Friday, 17 January 2025

ராஜாஜியின் கல்வித் திட்டம்

 


சாதிக்குப் பாதி நாளா? -ராஜாஜியின் கல்வித் திட்டம் , ஆசிரியர் : தே.வீரராகவன் தமிழாக்கம் : அரவிந்தன் பக்கம் : 174, விலை ; ரூ.220 வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில். 

***

நூலாசிரியர் Modified scheme of elementary education of Madras state in the year 1953 and its impact  என்ற தலைப்பில் எழுதிய ஆய்வேட்டைக் கொண்டது இந்நூல். நூலாசிரியர் 2009ம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 11 ஆண்டுகளுக்குப் பின் 2020ல் இந்நூல் வெளியாகி இருக்கிறது. 

***

இந்த நூல் இன்று என் கைக்கு வந்து சேர்ந்தது. இன்றே வாசித்தேன். இந்த நூலின் வாசிப்பு அனுபவம் சற்று வித்யாசமானது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விஷயம். இருப்பினும் அது குறித்து எழுதப்பட்ட ஆய்வேட்டை வாசிக்கையில் அக்காலகட்டத்தில் விவாதிக்கப்பட்ட அந்த விஷயம் எக்காலத்துக்குமானது ; கல்வி குறித்தும் கல்வித் திட்டம் குறித்தும் சமூகங்கள் எப்போதும் சிந்தித்துக் கொண்டும் விவாதித்துக் கொண்டு இருக்கும் என்பது ஒரு இயல்பு நிலை என்று தோன்றியது.

***

இந்த நூலை வாசிக்கையில் நான் பலவிதங்களிலும் அதனைப் பின் தொடர்ந்தேன். மூன்று வயது முதல் பதினேழு வயது வரை பள்ளி மாணவனாக இருந்திருக்கிறேன். எனது பள்ளிக் கல்வி முழுமையும் தமிழ் வழியிலேயே பயின்றேன். அந்த பள்ளி மாணவன் மனநிலையிலும் இந்த நூலில் விவாதிக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து யோசித்தேன். 

ஒரு எழுத்தாளனாக சமகாலத்தில் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் எவ்விதம் மொழியைப் பயில்கிறார்கள் எவ்விதமான மொழித் தேர்ச்சி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடன் உரையாடும் போது கேட்டு அறிவதுண்டு. எனவே அந்த நோக்கிலும் இந்த பிரதியை வாசித்தேன். 

எனது சமூகச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக ஊரைச் சூழ்ந்திருக்கும் பத்து கிராமங்களில் தினமும் காலை 5 மணியிலிருந்து 6 மணி வரை இயங்கும் வகுப்புகளை கிராமத்தின் 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆசிரியர்களை நியமித்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சில ஆண்டுகளாக இருக்கிறது. பெரும் பொருளும் ஒருங்கிணைப்பும் பொறுப்பும் கொண்ட முயற்சி அது. எண்ணம் செயலாக நீண்ட நாட்கள் ஆகலாம். எனினும் அதனை செய்து பார்த்து விட வேண்டும் என்ற உறுதி என்னில் தீவிரமாக இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலும் இந்த விஷயத்தை அணுகினேன். 

***

இந்த நூல் என்னுள் உருவாக்கிய எண்ணங்களை சிறு சிறு குறிப்புகளாக சொல்லிக் கொண்டு போவதே நல்ல வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.

***

ராஜாஜி கிராமத்தின் பள்ளிகள் காலை 4 மணி நேரம் ஒரு ஷிப்ட் ஆகவும் மதியம் 4 மணி நேரம் ஒரு ஷிஃப்ட் ஆகவும் கல்வி கற்பிக்கும் வகையில் ஒரு மாறுதலைக் கொண்டு வந்தார். முதல் நோக்கிலேயே தெரியக் கூடிய விஷயம் அவர் பள்ளி பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை ; பள்ளி இயங்கக் கூடிய விதத்தில் தான் மாறுதல் கொண்டு வந்தார் என்பது. 

