துப்பறியும் நாவல்களுக்கு உலகெங்கிலும் பெரும் வாசகப் பரப்பு உள்ளது. குற்றங்கள் குறித்த ஆர்வம் இயல்பாகவே மனித உள்ளத்துக்கு இருக்கிறது. எனவே ஒரு குற்ற நிகழ்வு குறித்தும் அது துப்பறியப்படுவது குறித்தும் மனித மனங்கள் ஆர்வம் கொள்கின்றன. எனினும் ஒரு குற்றத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் மட்டுமே அதனை முழுமையாகத் துப்பறியவும் முடியும். உலகின் எல்லா விஷயங்களைப் போலவே குற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் பெரும் மூளை உழைப்பும் மனக்குவிப்பும் தேவை. சாமானிய மனங்களால் அத்தனை கனமான விஷயங்களை நோக்கி சென்று விட முடியாது. சாமானியர்களுக்கு குற்றத்திலும் துப்பறிதலிலும் இருக்கும் பரபரப்பு மட்டுமே தேவை. எனவே அந்த பரபரப்பை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு வெகுஜன தளத்தில் பல துப்பறியும் கதைகள் எழுதப்படுகின்றன. அந்த பரப்பு ஒரு நூதன வெளி. அதில் பல துப்பறிவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாத்திர உருவாக்கத்தில் வெகுஜன ரசனை கணிசமான அம்சம். எனவே அந்த கதாபாத்திரங்கள் தங்கள் இயல்புகளிலிருந்து பெரிதாக மாறுவது இல்லை. ஒரு துப்பறியும் கதாபாத்திரம் வெகுஜன வாசகர்களால் விரும்பப்பட்டால் அது மாறாத தன்மையுடன் அடுத்தடுத்த கதைகளிலும் இருக்கிறது. இந்த பின்னணியில், உலக இலக்கியப் பரப்பின் துப்பறியும் கதாபாத்திரங்கள் உயிர் பெற்று ஒரு கொலையைத் துப்பறிந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவைக் குறுநாவலாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.