இன்று காலை நண்பர் சீனு அலைபேசியில் அழைத்திருந்தார். முப்பது நிமிடத்தில் மீண்டும் அழைக்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரிடம் ஆசுவாசமாக சற்று சாவகாசமாக உரையாட வேண்டும் என்று விரும்பி அவ்விதம் செய்தேன்.
தொழில் நிமித்தமாக என்னை ஒருவர் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தார். அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். பத்து மணி சந்திப்புக்கான நேரம். அவர் வராததைக் கண்டு 10.30க்கு பேசினேன். 12.30 என்றார். நான் ஒரு மணிக்குத் தொடர்பு கொண்டேன். நாளை காலை சந்திக்க வருகிறேன் என்றார். சற்று சோர்வாக இருந்தது. மதிய உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என எண்ணினேன். நான் ஒருவரைச் சந்திக்க மாலை 5.30க்கு வருவதாகக் கூறியிருந்தேன். பயண நேரம் ஒரு மணி. சற்றே ஓய்வில் இருந்த போது மதியம் 2.15க்கு சீனுவின் அலைபேசி அழைப்பு. குறுஞ்செய்தியில் கூறிய வண்ணம் பேசாமல் போனோமே என அழைப்பை எடுத்தேன்.
‘’வணக்கம் சீனு. எப்படி இருக்கீங்க?’’
‘’நம்ம காட்டுல எப்போதும் மழைதான்’’
‘’எங்க உள்ளூரா வெளியூரா?’’
‘’உங்க ஊர்ல தான் இருக்கன்’’
வாரிச் சுருட்டி எழுந்தேன். ‘’சீனு ! லஞ்ச் சாப்டீங்களா? எங்க இருக்கீங்க?’’
‘’உங்க ஊர்ல புக் ஃபேர் நடக்குது. அங்க இருக்கன். காலைல வந்துட்டன். இப்ப புக் ஃபேர்க்கு வெளியில வந்துட்டன்’’
‘’அங்கயே இருங்க. 10 நிமிஷத்தில் அங்க இருப்பன்’’
பைக்கை எடுத்துக் கொண்டு அவர் இருந்த இடத்துக்கு சென்றேன்.
‘’சீனு முதல்ல லஞ்ச் சாப்டுடுவோம்’’
‘’லஞ்ச் வேண்டாம். லைட்டா ஜூஸ் சாப்டுவோம்’’
ஏன் மதிய உணவு வேண்டாம் என்கிறார் என எனக்குப் புரியவில்லை.
‘’மூணு நாளா லைட்டா உடம்பு சரியில்ல. அதான் புக் ஃபேர் கிளம்பி வந்துட்டன். புக்ஸ் பாத்தா உடம்பு சரியாயிடும்’’
நான் அவரை ஒரு ஜூஸ் கடைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு பழக்கடைக் காரர் பக்கத்து கடையைப் பிடித்து ஜூஸ் கடை ஆக்கியுள்ளார். என்ன ஜூஸ் இருக்கிறது என்று கேட்டோம். ஆப்பிள் ஆரஞ்ச் வாட்டர் மெலான் பைனாப்பிள் செவ்வாழை என தொடர்ந்து பழப் பெயர்களை அடுக்கிய போது சீனு நான் இருவரும் ஒரே நேரத்தில் செவ்வாழை என்றோம்.
‘’அண்ணன் ஜூஸில் ஜீனி போட வேண்டாம். ஐஸூம் வேண்டாம்’’ என்றேன். ஜூஸில் ஜீனி சேர்த்தால் அந்த பழத்தின் ருசி இருக்காது. ஜீனியின் ருசி மட்டுமே இருக்கும்.
செவ்வாழை ஜூஸ் சாப்பிட்டோம். சீனுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஷாஜியின் இசைக் கட்டுரைகள் என்னும் நூலையும் பறவைகள் தொடர்பான நூல் ஒன்றையும் வாங்கியிருந்தார். நான் அவற்றை புரட்டிப் பார்த்தேன்.
இருவரும் ஊரின் ரயில்வே சந்திப்புக்கு சென்று விட்டோம். அங்கே பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திருவாரூர் பாஸஞ்சர் நடைமேடை 4ஐ ஒட்டி வந்து சேர்ந்தது.
‘’சீனு ! ரயில், ரயில் நிலையம் இவற்றைப் பின்புலமாக வைத்து தமிழில் நாவல் ஏதும் எழுதப்பட்டிருக்கிறதா ? ‘’ என்ற வினாவை எழுப்பினேன். சீனு ஆழமாக யோசித்துப் பார்த்தார்.
விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் ‘’இலட்சிய இந்து ஓட்டல்’’ நாவலில் ரயில் நிலையம் வரும் என்று நான் கூறி விட்டு வேறு நாவல் எவை என்று யோசித்தேன். ‘’சீனு ! பகல் கனவு என்ற நாவல் எம்.எஸ் கல்யாண சுந்தரம் எழுதியது. அதில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் குறித்து வரும்’’ என்று கூறினேன்.
ஏன் ரயிலை மையப்படுத்தி ரயில் நிலையத்தை மையப்படுத்தி தமிழில் அதிகம் எழுதப்படவில்லை என விவாதித்தோம்.
சந்திக்க வேண்டிய நண்பருக்கு ஃபோன் செய்தேன். ஃபோன் ரிங் ஆகிக் கொண்டு இருந்தது. இன்று சந்திக்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தோன்றியது. சீனுவை அழைத்துக் கொண்டு பூம்புகார் செல்லலாம் என எண்ணினேன். பூம்புகார் செல்ல ஊரைத் தாண்டுகையில் எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு. பத்து நிமிடம் சீனுவை வள்ளலார் கோவிலில் இருக்கச் சொல்லி விட்டு சென்று வந்தேன்.
திரும்பி வந்ததும் ‘’சீனு ! ஜே.ஜே சில குறிப்புகள் நாவலில் சுந்தர ராமசாமி சின்ன ரயில் நிலையங்கள் குறித்து எழுதியிருக்கும் வரிகள் சிறப்பானவை ‘’என்றேன்.
பூம்புகார் வந்தடைந்தோம். சூழல் மிகவும் ரம்மியமாக இருந்தது. ரம்மியமான அந்த சூழலில் சீனுவுடன் உரையாடிக் கொண்டிருந்தது மனதுக்கு மேலும் இதமாக இருந்தது.
இந்த ஆண்டு சீனு நான்கு நூல்கள் வெளியிட உள்ளதாகக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினேன்.
கடற்கரையில் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இருட்டியதும் ஊர் வந்து சேர்ந்தோம். உணவு அருந்தி விட்டு சீனுவை சிதம்பரம் பஸ்ஸில் ஏற்றி விட்டேன்.
எங்கள் உரையாடலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சரிதமான ’’விவசாய முதலமைச்சர்’’ நூலைக் குறித்து அவரிடம் சொன்னேன். மிகவும் ஆச்சர்யப்பட்டார். அனேகமாக நாளை அந்த நூலை அவர் முழுமையாக வாசித்திருக்கக் கூடும்!