***

நான் 1984 முதல் 1998 வரை பள்ளியில் பயின்றேன். அந்த காலகட்டத்திலும் பள்ளி இடைநிற்றல் என்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்திக் கொள்ளும் வழக்கமும் பன்னிரண்டாம் வகுப்புடன் கல்வியை நிறுத்திக் கொள்ளும் வழக்கமும் ஐந்து சதவீத மாணவர்களுக்கு இருந்தது. பெரும்பாலும் எனது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிராமத்து மாணவர்கள் அவ்வாறு இடைநிற்றல் செய்வது உண்டு. அவ்வாறு இடைநிற்றல் செய்யும் மாணவர்கள் தொழிற் பயிற்சி மையம் என்னும் ஐ.டி.ஐ-ல் சில ஆண்டுகள் கழித்து இணைவது உண்டு. ஐ டி ஐ விளம்பரங்கள் பத்தாம் வகுப்பு ஃபெயில் மாணவர்களும் 12ம் வகுப்பு ஃபெயில் மாணவர்களும் இணையலாம் என்ற விளம்பரத்தை அப்போது வெளியிடுவார்கள். 

***

பள்ளிக்குச் செல்லாமலே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வு முறை நடைமுறையில் இருந்தது. 

***

தொலைதூரக் கல்வி ஒரு அலையாக எழுந்தது. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டில் தங்கள் வேலைகளைப் பார்த்த நேரம் போக மீதி நேரத்தில் படித்து பட்டம் பெற்று அரசுத் தேர்வுகள் எழுதி அரசாங்க வேலைக்குக் கூட போனார்கள். 

***

தேசிய திறந்தவெளி பள்ளி என்ற அமைப்பின் மூலம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். 

***

மாநிலத்தின் எல்லா குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் முழுமையாக பள்ளிக் கல்வியை நிறைவு செய்கிறார்கள் என்னும் நிலை ஏற்பட்டது 1990க்குப் பிறகு தான். அந்நிலைக்கு முக்கிய காரணம் சமூகத்தின் பொருளியலிலும் மனநிலையிலும் விளைந்த மாற்றம். மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீடும்  கல்விக் கொள்கைகளும் செயலாக்கங்களும் அதில் பங்கு வகிப்பவை. 

***

தேசத் தந்தையான மகாத்மா காந்தியால் தனது மனசாட்சி எனக் கூறப்பட்ட ஆளுமை ராஜாஜி. சட்டநாதக் கரையாளரின் ‘’திருச்சி சிறை’’ நூலில் சிறைக்கைதியாக இருக்கும் போதும் ராஜாஜி எவ்விதம் கைதிகளுக்கு திருக்குறள் வகுப்பும் ஷேக்ஸ்பியர் வகுப்பும் நடத்துவார் என்பதன் சித்திரத்தை அளிக்கிறார். 

***

தேசத் தலைவர்களில் ராஜாஜி அவர்களைப் போன்று பரந்து பட்ட அறிவு கொண்ட அறிஞர்கள் மிக மிகச் சிலரே. கிராம மாணவர்கள் கல்வி பயில்வதை தடுக்க அவர் முனைகிறார் என்னும் குற்றச்சாட்டு அவருக்கு எவ்வளவு வலி தந்திருக்கும்? தவம் போன்ற வாழ்க்கையை தன் நீண்ட வாழ்நாள் முழுக்க வாழ்ந்தவர். இன்ப துன்பங்களையும் புகழ்ச்சி இகழ்ச்சிகளையும் ஒன்றெனக் கருதும் நிலை அடைந்தவர்.மகாபாரதம் யக்‌ஷப் பிரசன்னத்தில் யக்‌ஷன் யுதிர்ஷ்ட்ரனிடம் யக்‌ஷன் இருளை விடக் கருமையானது எது எனக் கேட்கிறார். யுதிர்ஷ்ட்ரன் குற்றமற்ற ஒருவர் மீது நியாயமற்ற முறையில் சுமத்தப்படும் களங்கம் என்று பதில் சொல்கிறார். 

***