நேற்று இரவு எனது நண்பரான மனைத்தரகர் என்னைத் தொடர்பு கொண்டார். விற்பனைக்கு சில இடங்கள் வந்துள்ளன எனக் கூறி என்னைப் பார்வையிட அழைத்தார். அவர் காட்டும் இடத்தை வாங்க எவரும் இருந்தால் அவர்களிடம் விற்பனை செய்து தருமாறு சொன்னார். இவர் மூலம் எனது நண்பர் ஒருவருக்கு இடம் வாங்கித் தந்திருக்கிறேன். வாங்கிய சில ஆண்டுகளில் வாங்கிய விலையைப் போல மூன்று மடங்கு விலைக்கு அந்த இடம் போனது. எனவே அவர் எப்போது அழைத்தாலும் அவர் காட்டும் இடங்களைச் சென்று பார்ப்பேன். காலை 7 மணிக்கு வந்து விட முடியுமா என்று கேட்டார். அவர் சொன்ன நேரத்துக்கு சென்றேன்.
முதலில் ஒரு ஊரின் கடைத்தெருவில் 40,000 சதுர அடி இடத்தைக் காட்டினார். அகலம் 150 அடி. நீளம் 270 அடி. மொத்த இடத்தையும் வாங்கி 4000 சதுர அடியாக பத்து மனையாகப் பிரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என எண்ணினேன். 40,000 சதுர அடியையும் மொத்தமாக வாங்குவதென்றால் பெரிய தொகை ஆகும். வாங்குபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். அதனைப் பத்தாகப் பிரித்தால் ஒரு மனையின் அளவு 4000 சதுர அடி. இரு மடங்கு விலை வைத்தால் கூட வாங்குவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். அதன் பல்வேறு சாத்தியங்களை யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரே இடத்தில் 50 ஏக்கர் வயல் இருந்தது. அவ்வாறு அமைவது காவிரி வடிநில பிராந்தியத்தில் அபூர்வம். பின்னர் இன்னொரு ஊரில் 65 ஏக்கர் நிலத்தைக் காட்டினார்.
ஊர் திரும்ப மதியம் ஆயிற்று. காலை உணவு அருந்தவில்லை. இடம் பார்த்ததில் நேரமாகி விட்டது. மதியம் இன்னொரு ஊரில் 8 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சொன்னார். நான் மட்டும் இடத்தை அடையாளம் சொல்ல சொல்லி சென்று பார்த்து விட்டு வந்தேன்.
இன்று காலையிலிருந்து மாலை வரை 140 கி.மீ இடம் பார்க்க பயணித்திருப்பதை இரு சக்கர வாகன ஸ்பீடாமீட்டர் அளவீடு மூலம் அறிந்தேன்.