Sunday, 19 January 2025

ஒரு திருப்தி

 சில நாட்களுக்கு முன்னால், ராஜாஜியின் கல்வித் திட்டம் நூலும் தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு நூலும் ஆர்டர் செய்திருந்தேன். கூரியர் மூலம் வந்திருந்தன. அப்போது வீட்டில் நான் இல்லை. எனது மேஜை மீது பார்சல் இருந்தது. எனது மேஜையில் இருக்கும் ஸ்விஸ் கத்தி மூலம் பார்சலைப் பிரித்தேன். இரண்டு நூல்கள் என் முன்னால்.ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்த நூலை முதலில் கையில் எடுத்தேன். முன்னட்டையைப் பார்த்தேன். பின்னட்டையை வாசித்தேன். நூலை சில பக்கங்கள் வாசிக்கத் தொடங்கினேன்.அன்றைய தினம் அந்நூலை வாசித்து முடித்தேன். அது குறித்து ஒரு பதிவும் எழுதினேன். இருப்பினும் புனைவா அல்லது அ-புனைவா எது முதல் தேர்வு என்னும் பரிசீலனையில் மனம் ஈடுபட்டது. நான் இரண்டையும் வாசிப்பவன். இருந்தாலும் மனம் கேட்டது எது முதல் தேர்வு என. சில மாதங்களுக்கு முன்னால் தினமும் தி.ஜானகிராமனின் ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்து அந்த கதைகள் குறித்த குறிப்புகளை எழுதி வந்தேன். இரண்டு பகுதிகளில் முதல் பகுதி மட்டுமே என்னிடம் இருந்தது. புதிய பதிப்பை ஆர்டர் செய்து வாங்க நாள் ஆகி விட்டது. 

இன்று ராஜாஜியின் கல்வித் திட்டம் நூல் குறித்த குறிப்பை வாசித்து விட்டு நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விஷயம் தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் இன்னொரு நூல் குறித்தும் நண்பர் அதில் குறிப்பிட்டிருந்தார். என் மனக் கேள்விகள் நீங்கி மனம் சமாதானம் ஆனது.