இன்று காலை 4 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. எழுந்ததும் நீராடினேன். குளிர் கடுமையாக இருந்தது. இன்று தஞ்சாவூர் வரை செல்ல வேண்டிய வேலை இருந்தது. காலை 11 மணி அளவில் சென்றால் சரியாக இருக்கும் என எண்ணினேன். குடந்தைக்கும் தஞ்சாவூருக்கும் இடையே புதிதாக நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச் சாலையில் பயணம் செய்து பழகி விட்டால் அதன் பின் சாதாரண சாலைகளில் பயணிப்பது என்பது அவ்வளவு உவப்பாக இருப்பதில்லை. சமீபத்தில் நானும் எனது நண்பனும் காரில் பயணம் செய்தோம். அப்போது வாகனத்தை இயக்கிய நண்பன் புதிய கார்களில் இப்போது ‘’குரூஸ்’’ என்னும் இயக்க வகை இருக்கிறது. நான்கு வழிச் சாலையில் அந்த வகையில் காரை அமைத்தால் ஆக்சிலேட்டர் கூட அழுத்தத் தேவையில்லை ; வண்டி தானாக செல்லும் என்றான். நான்கு வழிச் சாலைகளால் இந்நிலை சாத்தியமாகியிருக்கிறது என்று கூறினான்.
காலை 9 மணி அளவில் கிளம்பும் போது வானம் முழுக்க மூடியிருந்தது. சூரியக் கதிரே இல்லை. தை மாதம் இந்த மாதிரியான நிலை என்பது அபூர்வம். தஞ்சாவூர் மாவட்டத்துக் காரர்களுக்கு காலை எழுந்ததும் சுள் என இருக்கும் சூரியனைப் பார்த்தால் தான் நாள் பிறந்ததாக அர்த்தம் கொள்வார்கள். வாகனத்தில் செல்லும் போது தீவிரமாகக் குளிர ஆரம்பித்தது. வாகனத்தை சீராக இயக்கிக் கொண்டு சென்றேன்.
தஞ்சாவூரில் சிறுவர்கள் சிலர் வானில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். குஜராத்தில் உத்தராயண் என தை முதல் நாள் மாநிலத்தின் எல்லா வீடுகளிலும் பட்டம் விடுவார்கள் என்பதை நினைத்துக் கொண்டேன். தஞ்சாவூரின் சில பகுதிகளில் விற்பனைக்கு இருக்கும் மனைகளைப் பார்வையிட்டு வந்தேன்.
திரும்பி வரும் போது லேசான பூத்தூறல். பாபநாசம் அருகில் இருந்த சிறுமழை. குடந்தையைக் கடந்ததும் பேய்மழை. மழையில் நனைந்தவாறு வீடு வந்து சேர்ந்த போது குளிரில் உடல் நடுங்கியது. பயணக் களைப்பு நீங்க நீராடினேன். அப்போதும் தீவிரமான குளிர்.
தை யில் மழை என்பது பயிர் அறுவடைக்கு இடையூறானது. மழை எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை.