனது தோழன் பள்ளி நாட்களிலிருந்து கிரிக்கெட் விளையாடக் கூடியவர். பத்து வயதிலிருந்து கிரிக்கெட் மட்டையும் கையுமாக இருப்பார். கல்லூரி கிரிக்கெட் அணியிலும் இருந்தார். பல ஊர்களுக்குச் சென்று விளையாடக் கூடியவர்.
அவரிடம் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஏதேனும் கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டு உபகரணங்களான கால்பந்து , வாலிபால், பேட்மிட்டன், ரிங் பால் ஆகியவற்றை வழங்குவதற்கு உள்ள திட்டமிடல் குறித்து சொன்னேன். அவர் விளையாட்டு வீரர் என்பதால் இந்த விஷயத்தில் அவர் கூறும் யோசனைகள் நம் திட்டத்தை செழுமையாக்க பயன்படும் என எண்ணினேன்.
அவர் ஒரு அவதானத்தைக் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் குழந்தைகளின் பெற்றோர் விளையாட்டு படிப்பில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வத்தைக் குறைக்கக் கூடும் என எண்ணி குழந்தைகளை விளையாட அனுப்ப மாட்டார்கள். ஆனால் இப்போது கிராமம் நகரம் என பேதம் இல்லாமல் எல்லா குழந்தைகளும் அலைபேசியில் உள்ள ‘’கேம்ஸ்’’க்கு அடிமையாகி இருக்கின்றனர். எல்லா குடும்பங்களுக்கும் அலைபேசி சென்று சேர்ந்து விட்டது. எனவே எல்லா குடும்ப குழந்தைகளுக்கும் இந்த அடிமைத்தனம் வந்து விட்டது என்று சொன்னார்.
எதிர்மறையான சூழ்நிலை இருப்பது நாம் ஆற்ற வேண்டிய நற்செயலை நிகழ்த்தியே ஆக வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது.