Saturday, 26 April 2025

நல்லார்

சென்ற வாரம் எனது நண்பர் ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இடம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அவர் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ரியல் எஸ்டேட் பணிகளில் ஒரு இடத்தை நேரில் பார்க்கும் போது எவ்விதமான உணர்வு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அந்த இடத்தை வாங்குவதா வேண்டாமா என்று பெரும்பாலும் முடிவு செய்வார்கள். முதற்பார்வையில் தோன்றும் உணர்வும் முதற்காட்சியில் தெரியும் விஷயங்களும் முக்கியமானவை. நண்பர் இடத்தைப் பார்த்தார். அவருக்கு இடம் பிடித்திருந்தது. அந்த இடத்தின் அணுகுசாலை குறித்து அவர் ஒரு அவதானத்தைக் கூறினார். அது முக்கியமானது. அந்த இடத்தைப் பொறுத்து அடிக்கோடிட்டுக் கவனிக்க வேண்டியது. பிறகு நாங்கள் தேனீர் அருந்தலாம் என முடிவு செய்தோம். உண்மையில் ஒரு சாவகாசமான இடத்தில் நாங்கள் பார்த்த இடம் தொடர்பாக முதல் கட்ட விபரங்களைப் பேசிக் கொள்வதற்கும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முடிவு செய்து கொள்வதற்குமான அவகாசம் தேனீர் அருந்துகையில் கிடைக்கும் என்பதே அம்முடிவின் நோக்கம். கூட்ட நெரிசலில் பரபரப்பாக இருக்கும் கடைகளைத் தவிர்த்து ஊருக்கு வெளியே இருக்கும் கடை ஒன்றனுக்குச் சென்றோம். அந்த கடை தேனீர்க்கடையாக இருப்பினும் டயனிங் டேபிள் நாற்காலிகள் இடப்பட்டு தூய்மையாக இருந்தது. நண்பர் நான் நண்பரின் வாகன ஓட்டுனர் மூவரும் தேனீர் அருந்த வந்தமர்ந்தோம். நானும் நண்பரும் லெமன் டீ சொன்னோம். ஓட்டுநர் பால் டீ சொன்னார். லெமன் டீ மிக சூடாக இருந்தது. அது ஆறும் வரை நாங்கள் அந்த இடம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். பில் தொகை ரூ. 57. நண்பர் தன்னிடம் இருந்த ரூ.500 தாளை எடுத்தார். என்னிடம் ஒரு ரூ.50 தாள் இருந்தது. பாக்கெட்டில் இருந்த மீதி நோட்டுகள் ரூ. 500 நோட்டுகள். நான் கடைக்காரரிடம் ரூ. 50 கொடுத்து விட்டு மீதி ரூ.7 ஐ நண்பரை அனுப்பி விட்டு திரும்ப வரும் போது கொடுக்கிறேன் என்று கூறினேன். அவர் சரி என்று கூறினார். அன்று திரும்ப வரும் போது என்னிடம் சில்லறை இல்லை. அதன் பின் ஓரிரு நாட்கள் ஆயின. அந்த பக்கம் செல்லும் போது அந்த தொகையை கடைக்காரருக்கு அளிப்போம் என நினைத்திருந்தேன். இருப்பினும் அது தொடர்ந்து என் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது. இன்று நாங்கள் பார்த்திருந்த இடத்தின் ஆவணம் ஒன்றைப் பெறுவதற்கு அங்கு சென்றிருந்தேன். அந்த ஆவணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் வழியில் அந்த தேனீர்க்கடைக்குச் சென்றேன். கடையின் உரிமையாளரைக் கண்டேன். 

‘’போன வாரம் நாங்க 3 பேர் டீ சாப்பிட வந்திருந்தோம். அப்ப நான் உங்களுக்கு 7 ரூபாய் பேலன்ஸ் தரணும். 57 ரூபாய் பில். நான் 50 ரூபாய் தந்தேன். மீதி 7 ரூபாய் இந்தாங்க’’ 

’’சார் ! போன வாரம் நீங்க இன்னோவா கார்ல வந்திருந்தீங்க’’

’’ஆமாங்க ! கார் ஃபிரண்டோடது’’

‘’சார் ! உங்க ஃபிரண்ட் டேபிள் மேல சன் கிளாஸை வச்சிட்டு போயிட்டார். அத நான் எடுத்து வச்சிருக்கன். இத அவர் கிட்ட கொடுத்திடுங்க. ‘’

நான் நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் ஃபோன் பிஸியாக இருந்தது. பத்து நிமிடம் முயற்சி செய்தேன். பத்து நிமிடமும் எங்கேஜ் டோன். 

‘’சார் கிளாஸ் அவரோடதுதான். எனக்கு கன்ஃபார்மா தெரியும். எடுத்துட்டு போங்க ‘’ என தீர்மானமாகச் சொன்னார். 

நான் அவருக்கு நன்றி சொல்லி கிளாஸை எடுத்து வந்தேன். வீட்டுக்கு வந்ததும் நண்பரின் ஃபோன் வந்தது. 

‘’சார் ! நீங்க மிஸ் பண்ண பொருள் ஒன்னு என்கிட்ட இப்ப இருக்கு. என்னன்னு சொல்லுங்க’’ என்றேன். 

அவருக்கு நினைவுக்கு வரவில்லை. 

‘’உங்களோட சன் கிளாஸ்’’ என்றேன். 

பின்னர் நடந்ததை சொன்னேன். 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்கிறாள் தமிழ் மூதாட்டி.