அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் காலை 3.45க்கு அலாரம் வைத்திருந்தேன். இருப்பினும் அலாரம் அடிப்பதற்கு முன்னால் 3.15க்கே விழிப்பு வந்து விட்டது. ஒரு கனவிலிருந்து விழித்தேன். கனவில் என்னிடம் ஒரு சைக்கிள் இருக்கிறது. அது நான் 12 வயதில் பயன்படுத்திய சைக்கிள். அந்த சைக்கிளில் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அது சின்ன சைக்கிள் என்பதால் அதனை இயக்குவதில் சில சிரமங்கள் இருக்கின்றன. சாலைகளில் தடுப்புகள் இருக்கின்றன. ஏன் தடுப்புகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாமலேயே வந்து கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு மாநில அரசு அலுவலகம் சென்று அங்கே இருக்கும் ஊழியர் ஒருவரைச் சந்திக்கிறேன். அப்போது அங்கே ஒரு அரசியல் கட்சி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. போராட்டம் வெளியில் நடந்தாலும் உள்ளே அந்த அலுவலகத்தின் வேலைகள் வழக்கமாக நடக்கின்றன. அந்த ஊழியர் வங்கியில் வீட்டுக் கடன் பெறுவது தொடர்பான ஆலோசனைக்கு என்னை அழைத்திருக்கிறார். அவரிடம் விபரம் கூறி விட்டு புறப்பட்டேன். இந்த கனவின் போதுதான் விழித்தேன். 3.45 அளவில் வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்கு கிளம்பினேன். கனவைப் பற்றிய எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. தெருவில் ஒரு ஆட்டோ சன்னமான சத்தத்துடன் கடந்து சென்றது. ரயிலில் ஊருக்கு வந்தவர்களாக இருக்கலாம் என எண்ணினேன். ஏன் பேருந்தில் வந்திருக்கக் கூடாது என மனம் இன்னொரு வாய்ப்பைச் சொன்னது. தொலைதூரப் பயணம் என்றால் ரயிலில் என்று மனதில் பதிவாகியிருக்கிறது என எண்ணினேன்.
நடக்கத் துவங்கியதும் ஏன் இடைவெளி இல்லாமல் தினமும் நடக்க முடியவில்லை என்ற ஆதங்கம் ஏற்பட்டது. காலைப் பொழுதை முழுமையாக நடைப்பயிற்சிக்கு ஒதுக்கி விட வேண்டும் என உறுதி கொண்டேன்.
அதிகாலைப் பொழுது அமைதியாக இருந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பின் ஒரு மரக்கிளையில் ஒரு பறவை ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. முதல் பறவை ஒலி என எண்ணினேன். அதன் பின் ஆங்காங்கே சில சேவல்கள் கூவிக் கொண்டிருந்தன.
நண்பர் ஒருவர் ஒரு மனையை வாங்குகிறார். அதில் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது எங்கள் திட்டம். மானசீகமாக அஸ்திவாரத்திலிருந்து கட்டிடம் எழுப்பி வெள்ளை அடிப்பது வரை மனதுக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அந்த இடத்தை ஒட்டி 4000 சதுர அடி மனை விற்பனைக்கு வருகிறது. அதனையும் வாங்கச் சொல்லி நண்பரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நண்பர் அதனை வாங்கி விட்டதாகவும் அதிலும் கட்டிடம் கட்டுவதாகவும் எண்ணிக் கொண்டேன்.
சாலையில் செல்லும் போது உடல் வாகன நினைவுக்கு செல்வதை உணர்ந்தேன். இடங்கள் அனைத்துமே வாகனத்தில் எவ்வளவு நேரத்தில் நாம் சென்று சேர்வோம் என்னும் கணக்கீட்டின் அடிப்படையில் நம் மனத்தில் பதிவாகியிருக்கிறது. வாகனம் ஒரு வசதி என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நடந்து செல்வதே இயற்கையானது என்று தோன்றியது.
சமணம் குறித்து எண்ணம் தோன்றியது. சமணம் மிகவும் தர்க்கபூர்வமான சமயம். அன்றாட வாழ்க்கையின் பல நியதிகளை அவர்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து பரிசீலித்து வகுத்து வைத்திருக்கிறார்கள். சகடம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்பது அவர்கள் வழிமுறைகளில் ஒன்று. அவர்கள் நியதிகளை எல்லாரும் பின்பற்ற வேண்டும் என அவர்கள் சொல்வதில்லை. மாறாக தங்கள் நியதிகள் மூலம் எளிய வழிகாட்டுதலை உண்டாக்கி வைக்கிறார்கள்.
கட்டிட அனுமதி தொடர்பான சில எண்ணங்கள் தோன்றின. அவற்றைக் கவனித்துக் கொண்டே நடந்தேன். தருமபுரம், மூங்கில் தோட்டம், மன்னம்பந்தல், விளநகர் ஆகிய ஊர்களைக் கடந்து செம்பனார் கோவில் சென்று சேர்ந்தேன். வானில் அதிக அளவில் நட்சத்திரங்கள் இருந்தன. விடிவெள்ளி தென்படுகிறதா என்று பார்த்தேன். கண்ணில் படவில்லை.
உடல் மிக லேசாக வியர்த்திருந்தது. வந்த பாதை வழியே திரும்பி நடந்த போது உடல் சோர்ந்தது. வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. ‘’சூட்சும சரீரம்’’ மானசீகமாக வீட்டைச் சென்றடைந்து விட்டது. இடைப்பட்ட தூரத்துக்கு ஸ்தூல சரீரத்தை இழுக்கிறது. மனம் தோல்வி அடையும் இடம் இதுதான். அந்த இடத்தை சற்று முயன்று கடந்தேன்.
திரும்பி வந்து கொண்டிருந்த போது நிறைய வீடுகளில் வாசல் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகமான கோலங்கள் மலர்களும் தீபங்களும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலும் இதே கோலங்கள் தான் போடப்பட்டிருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலும் அவ்விதமே இருந்திருக்கும்.
காலை ஒளி எழுந்தது. பறவைகள் பல கிளம்பி வானில் பறப்பதைக் கண்டேன்.
வீடு வந்து சேர்ந்தேன். நேரம் காலை 7.15. கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் நடந்திருக்கிறேன். இன்று நடந்த தூரம் 16 கிலோ மீட்டராக இருக்கலாம்.