Wednesday, 27 November 2024

தெள்ளிய நினைவிருக்கையில் - ஃபாலி நாரிமன் சுயசரிதம்

1990களின் தமிழ் நாளிதழ் வாசகர்களுக்கு ஃபாலி நாரிமன், சோலி சொரப்ஜி ஆகிய பெயர்கள் மிகவும் பரிச்சயமானதாக இருக்கும். அந்த காலகட்டத்தில் மத்திய அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கவில்லை. 1989ல் வி.பி.சிங் தலைமையிலான அரசு, பின்னர் சந்திரசேகர் தலைமையிலான அரசு, 1991ல் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு என எந்த அரசும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி புரியவில்லை. எனவே அரசாங்கங்கள் அவ்வப்போது கவிழ்ந்து கொண்டிருந்தன. மாநில அரசுகள் சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்தி அவ்வப்போது கலைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும் போது ஃபாலி நாரிமன், சோலி சொரப்ஜி ஆகியோர் கூறும் அபிப்ராயங்கள் தமிழ் நாளிதழ்களில் வெளியாகும்.  பி.டி.ஐ செய்தி நிறுவனம் வசம் இருக்கும் நாரிமன், சொரப்ஜி அபிப்ராயங்கள் குறித்த செய்தியை தமிழ் நாளிதழ்கள் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கலாம்.  

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் தனது நுண்ணிய சட்ட அறிவுக்கு பேர் போனவர். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்திருக்கிறார். அவர் தனது சுயசரிதையை ''Before memory fades'' என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அந்த நூலை கடந்த ஒரு வாரமாக வாசித்துக் கொண்டிருந்தேன். 

மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட பார்சி சமூகத்தைச் சேர்ந்தவரான ஃபாலி நாரிமனின் தந்தை உத்யோக நிமித்தம் பர்மாவில் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார். ஃபாலியின் குழந்தைப் பருவம் பர்மாவில் கழிகிறது. அப்போது இரண்டாம் உலகப் போர் காலகட்டம். ஜப்பான் பர்மாவைக் கைப்பற்றுகிறது. அதனால் ஃபாலி நாரிமனின் குடும்பம் எல்லா இந்தியக் குடும்பங்களையும் போல பல நாட்கள் காட்டுப்பாதையில் நடந்து இந்தியா வந்து சேர்கிறார்கள். மும்பை வந்து சேரும் நாரிமன் தனது பட்டப்படிப்பை முடித்து மும்பையில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்குகிறார். 

ஒரு குதிரை எவ்விதமான திறன் கொண்டது அது எந்த லாயத்தில் இருந்தது என்பதைக் கொண்டும் ஒரு வழக்கறிஞர் எத்தனை திறமை கொண்டவர் என்பதை அவர் எந்த குழாமில் பயிற்சி பெற்றார் என்பதைக் கொண்டும் கூறிட முடியும் என்கிறார் நாரிமன். பம்பாய் உயர் நீதிமன்றமே நாரிமன் பயிற்சி பெற்று உருவான குழாம். 

பம்பாய் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், அவர் பணி புரிந்த போது இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என நீதிமன்றத்துடன் தொடர்புடைய பலர் குறித்து விரிவாக பதிவு செய்கிறார் நாரிமன். நீதிமன்றத்தில் தன் தரப்பை எவ்விதம் முன்வைப்பது என இளம் வழக்கறிஞர்களுக்கு நடைமுறை சார்ந்த பல அறிவுரைகளை வழங்குகிறார் நாரிமன். அந்த அறிவுரைகளை நாம் வாசிக்கையில் நமக்கு வியப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. 

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அதிகபட்சம் 3000 பேர் இருக்கலாம். மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் அது மிகச் சிறு எண்ணிக்கை. ஆனால் அவர்களே மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பல விஷயங்களை சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வருகிறார்கள். சட்டம் குறித்த அவர்களின் எண்ணங்களும் கூட அந்த சிறு குழுவின் எல்லைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. ஃபாலி நாரிமன் இந்திரா காந்தி சர்க்காரால் மத்திய அரசின் துணை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். மிக இளம் வயதில் அந்த பொறுப்புக்கு வருகிறார் நாரிமன். இந்திரா காந்தியின் பிரதமர் இல்லத்துக்கு பக்கத்து வீடு நாரிமனுக்கு தில்லியில் ஒதுக்கப்படுகிறது. மும்பையிலிருந்து தில்லிக்கு இடம் பெயர்கிறார் நாரிமன். இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்த மறுதினம் தனது பதவியை ராஜினாமா செய்கிறார் நாரிமன். அதிரடியான துணிச்சலான முடிவு. ஒட்டு மொத்த நீதித்துறையும் செயலிழந்து இருந்த நிலையில் நாரிமன் எடுத்த அந்த முடிவு அவரது ஆளுமையின் உறுதியான பகுதியை தடம் காட்டுவதாய் இருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை முடக்க இந்திரா காந்தி சர்க்கார் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்ட போது எக்ஸ்பிரஸின் அதிபர் ராம்நாத் கோயாங்காவுக்கு உறுதுணையாக நீதிமன்றத்தில் வாதாடியதை பெரும் பீடுடன் இந்நூலில் நினைவு கூர்ந்திருக்கிறார் நாரிமன். 

பின்னர் பலவிதமான வழக்குகள். நதி நீர் தாவா தொடர்பான விஷயங்களில் மாநில அரசுகளுக்கும் நடுவர் மன்றங்களுக்கும் இடையே பணியாற்றிய தனது அனுபவங்களைக் கூறுகிறார் நாரிமன். 

நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளை அணுகும் முறை குறித்து தனது அனுபவங்களையும் அபிப்ராயங்களையும் தெரிவிக்கிறார். 

அடல் பிஹாரி வாஜ்பாய் சர்க்காரால் ராஜ்யசபாவில் நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் நாரிமன். ஆறு ஆண்டுகள் அந்த பதவியை வகிக்கும் நாரிமன் பாராளுமன்றம் செயல்படும் அனைத்து நாட்களிலும் அவையில் ஆஜராகிறார். இவரது ஆர்வத்தைக் கண்ட ராஜ்யசபா துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் இவரை ராஜ்யசபா பொறுப்பு தலைவராக பல சந்தர்ப்பங்களில் பணியாற்ற பணிக்கிறார். 

குடியரசுத் தலைவர்களாக இருந்த ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர்  அவ்வப்போது கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களுக்கு  சட்ட ஆலோசனைகளை வழங்கியதைத் தெரிவிக்கிறார் நாரிமன். 

இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது அளித்துள்ளது. 

ஃபாலி நாரிமனின் அறுபது ஆண்டு சட்டப் பணியும் சுதந்திர இந்தியாவின் முதல் அறுபது ஆண்டுகளும் இணையாகவே பயணிப்பதால் அவருடைய சுயசரித வாசிப்பு இந்திய நீதித்துறை பயணித்த பாதையின் சுவடுகளாகவும் இருக்கிறது. 


நூல் : Before memory fades ஆசிரியர் : ஃபாலி நாரிமன் பக்கம் : 459 விலை : ரூ. 699 பதிப்பகம் : hayhouse(dot)co(dot)in