Monday, 14 April 2025

கிருஷ்ண பிரதேசம்

 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
நீண்ட தூரம்
நடந்து 
வந்திருக்கிறேன் கிருஷ்ணா
நீண்ட தூரம்
மிக நீண்ட தூரம்
முள்மரங்கள் மண்டியிருக்கும் பாலை
நீர் காண இயலா நிலம்
உனது பெயர் மட்டுமே நம்பிக்கை
என் பாதங்கள் காய்த்துப் போய் உள்ளன
முட்களால் கீறப்பட்ட உடல்
தாகத்துக்கு துளி நீர் அறியா இருப்பு
உன் கருணைத்துளி ஒன்று கிடைத்தது
உன்னால் உன்னால் உன்னால்
உன்னால் உன்னால் மட்டுமே
உனது பிரதேசத்தில் நுழைந்தேன்
உன் பிரதேசத்தில் யாவும் கிருஷ்ணர்கள்
பல பல கிருஷ்ணர்கள்
உன்னைச் சிறு மகவாகக் கண்டேன்
என் கையளவே இருந்தாய்
சிறு விரல்கள்
சிறு கண்கள்
சிறு நாசி
எப்போதும் சிறு புன்னகை
பாலனே
குழந்தையே
உன் புன்னகையால்
கரைகிறேன்
ஒரு நதியெனப் பெருக்கெடுக்கிறது
உன் புன்னகை
அந்நதியில் மூழ்குகிறேன்
அந்நதியில் கரைகிறேன்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 
என் மீட்பே