Friday, 21 February 2025

நதியின் இக்கரையும் அக்கரையும்

ஒரு வாரத்துக்கு முன்னர் செய்தித்தாளில் ''கொடியம்பாளையம்'' என்ற ஊரைப் பற்றிய செய்தியைக் கண்டேன். எனக்கு ஒரு வழக்கம் உண்டு. நான் ஏதேனும் ஒரு ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டால் அந்த ஊரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். எல்லா ஊரையும் பார்க்க முடியாவிட்டாலும் பெரும்பாலான ஊர்களைச் சென்று பார்த்து விட்டு வருவேன். எனக்கு ஊர் என்பது வாழிடம் மட்டும் அல்ல ; மானுடக் கூட்டு முயற்சியின் சிறு துளி ஒரு ஊர் என்பதும் ஒரு கிராமம் என்பதும். இந்தியாவில் கிராமங்கள் என்பவை விவசாயிகள், இரும்புத் தொழில் செய்பவர்கள், இடையர்கள், குயவர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், தச்சர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவினரும் இணைந்து தங்கள் பங்களிப்பை அளித்து உழைப்பை நல்கி உருப்பெற்றவை. யோசித்துப் பார்த்தால் இங்கே ஒவ்வொரு கிராமத்துக்குமே குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்கும் அல்லது ஆயிரம் ஆண்டு வரலாறு அல்லது குறைந்தடபட்சமாக ஐந்நூறு ஆண்டு வரலாறு. இந்த வரலாறு என்பது பல்வேறு சமூகங்கள் இணக்கமாக வாழ்ந்த வரலாறு. இன்றும் இணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு. இந்த பார்வை  எனக்கு இருப்பதால் நான் பார்க்கும் ஒவ்வொரு கிராமமும் எனக்கு அற்புதமே. பார்க்கும் ஒவ்வொரு கிராமமும் எனக்கு ஆச்சர்யமே. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வது என்பது எனக்கு ஒரு வரலாற்றுத் தலத்திலிருந்து இன்னொரு வரலாற்றுத் தலத்துக்கு பல வரலாற்றுத் தலங்களின் வழியே செல்வதே. 

