தமிழகத்தில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தது உண்டு. ஒரு விஷயம் குறித்து சிந்திக்கும் போது பரிசீலிக்கும் போது பெரும்பாலும் எதிர்மறையாகவே அணுகுவார்கள். எதிர்மறையாகவே அபிப்ராயம் சொல்வார்கள். ஒரு விஷயத்தின் பாதகமான விஷயங்களை எடுத்துக் காட்டுவது என்பது தவறல்ல ; அது முக்கிய விஷயம். ஆனால் ஒரு விஷயத்தை எவ்விதம் செய்வது என்று அபிப்ராயம் கேட்டால் அதை செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைச் சொல்வார்கள். விவசாயிக்கு முதல் நாள் ஆர்வம் இருந்தது. அவர் அவருடைய நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார். அவர்கள் வழக்கம் போல் எதிர்மறையாக கருத்து கூறி இருக்கிறார்கள். இவருக்கு இயல்பிலேயே தயக்கம். எதிர்மறை கருத்துக்கள் நண்பரின் தயக்கத்தை நங்கூரமிட்டு விட்டன. என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த பதிலை அளித்தேன்.
விவசாயியின் கேள்வி : இந்த விஷயம் டிராக்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். புதிதாக இதன் உள்ளே செல்பவர்களுக்கு சரி வருமா?
எனது பதில் : 100 மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே டிராக்டர் இயங்கும். எனவே வழக்கமான விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் அளவுக்குக் கூட இதில் டிராக்டரின் பயன்பாடு இருக்காது. டிராக்டரைக் கொண்டு நிகழ்த்தப்படும் எளிய பணியாகும் இது. புதிதாக உள் நுழைபவர்களுக்கும் இந்த பணி உகந்ததே.
விவசாயியின் கேள்வி : அந்த கிராமத்திலேயே இருக்கும் டிராக்டர் டிரைவர் மட்டுமே இந்த பணிக்கு சரியானவர். வெளியூர்காரர் பொருந்துவாரா?
எனது பதில் : உள்ளூர்காரர் உள்ளூரின் மங்கல நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பார். நம் கிராமங்களில் பத்து நாளைக்கு ஒரு மங்கல நிகழ்ச்சியோ துக்க நிகழ்ச்சியோ நிகழ்ந்து கொண்டிருக்கும். அவர் அங்கே சென்று விட்டால் இங்கே 50 படகுகள் காத்துக் கொண்டிருக்கும். எனவே உள்ளூர்காரர் இதற்கு மிக பொருத்தமானவர் என்று கூறமுடியாது.
விவசாயியின் கேள்வி : வெளியூர்காரரும் அவ்வப்போது தனது ஊருக்குச் செல்ல விரும்புவாரே?
எனது பதில் : நாம் இரு ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும். ஒருவர் ஊருக்குச் சென்றாலும் இன்னொருவர் பணியில் இருப்பார்.
விவசாயியின் கேள்வி : அவர்களை எங்கு தங்க வைப்பது? அவர்களுக்கு எவ்விதம் உணவு வழங்குவது?
எனது பதில்: ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைக்கலாம். சமையல் செய்து சாப்பிடுவதற்கான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்து விடலாம்.
விவசாயியின் கேள்வி : இதெல்லாம் சரி வருமா?
எனது பதில் : நீங்கள் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம். அதில் உங்கள் அம்சம் மட்டும் இல்லை. இடம் பொருள் ஏவலும் அதைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இருப்பினும் ஒரு விஷயத்தை எவ்விதம் செய்வது அதற்கு தேவைப்படுபவை என்ன அவற்றை நம்மால் ஏற்பாடு செய்ய முடியுமா என்ற கோணத்தில் சிந்தியுங்கள். சிந்தித்துப் பார்க்கவே தயங்காதீர்கள்.