Thursday, 28 November 2024

பி.எம் & ஐ.ஜி

மூதறிஞர் ராஜாஜி ஆரம்பித்த கட்சியின் பெயர் ’’சுதந்திரா கட்சி’’. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு சோவியத் யூனியன் பாணி அரசாங்கத்தின் நடைமுறைகள் செயல்திட்டங்கள் மேல் பெரும் ஈர்ப்பு இருந்தது. அந்நாட்டின் தாக்கம் கொண்ட திட்டமிடல்களையும் செயலாக்கங்களையும் இந்தியாவில் செய்து பார்த்துக் கொண்டிருந்தார் நேரு. நேருவின் சோவியத் பாணி நம் நாட்டுக்கு பெரும் நலம் பயக்காது என்ற எண்ணத்தைத் தீவிரமாகக் கொண்டிருந்தார் ராஜாஜி. தொழில் துறையில் தனியார் பங்களிப்பு அதிக அளவு நிகழ அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் ;அது மட்டுமே அரசு செய்ய வேண்டியது என்ற உறுதியான எண்ணம் ராஜாஜிக்கு இருந்தது. 1990ல் சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்து சிதறியது. அதன் பின் உலகெங்கிலும் சோவியத் பாணி கைவிடப்பட்டது. இந்தியாவும் மாற்று திசையில் பயணிக்கத் தொடங்கியது. 1960களிலேயே தொலைநோக்குடன் சிந்தித்திருந்தார் ராஜாஜி. 



ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் லட்சியவாதிகளும் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் நிரம்பியிருந்தனர். காங்கிரஸுக்கு மாற்றான அமைப்பாக நாடெங்கும் துளிர் விடத் தொடங்கியிருந்தது சுதந்திரா.

பிலு மோடி சுதந்திரா கட்சி தலைவர்களில் ஒருவர். அமெரிக்காவில் கட்டட வடிவமைப்பியல் படித்தவர். சண்டிகார் நகர உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். சிறந்த நாடாளுமன்றவாதியாக அறியப்படுபவர். 1967,1971 ஆகிய ஆண்டுகளில் குஜராத் மாநிலத்திலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ம் ஆண்டு ராஜ்யசபாவிற்கு தேர்வானார். இந்திய பாராளுமன்றத்தில் 16 ஆண்டு காலம் பணியாற்றியவர். எமர்ஜென்சி காலகட்டத்தில் ‘’மிசா’’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர். 


பிலோ மோடி தன்னை Pilo Mody என்பதை சுருக்கி PM என அழைத்துக் கொள்வார். ஒருமுறை பிரதமர் இந்திரா காந்திக்கு பிலோ மோடி ஒரு கடிதம் எழுதினார். இந்திரா காந்தி என்ற பெயரின் முதல் பகுதியின் முதல் எழுத்தையும் இரண்டாம் பகுதியின் முதல் எழுத்தையும் சேர்த்து IG என்றழைத்து Dear IG எனத் தொடங்கி கடிதத்தை முடிக்கும் போது இங்ஙனம் PM என முடித்திருந்தார். பிரதமர் அந்த கடிதத்துக்கு ஒரு பதில் எழுதினார். Dear PM எனத் தொடங்கி கடிதத்தை முடிக்கும் போது இங்ஙனம் IG என முடித்து.

சட்ட அறிஞர் ஃபாலி நாரிமன் தனது சுயசரிதையில் இந்த சுவாரசியமான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.