எழுத்தாளர் சாண்டில்யனின் கதை ஒன்றில் கொடியம்பாளையம் இடம் பெற்றிருக்கும். ''ஜல தீபம்'' என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. ''ஜல தீபம்'' மராட்டியக் கடற்படைத் தளபதியான ''கனோஜி ஆங்கரே'' தொடர்பானது. அதற்கும் ''கொடியம்பாளையத்துக்கும்'' கதையில் எப்படி தொடர்பு என்பது தெரியவில்லை. கனோஜி ஆங்கரேவின் படையில் தமிழகத்திலிருந்து செல்லும் ஒருவன் இடம் பெறுவது அந்த கதையின் சரடுகளில் ஒன்று. அவ்விதத்தில் இடம் பெற்றதா எனத் தெரியவில்லை. ஆனால் எப்போதோ வாசித்த ஞாபகம் இன்றும் நுண் அளவில் இருக்கிறது. அக்கதை வாசித்த காலத்தில் எனது தந்தையிடம் கொடியம்பாளையம் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். திரும்பத் திரும்ப கேட்டு அப்பா என்னை ஒரு முறை அங்கே அழைத்துச் சென்றார். அப்போது ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பேன் என எண்ணுகிறேன். ''கொடியம்பாளையம்'' ஒரு சுவாரசியமான ஊர். உண்மையில் அது ஒரு தீவு. காவிரியின் கிளை நதியான கொள்ளிடம் கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கொள்ளிடம் நதி கடலில் கலக்கும் இடத்தில் கடல் ஆற்றின் உள்ளே வந்து விடும். பூமியின் சுழற்சி மாறுதல்களுக்கு ஏற்ப கடல் நீர் ஆற்றுக்குள் செல்வதும் ஆற்று நீர் கடலுக்குள் செல்வதும் மாறி மாறி நிகழும். காவிரியில் இரண்டு லட்சம் கன அடி நான்கு லட்சம் கன அடி என தண்ணீர் அதிக அளவில் வந்தால் கொடியம்பாளையம் மக்கள் ஊரிலிருந்து வெளியேறி விடுவார்கள். வெள்ளம் வடிந்த பின் அங்கே செல்வார்கள். சில் ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த தீவு கிராமத்துக்கு படகில் மட்டுமே செல்ல முடியும். இப்போது அந்த ஊரின் வடக்குப் பக்கத்தில் ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள். எனவே அக்கிராமம் சாலை வழியான இணைப்பைப் பெற்றிருக்கிறது. அந்த கிராமத்தின் கிழக்கு பக்கம் இருப்பது கடல் மேற்கே கொள்ளிடம் நதி தெற்கிலும் வடக்கிலும் கொள்ளிடம் நதி. இப்போது வடக்கு பக்கத்தில் ஒரு பாலம் வந்துள்ளது. பாலத்துக்கு வடக்கே கவரப்பட்டு என்ற கிராமம் உள்ளது. கொடியம்பாளையத்துக்கு தெற்கே பழையார் என்ற மீன் பிடி துறைமுக கிராமம் உள்ளது. பழையாரிலிருந்து கொடியம்பாலளையம் சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது. எதிர்க்கரையில் இருப்பவர்களைப் பார்க்க முடியும். நாம் சத்தமாகக் கூப்பிட்டால் அவர்களுக்குக் கேட்கக் கூடும். ஆனால் அங்கே செல்ல வேண்டுமெனில் படகின் வழியாக மட்டுமே செல்ல முடியும். தரை வழியாக வர வேண்டுமெனில் 40 கி.மீ சுற்றி வர வேண்டும். இவ்விதமான புதிர்த்தன்மை என்னை அந்த கிராமம் நோக்கி ஈர்த்தது. அங்கே சென்றிருந்தேன். அந்த கடற்கரை வசீகரமாக இருந்தது. கடலில் அடித்து வரப்பட்டு அலைகள் கடல்மணலில் தள்ளியிருந்த சற்றே பெரிய மரக்கிளை ஒன்றின் மேல் அமர்ந்து கடலையும் அலைகளையும் வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது உள எழுச்சியை உண்டாக்கியது. பின்னர் ஊர் திரும்பி விட்டேன். அடுத்த நாளும் கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. பூம்புகார் சென்றிருந்தேன். பூம்புகார் செல்லும் வழியில் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்தேன். அவர் அலைபேசியை எடுக்கவில்லை. நான் உத்தேசித்த வண்ணம் தனியாக பூம்புகார் சென்று வந்தேன். அடுத்த நாள் அந்த நண்பர் எனக்கு ஃபோன் செய்தார். நான் அலைபேசியில் அழைத்த போது விவசாய வேலைக்காக கொல்லைக்குச் சென்றிருந்ததாகவும் தாமதாக அலைபேசியைப் பார்த்ததாகவும் கூறினார். இப்போது பூம்புகார் செல்லலாமா என்று கேட்டார். நான் வாரம் ஒரு நாளோ அல்லது 15 நாளுக்கு ஒரு நாளோ கடற்கரைக்குச் செல்லும் வழக்கம் உள்ளவன். எனினும் மூன்று நாளில் மூன்றாவது முறையாக கடலுக்குச் செல்ல அழைப்பு கிடைக்கிறதே என எண்ணி புறப்பட்டேன். அவரை வழியில் அழைத்துக் கொண்டு பூம்புகார் நோக்கி சென்று கொண்டிருந்தேன். சட்டென மேலையூர் என்னும் ஊரில் வண்டியை வடக்கு பக்கமாகத் திருப்பினேன். ''பிரபு ! எந்த கடற்கரைக்கு இன்னைக்கு போறோம் ? '' என்றார் நண்பர். ''எப்பவும் பூம்புகார் போறோமே! இன்னைக்கு கோணயாம்பட்டினம் போவோம்'' என்றேன். மேலையூரிலிருந்து கோணயாம்பட்டினம் செல்லும் வழி நெடுக நண்பர் விவசாயத்தில் வருவாய் குறைவாக இருக்கிறது ; வருவாயை அதிகரிக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் வழக்கம் போல மரப்பயிர் விவசாயத்துக்கு மாறுங்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தேன். ''பிரபு ! நீங்களும் பல வருஷமா என்கிட்ட சொல்றீங்க. இந்த வருஷம் 4 ஏக்கர் நிலத்துல சவுக்கு போடலாம்னு இருக்கன்'' என்றார். நண்பர் பெரிய விவசாயி. 15 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். இருப்பினும் இருப்புச் செல்வம் குறைவு. அவருடைய செல்வம் அவரிடம் யூகச் செல்வமாக இருக்கிறது. 15 ஏக்கர் நிலத்தின் மதிப்பு குறைந்த பட்சம் 3 கோடியாக இருக்கும். ஒரே நேரத்தில் அவர் தன்னை செல்வந்தர் என்றும் உணர்வார். அதே நேரம் கையில் போதிய பணமில்லையே என்றும் உணர்வார். இந்த இரண்டும் உண்மை. நண்பருக்கு மட்டும் அல்ல. டெல்டாவின் 99.99 சதவீத விவசாயிகளின் நிலை இதுவே. 

