''நம்ம நாட்டோட மக்கள்தொகை 120 கோடி . இதுல 20 கோடி பேர் வெஜிடேரியன்னு வச்சுகிட்டா 100 கோடி பேர் நான்வெஜிடேரியன். ஒரு கணக்குக்க்காக ஒருத்தர் ஒரு நாளைக்கு 10 கிராம் மீன் சாப்படிறதா வச்சுக்கங்க. அப்ப ஒரு நாளைக்குத் தேவையான மீனின் அளவு ஒரு கோடி கிலோ. ஒரு கிலோ மீனின் விலை ரூ.100ன்னா ஒரு நாளைக்கு மீன் வர்த்தகம் 100 கோடி ரூபாய்க்கு நடக்குது. ஒரு வருஷத்துக்கு 36,500 கோடி வர்த்தகம் நடக்கும் இல்லயா?’’ விவசாய நண்பரிடம் இந்த கணக்கைக் கூறித் தான் என்னுடைய எண்ணங்களை கூற ஆரம்பித்தேன்.
தரவுகளும் புள்ளிவிபரங்களும் சுவாரசிய்மானவை. எனினும் அதன் சுவாரசியத்தன்மையை எல்லாரும் உணர்ந்து கொள்ள முடியுமா என்பதும் எல்லாரும் ரசிக்க முடியுமா என்பதும் அவரவர் மன அமைப்பை அவரவர் கற்பனையைப் பொறுத்தது. இந்த புள்ளிவிபரம் நான் கடலையும் கரையில் வலையில் இருந்த மீன்களை மீனவர்கள் குவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்த போது உருவாக்கிக் கொண்டது. ஒருவர் ஒரு நாளைக்கு 10 கிராம் மீன் உண்கிறார் என்பது குறைந்தபட்ச கணக்கு. ஒரு நாளைக்கு 10 கிராம் என்றால் ஒரு வருடத்துக்கு 3.65கிலோ. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அந்த குடும்பம் ஆண்டுக்கு 18 கிலோ மீன் வாங்குகிறது என்று பொருள். இங்கே வாரம் ஒரு நாள் மீன் வாங்குவது பெரும்பாலான குடும்பங்களின் பழக்கம். அவ்வாறெனில் வாரத்துக்கு 400 கிராம் மீன் வாங்குகிறது என்று பொருள். சில மாதங்கள் முழுமையாக புலால் உணவை முற்றிலும் தவிர்த்திருப்பார்கள். இந்த கணக்கீடு பொது சராசரியைக் கணக்கிட்டுக் கொள்ளவும் மீன் வர்த்தகத்தை மதிப்பிட்டுக் கொள்ளவும் அசல் எண்களுக்கு அருகில் வந்து சேரும் கணக்கீடாகவே இருக்கிறது.
விவசாய நண்பர் இந்த கணக்கீட்டிலும் கணக்கீட்டு முறையிலும் மகிழ்வு கொள்ளவில்லை என்பதை அவரது உடல் மொழியிலிருந்து அறிந்தேன். எனினும் துவங்கி விட்டேன் என்பதால் அடுத்தடுத்து நான் கூறிக் கொண்டிருந்தேன். ’’ஆக சாத்தியமான மொத்த உற்பத்தியும் நிகழும் வரை அரசாங்கம் அதற்கான உதவிகளை செய்து கொண்டு இருக்கும் . மீன் பிடி துறைமுகங்கள் நிறைய அளவில் அமைய அரசாங்கம் அதனால் தான் உத்தேசிக்கிறது’’ என்றேன்.
