Monday, 13 January 2025

அனல் உருவாக்கம்

இன்று போகி. 

நண்பரின் மனையில் வெட்டிப் போட்டிருந்த மரங்களின் கிளைகளும் இலைகளும் குவிந்து கிடந்தன. போகியை ஒட்டி அவற்றை எரித்து அக்னியை உருவாக்க நினைத்தேன். பஞ்ச பூதங்களில் மனிதனாலும் உருவாக்க இயல்வது அக்னி. 

காலை 445 க்கு அலாரம் வைத்திருந்தேன். இருப்பினும் 4 மணிக்கே விழித்து விட்டேன். தேவதச்சனின் கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். காலைப் பொழுதில் நம்மை அகம் மலர வைக்கும் கவிதைகளை வாசிப்பது என்பது அன்றைய தினத்தை ஒளிரச் செய்வது. ‘’காலை எழுந்தவுடன் படிப்பு ; பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு’’ என்றான் தமிழ் மூதாதை. ஒவ்வொரு நாளும் அவ்விதம் அமையும் என்றால் வாழ்வில் அதை விட நல்லூழ் என்பது கிடையாது. 

காலை 515 அளவில் வீட்டிலிருந்து கிளம்பி நண்பரின் மனைக்குச் சென்றேன். கையில் கொஞ்சம் காகிதங்களை எடுத்துச் சென்றேன். பனி பொழிந்து கொண்டு முழு இருட்டு அப்பியிருந்தது. நேற்று லேசான மழை இருந்தது இங்கே.  இலைகளும் கிளைகளும் சற்று ஈரமாக இருக்கும் என உத்தேசித்திருந்தேன். உள்ளே சென்றதும் அங்கே இருந்த மரக்கொம்பு ஒன்றை தூண்டுகோலாக ஆக்கிக் கொண்டேன். காகிதத்தை எரித்து அந்த தீயில் குவித்துப் போட்டிருந்த இலை தழைக் குவியலின் அடியில் தீ மூட்டினேன். மெல்ல தீ எழ ஆரம்பித்தது. 

‘’வெந்து தணிந்தது காடு’’ என்ற மூதாதையின் சொல் நினைவில் எழுந்தது. வேகுதல் என்பது வலி மிக்கது. வேகுதல் வடிவத்தை மாற்றாது. ஆனால் உள்ளடக்கத்தை மாற்றி விடும். இட்லி மாவு கலனில் ஊற்றி வேக வைத்தால் அரைத் திரவமாக இருப்பது திடப் பொருளாகி விடும். இருப்பினும் வடிவம் அப்படியே இருக்கும். நெருப்பு முதலில் தன் மீது இடப்படும் பொருளின் வடிவத்தை முதலில் மாற்றாது ; உள்ளடக்கத்தை மாற்றும். பின்னர் அதனை முழுதாக எரியச் செய்யும். தன் பணி நிறைவு பெற்றதும் தீ காற்றில் கலந்து விடும். வெந்து எரிந்த பொருள் மெல்ல தணிந்து சாம்பலாக எஞ்சும். ஆசான் பதமான ‘’ வெந்து தணிந்தது காடு’’ என்னும் சொல்லை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். 

தீ பேரொலி எழுப்பி உயர்ந்தது. தூண்டுகோல் மூலம் அருகில் இருந்த கிளைகளையும் இலைகளையும் தீயின் மீது போட்டேன். மனையிலும் மனையைச் சுற்றியிருந்த இல்லங்களிலும் தீயின் மஞ்சள் நிற ஒளி வீசியது. ஒரு வீட்டின் ஜன்னல் கதவைத் திறந்து அதிகாலையில் என்ன நிகழ்கிறது என்று பார்த்தார்கள். 

எப்போதும் உயர்ந்து மட்டுமே இருக்கும் பண்பு கொண்டது தீ. 

தீ என சுடர்வதே மானுடன் அடைய வேண்டிய உச்சநிலை. 

போகி அதற்கான பண்டிகை.