கோணயாம்பட்டினம் கடற்கரையில் நானும் நண்பரும் கடலைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தோம். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நண்பரிடம் சொன்னேன். ‘’நண்பரே ! நீங்க விவசாயத்துல இருந்து வர வருமானம் போதலை. அத அதிகமாக்கனும்னு சொல்றீங்க. நான் ஒரு யோசனை சொல்றன். யோசிச்சுப் பாருங்க. இப்ப இந்த கடற்கரைல மீனவர்கள் இருக்காங்கல்ல. அவங்கள்ள சில பேருக்கு சொந்தமா ‘’போட்’’ இல்லாம இருக்கும். அவங்களுக்கு நீங்க போட் வாங்கிக் கொடுங்க. தினமும் மீன் பிடிச்சு அவங்களுக்கு கிடைக்கற வருமானத்துல நீங்க பாதி எடுத்துக்கங்க. அவங்களுக்கு பாதி கொடுங்க’’ என்றேன். நண்பர் யோசித்தார். நான் அங்கே இருந்த மீனவரிடம் ஒரு ‘’ஃபைபர் போட்’’ என்ன விலை என்று கேட்டேன். பத்து லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்றனர். 

அப்போது நானும் நண்பரும் அங்கே ஒரு காட்சியைக் கண்டோம். கடலுக்குச் செல்லும் ’’போட்’’களை ஒரு டிராக்டர் நிலத்திலிருந்து கடலுக்கு தள்ளிக் கொண்டு சென்றது. பின்னர் கடலிலிருந்து வந்த ’’போட்’’களை இழுத்துக் கொண்டு நிலத்துக்கு வந்தது. முன்னர் இதனை டிராக்டர் செய்யாது. மீனவர்களே படகில் கட்டையைக் கொடுத்து அதனைத் தோளில் தாங்கி மிகவும் சிரமப்பட்டு கரையில் சேர்ப்பார்கள். இப்போது இந்த வேலைக்கு டிராக்டர் பயன்படுகிறது. ஒரு முறை கடலில் தள்ள ரூ.50 கட்டணம். கடலில் இருந்து நிலத்துக்கு இழுக்க ரூ.50 கட்டணம். இந்த டிராக்டரை வைத்து ஓட்டுவது யார் என்று விசாரித்தேன். பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் டிராக்டர் ஓனர் ஒருவர் தானே வண்டியை ஓட்டுகிறார் என்று கூறினார்கள். இங்கே ஒரு டிராக்டர் போதுமானதாக இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை போதுமானதாக இல்லை ; இன்னும் ஒரு டிராக்டர் தேவை என்றார்கள். நண்பரை நான் ஒரு டிராக்டர் வாங்கி இந்த வேலைக்கு விடுங்கள் என்றேன். நண்பர் இங்கே இருப்பவர்களே அதைச் செய்ய மாட்டார்களா என்று கேட்டார். நியாயமான கேள்வி. அந்த கேள்வியை மீனவர்களிடம் எழுப்பினேன். ‘’டிராக்டர் வாங்கும் காசில் நாங்கள் இன்னொரு போட் வாங்கினால் எங்களுக்கு பல மடங்கு லாபமாயிற்றே’’ என்றனர். அவர்கள் சொன்ன பதிலை நண்பரிடம் சொன்னேன். இங்கேயே டிராக்டர் டிரைவர் கிடைப்பார்களா என்று கேட்டார் நண்பர். டிராக்டர் டிரைவருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு கிடைக்குமோ அதை விட பல மடங்கு படகில் கடலுக்குச் சென்றால் கிடைத்து விடுமே என்றனர். அங்கே இருக்கும் மீனவர்கள் யாரும் டிராக்டர் ஓட்டப் போவது இல்லை எனத் தெரிந்து கொண்டோம். நான் நண்பரிடம் செகண்ட் ஹேண்டில் ஒரு டிராக்டர் வாங்கி ஒரு டிரைவரை ஊதியத்துக்கு நியமித்து பண வரவு செலவுகளை நண்பர் நேரடியாகத் தானே பார்த்துக் கொண்டு இந்த பணியை மேற்கொள்ளுமாறு சொன்னேன். 

