Tuesday, 26 November 2024

விசாரணையும் வாக்குமூலமும்

இன்று காலை ஓர் அலைபேசி அழைப்பு வந்திருந்தது. சிறிது நேரம் கழித்தே நான் அதனைப் பார்த்தேன். மீண்டும் நான் தொடர்பு கொண்டதில் அஞ்சல்துறையின் உயரதிகாரி என அறிந்து கொண்டேன். என்னுடைய சி.பி.கி.ராம்.ஸ் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள என் முகவரிக்கு வர வேண்டும் என்று சொன்னார். அவருக்கு உகந்த நேரத்தைத் தெரிவித்தால் அந்த நேரத்தில் வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னேன். மாலை 5 மணிக்கு வருவதாகக் கூறினார்.  

சி.பி.கி.ராம்.ஸ்-ல் பல புகார்களைப் பதிவு செய்திருந்தாலும் இந்த விசாரணை முறை எனக்கு புதிதாக இருந்தது. என்ன நிகழ்கிறது என்பதைக் காண நானும் ஆவலாக இருந்தேன். 

மாலை 4.45 மணி. அந்த அதிகாரி அலைபேசியில் அழைத்தார். அவரது அழைப்பு வரக் கூடும் என நானும் தயாராக இருந்தேன். முகவரிக்கு மிக சமீபத்தில் வந்து விட்டார். ஒரு வெள்ளை மாருதி காரை அவரே ஓட்டி வந்தார். இளைஞர்.

வீட்டிற்கு அழைத்து வந்தேன். என்ன நடந்தது என்று கேட்டார். புகாரில் விளக்கமாகக் கூறியிருக்கிறேனே என்று சொன்னேன். தான் நிகழ்த்தும் விசாரணை என்பதால் அதனைத் தான் கேட்டறிய வேண்டும் என்று சொன்னார். 18ம் தேதி நிகழ்ந்ததைக் கூறினேன். பின்னர் அதனை எழுத்துப்பூர்வமான வாக்குமூலமாக அளிக்குமாறு சொன்னார். என்னிடம் சி.பி.கி.ராம்.ஸ்-ல் நான் அளித்த புகாரின் தமிழாக்கம் இருந்தது. அதனை எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தேன். அதனைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.