கடந்த இரண்டு நாட்களில் ஜெயமோகனின் படுகளம், ஆலம் ஆகிய இரு நாவல்களை வாசித்தேன். இணையத்தில் தொடராக வெளிவந்த போது தினமும் வாசித்திருந்தாலும் இம்முறை புத்தகமாக வாசித்தேன்.
சென்னையில் பொறியியல் படித்த மாணவன் ஒருவன் தந்தை நோயில் மாண்டதால் திருநெல்வேலி வந்து தந்தையின் கடையை நடத்த வேண்டிய பொறுப்புக்கு ஆளாகிறான். அவனுடைய விஷயத்தில் அந்த கடை அமைந்திருக்கும் இடத்தின் வணிக மதிப்பு என்பது கடையில் உள்ள பண்டத்தின் வணிகத்தை விட பல ஆயிரம் மடங்கு பெரியது. அந்த கடை ’’பகுதி’’ செலுத்தப்பட வேண்டியது. அதாவது அங்கு வாடகைக்கு இருப்பவர் தொடர்ந்து வாடகை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். வாடகைதாரர் எவரும் கடையின் இடத்தின் சொந்தக்காரராக எப்போதும் ஆக முடியாது. ஆனால் ‘’பகுதி’’யை கைமாற்ற முடியும். இளைஞன் பொறுப்பில் இருக்கும் கடையை தங்கள் கைவசம் கொண்டு வர அண்டை கடைக்காரர்கள் பலவிதத்தில் முயல்கின்றனர். இருப்பினும் இளைஞன் தாக்குப் பிடித்து தனக்கென லாபகரமான சொந்த வணிகத்தை உருவாக்கிக் கொள்கிறான். அவ்வாறு உருவாக்கிக் கொள்கையில் திருநெல்வேலியின் கந்து வட்டிக்காரர்கள் கடன் வலைக்குள் சிக்குகிறான். தனது தந்தையின் மரணத்துக்குக் கூட கந்து வட்டி காரணமாக இருந்திருக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. இந்நிலையில் அவனது கடையை முழுமையாக மறைத்து ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரத் தட்டி வைக்கப்படுகிறது. அது அவன் தொழிலை முழுமையாக முடக்குகிறது. விளம்பரத் தட்டி வைத்த நிறுவன அதிபரைக் கண்டு விஷயத்தை விளக்கி உதவி கேட்கும் போது அவரால் அவமதிப்புக்கு ஆளாகிறான். வணிகம் விளம்பரத் தட்டியால் முழுமையாக இல்லாமல் ஆகியிருக்கும் நிலையில் கந்துவட்டி அவனைச் சூழ்கிறது. சாமானிய மனிதனான அவன் பெரும் நெருக்கடியில் சில விஷயங்களைத் துணிந்து செய்வது என முடிவெடுக்கிறான். அவனுக்கு உதவியாக ஒரு வழக்கறிஞர் இணைகிறார். அந்த இளைஞன் மீது கொலை முயற்சி நடக்கிறது. அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். கந்து வட்டி விடுபவர் ஒருவர் கொல்லப்படுகிறார். எதிர்பாராத பல சம்பவங்கள். இளைஞன் தன்னைச் சூழ்ந்த இடரிலிருந்து எங்ஙனம் வெளியேறினான் என்பதே ’’படுகளம்’’ கதை.
‘’ஆலம்’’ திருநெல்வேலி பகுதியில் நிகழும் கதை. காசுக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினர் நண்பனின் இரு சக்கர வாகனத்தை இரவலாகக் கேட்டு பயணிக்கும் இளைஞனை ஆள் மாற்றி கொன்று விடுகின்றனர். கூலிப்படையினரின் கொலை இலக்கு கொல்லப்பட்ட இளைஞன் அல்ல மாறாக அந்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளன். மரணித்த இளைஞனின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். அமைதியாக வாழும் மத்திய வர்க்கக் குடும்பம். அந்த கொலையின் பின்னால் அதற்கான காரணத்தைத் தேடிச் செல்கிறார். ஏற்கனவே இரு குடும்பங்களுக்கு இடையே இருந்த பகையின் காரணமாக பழிவாங்கல் நடவடிக்கையாக கொலைகள் நடந்திருக்கின்றன என்பதை அறிகிறார். தன் மகனைக் கொன்ற கூலிப்படை ஆட்கள் எட்டு பேரையும் தான் நியமித்த கூலிப்படையால் கொல்கிறார். தன் மகனின் கொலைக்குக் காரணமான குடும்பத்தின் ஆண்களை ஒவ்வொருவராக கூலிப்படை மூலம் கொல்கிறார். தங்கள் வைரி குடும்பமே தங்களைக் கொல்கிறது என எண்ணி அவர்கள் அந்த குடும்பத்து ஆண்களைக் கொல்கிறார்கள். பலவிதமான கொலைகள் நிகழ்ந்து கொலைகளின் எண்ணிக்கை 40 ஐ தொடுகிறது. வழக்கறிஞர் ஒருவர் இந்த பின்னணியை ஆராய்கிறார். முடிவில்லா வஞ்சத்தின் ஊற்றுமுகம் எது என்னும் கேள்வியை எழுப்பிக் கொண்டு அந்த ஊற்றுமுகத்தைச் சென்றடைகிறது ஜெயமோகனின் ‘’ஆலம்’’.