விவசாயிகள் புள்ளிவிபரங்களையும் கணக்கீடுகளையும் வெறுக்கிறார்கள். முன்னர் ஒருமுறை நண்பரிடம் சொன்னேன். ‘’ மாநிலத்துல இருக்கற எல்லா விவசாயிகிட்டயும் இருந்து மாநில அரசி நெல்லை விலைக்கு வாங்குது. நெல்லை விட குறைவான விலைக்கு அரிசியை விக்குது. குறைவான விலைக்குக் கூட இல்லை. இலவசமா அரிசியைக் குடுக்குது. ஒரு பொருளை குறிப்பிட்ட விலைக்கு வாங்கி இலவசமா கொடுத்தா அந்த செயல்பாடு நஷ்டம் தானே. இந்த செயல்பாட்டுல நஷ்டப்படற அரசாங்கம் எப்படி நெல்லுக்கு கொடுக்கற குறைந்தபட்ச ஆதரவு விலைய அதிகமாக்கும். அப்படி செஞ்சா நஷ்டம் மேலும் அதிகமாகாதா?’’ விவசாய நண்பரிடம் கேட்டேன். நண்பர் கோபத்துடன் எதிர்வினையாற்றினார். ‘’ எங்களுக்கு ஏக்கருக்கு வருஷம் 50,000 ரூபாய் கூட லாபமா கிடைக்கறதில்ல. சமயத்துல நஷ்டம் கூட வந்திடுது.’’ அவர் சொல்வது உண்மைதான். நான் பதில் சொன்னேன். ‘’விவசாயி 3 ஏக்கர் வச்சிருந்தா அவனுக்கு ஆண்டுக்கு ஒன்னரை லட்சம் லாபம். 15 ஏக்கர் வச்சிருந்தா ஏழரை லட்சம் லாபம். 50 ஏக்கர் வச்சிருந்தா 25 லட்சம் லாபம். கிராமத்துல செலவு குறைச்சல். அதனால இந்த விஷயம் தொடர்ந்து நடக்குது. அதனால தான் 3 ஏக்கர் நிலம் வச்சிருக்கவனும் தன்னோட வாரிசுகளை சென்னையில ஏதாவது கம்பெணில வேலைக்கு அனுப்பறான். 50 ஏக்கர் வச்சிருக்கவனும் வேலைக்கு அனுப்பறான்.’’. விவசாயம் செய்து நேரடியாக பழக்கம் இல்லாத நான் எண்களைக் கொண்டு விவசாயத்தையும் விவசாய முறைகளையும் விவசாயிகளின் வாழ்நிலையையும் மதிப்பிட்டுக் கொண்டிருப்பது நண்பருக்கு மேலும் சினமளித்தது. நான் அவரிடம் சொன்னேன். ‘’நண்பரே ! சினம் கொள்ளாதீர்கள். நான் விவசாயம் செய்து பழக்கமில்லாதவன் தான். வயலுக்கு தினமும் போனதில்லை. நீர் பாய்ச்சியதில்லை. நாற்று நட்டதில்லை. களை பறித்ததில்லை. என்னுடைய விவசாய அறிவு பூஜ்யமாகவே இருக்கட்டும். அதை நான் மறுக்கப்போவதில்லை. அது உண்மை. அது எனக்கும் தெரியும். ஆனால் நீங்கள் இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பூஜ்யமான எனக்கே தெரியும் என் கண்ணில் படும் அரசாங்கத்தின் கொள்முதல் செயல்பாடுகளின் பின்னால் இருக்கும் வணிகக் கணக்கு தினமும் வயலுக்குப் போகும் நீர் பாய்ச்சும் நாற்று நடும் களை பறிக்கும் அறுவடை செய்யும் உங்கள் கண்களில் இன்னும் படவில்லையே ! இந்த நிலைமை என்னுடைய நிலையை விட மோசம் இல்லையா?’’
எனக்கு நண்பர் மீதும் நண்பருக்கு என் மீதும் நன்மதிப்பும் பிரியமும் உண்டு. நெல் விவசாயத்தில் லாபம் இல்லை என விவசாயிகள் உணர்ந்தால் மரப்பயிருக்கு மாற வேண்டும் என நான் கூறுவதை அதற்காகச் செயல்படுவதை ஆதி முதல் அந்தம் வரை எதிர்ப்பவர் என் விவசாய நண்பர். இருப்பினும் நான் எனது அபிப்ராயங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருப்பேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகாலத்துக்கு மேல் அவரிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இது குறித்து பேசியிருக்கிறேன். அவர் கடுமையான ஆட்சேபங்களை முன்வைப்பார். எனது அபிப்ராயத்துக்கு எவ்விதம் ஆட்சேபம் எழுப்பப்படும் என்பதையும் என்னென்ன ஆட்சேபம் எழுப்பப்படும் என்பதையும் நான் அவருடனான உரையாடல்கள் மூலம் அவதானித்துக் கொள்வேன். பிற விவசாயிகளைச் சந்திக்கும் போது நண்பர் எழுப்பும் ஆட்சேபங்கள் அவர்கள் மனதிலும் இருக்கும் என்ற அடிப்படைப் புரிதலிலிருந்து எனது அபிப்ராயங்களை கூறத் தொடங்குவேன். அது என் பணியை எளிதாக்கும்.
நண்பர் இப்போது தன் 15 ஏக்கர் வயலில் 3 ஏக்கரில் நெல்லுக்குப் பதிலாக சவுக்கு பயிரிட உத்தேசித்திருக்கிறார். அவர் இந்த முடிவை எடுக்க சிறிய அளவில் நானும் காரணமாக இருந்திருக்கிறேன்.
சவுக்கு நீர் அதிகம் தேவைப்படாத மரப்பயிர். ஆடு மாடு மேயாது ஆகையால் பாதுகாப்பு செலவு குறைவு. நட்ட பின் வாரம் ஒருமுறையோ 15 நாளைக்கு ஒரு முறையோ தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர வேறு பணி கிடையாது. 3லிருந்து 4 ஆண்டுகளுக்குள் மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம். வெட்டப்பட்ட சவுக்கு மரங்களைக் ‘’கரி மூட்டம்’’ போட்டு சவுக்கு கரியாக விற்பனை செய்தால் சவுக்கு மரத்தின் விலையை விட மூன்று மடங்கு விலை சவுக்கு கரிக்கு கிடைக்கும்.