நண்பருக்கு தயக்கங்கள் இருந்தன. கேள்விகள் இருந்தன. ஐயத்தையோ தயக்கத்தையோ நிச்சயம் கேள்விகளாக எழுப்பிக் கொள்ளலாம். அது இயல்பானது. நம் மனதில் எழும் கேள்விக்கு நாம் பதிலும் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். நண்பரிடம் சொன்னேன். நாம் நாளை வருவோம். காலை 4 மணி அளவில் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அப்போது எவ்விதம் இந்த பணிகள் நிகழ்கின்றன என்று பார்ப்போம் என்று சொன்னேன். நண்பரால் ஒரு டிராக்டரை இயக்க முடியும். அவரிடம் அதற்கான பொருளாதார வலு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இந்த பணி தினந்தோறும் கணிசமான தொகையை ஈட்டித் தரும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருந்தது. நண்பர் ஒருநாள் விட்டு அதற்கு அடுத்த நாள் காலை வருவோம் என்றார். பொதுவான ஒரு வழக்கம் உண்டு. அதாவது நாம் ஏதாவது ஒரு விஷயத்தை ஆர்வமாக விவாதித்தால் செய்தால் அதற்கு அடுத்த நாள் அந்த விவாதத்தின் தொடர்ச்சியான முதற் செயலை அல்லது தொடர்ச்சிச் செயலை அவசியம் செய்ய வேண்டும். இரண்டாம் நாள் அது தொடர்பாக ஏதும் செய்யாமல் இருந்து விடக் கூடாது. நண்பர் இப்படி இரண்டாம் நாள் பணியை செய்யாமல் தவிர்க்கிறாரே என எனக்கு வருத்தம். அடுத்த நாள் காலை 4 மணிக்கு வீட்டில் தூங்கி எழுந்து நான் கடற்கரை நோக்கி புறப்பட்டேன். நண்பருக்கான பணி என்றாலும் அவருக்கு ஆலோசனை அளித்தவன் என்ற முறையில் அது குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அன்றைய தினம் காலை கடற்கரையில் ஓர் அற்புதமான சூர்யோதயத்தைக் கண்டேன். வெகு நேரம் கடலையும் அலைகளையும் வானத்தையும் சூரியனையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட வயதான மீனவர் ஒருவர் ‘’என்ன தம்பி ரொம்ப நேரமா கடலை பாத்துகிட்டு இருக்கீங்க?’’ என்றார். எவ்வளவு தடவை பாத்தாலும் எத்த்னை நாள் பார்த்தாலும் அலுக்காத ஒன்றல்லவா கடல் என பதில் சொன்னேன். தொடர்ச்சிப் பணியாக அந்த கிராமத்தில் எத்தனை ‘’போட்’’ இருக்கிறது என எண்ணிக்கையை எண்ணிப் பார்த்தேன். அங்கே 90 போட்கள் இருந்தன. பாதி போட் ஒரு முறை கடலுக்கு சென்று வந்தாலே ரூ.4500 கிடைக்கும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் காலை மாலை என இரு வேளை கடலுக்கு சென்று வந்தால் ஒரு தினத்தில் ரூ.9000 கிடைக்கும். டிரைவர் ஊதியம், வாகன எரிபொருள், பராமரிப்பு செலவு ஆகியவற்றுக்கு ரூ.3000 செலவானால் கூட ஒரு தினத்தில் ரூ.6000 லாபம் கிடைக்கும். 

நண்பரின் வீட்டுக்குச் சென்று இந்த கணக்கீட்டைச் சொன்னேன். ‘’டிராக்டர் ஓனரும் டிரைவரும் ஒரே ஆளாக இருப்பவருக்கே இந்த தொழில் சரியாக வரும்’’ என்று நண்பர் சொன்னார். அவர் சொல்வது நடைமுறை உண்மை. ஆனால் ஒரு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து ஒரு டிரைவரை ஊதியத்துக்கு நியமிக்கவும் முடியும். அதுவும் சாத்தியம் தான். அந்த வாய்ப்பை மறுக்கத் தேவையில்லை. நண்பர் மனத்தில் அவருக்கு எழுந்த தடை ஆழமாகப் பதிந்து விட்டது. இருப்பினும் நான் அவருக்காக தொடர்ந்து விபரம் சேகரித்தேன்.

அடுத்த நாள் காலையும் அந்த கடற்கரை கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அன்றும் ஓர் அற்புதமான சூரியோதயம் கண்டேன். அன்று அந்த கிராமத்தின் மீனவ பஞ்சாயத்தாரிடம் சில கி.மீ தொலைவில் குடியிருக்கும் விவசாயியான நண்பர் ஒரு டிராக்டர் வாங்கி இங்கே இயக்க விரும்புகிறார் என்று சொன்னேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவ்விதம் செய்வார் எனில் அவருக்கு எல்லா ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதி அளித்தார்கள். அந்த தகவலையும் நண்பரிடம் தெரிவித்தேன். அவர் ‘’யோசிப்போம்’’ என்றார். 

இந்த இரண்டு மூன்று நாட்களாக கடற்கரைப் பகுதியில் இருந்ததன் விளைவால் மாவட்டத்தில் உள்ள எல்லா கடலோர மீனவர் கிராமங்களையும் பார்த்து விடுவது என முடிவு செய்து பூம்புகாரிலிருந்து தரங்கம்பாடிக்கு கடலை ஒட்டி செல்லும் சிறிய சாலையில் பயணித்தேன். பூம்புகார், வாணகிரி, சின்னங்குடி, மாணிக்கப்பங்கு, அனந்தமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு சென்றேன். பின்னர் இன்னொரு நாள் பழையார் சென்று அங்கிருந்து திருமுல்லைவாசல் வரை உள்ள கடலோர கிராமங்களைக் கண்டு அங்கிருந்த மக்களிடம் பேசினேன். மிக ரம்மியமான பகுதிகள் அவை. இரண்டு கிராமங்களில் டிராக்டர் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் அங்கே இருக்கும் படகுகள் அருகே டிராக்டர் இருக்கும் கிராமங்களில் தங்கள் படகுகளை நிறுத்திக் கொண்டு கடலுக்குச் சென்று வருவதை அறிந்தேன். அந்த தகவலையும் நண்பரிடம் சொன்னேன். 

செகண்ட் ஹேண்ட் டிராக்டர் நண்பருக்கு வாங்கித் தர விரும்பி டிராக்டர் விற்பனையாளர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி வைத்தேன். எனக்கு இந்த விஷயங்கள் புதிது. எனினும் நண்பருக்காக இவற்றைச் செய்தேன். நண்பர் இந்த பணியில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடாமல் போகலாம். விவசாய வருமானம் தாண்டி வேறு கூடுதல் வருமானம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். அவருக்காக நான் இந்த பணிகளை செய்து விபரங்கள் அளித்துள்ளேன். 

பழையார் சென்ற போது நதியின் அக்கரையில் கொடியம்பாளையம் இருப்பதை பழையாரிலிருந்து பார்த்தேன். சில நாட்கள் முன்பு கொடியம்பாளையத்திலிருந்து பழையாரைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. 

கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடல் வரி என் நினைவுக்கு வந்தது. 

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் 
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது 

எனக்கு இந்த ஒரு வாரத்தின் கடற்கரை அனுபவத்திலிருந்து சுழலும் சக்கரம் என்றால் படகில் இருக்கும் யமஹா என்ஜினின் சக்கரமே நினைவுக்கு வருகிறது.