Saturday, 26 April 2025

ஒரு சிறிய கார்

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் புதிதாக ஒரு சிறிய கார் வாங்கி அதனைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அவர் எந்த விஷயத்தையும் தீர்க்கமாக யோசித்துக் கூறுபவர். எந்த விஷயத்திலும் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அவரால் கூறப்படும் விஷயங்களை என்னால் மறுக்க முடியாது. சிறிய கார் குறித்து யோசித்தேன்.  

என்னிடம் ஒரு மாருதி ஆம்னி இருக்கிறது. அந்த வாகனத்தின் வயது 20 ஆண்டுகள். என்னிடம் 17 ஆண்டுகளாக இருக்கிறது. அது சிறிய வாகனம் தான். எங்கள் ஊரில் கடைவீதியில் வாகனம் பார்க் செய்வது என்பது பெரும் பாடு. முக்கியமான சாலைகள் ஒரு வழிச்சாலைகள். ஊரில் காரில் செல்வது என்றால் எந்த இடத்துக்கும் சுற்றிக் கொண்டு செல்வது என்பதே அதன் பொருள். முன்னர் சிதம்பரம் செல்லும் சாலையும் கும்பகோணம் செல்லும் சாலையும் வளைந்து வளைந்து செல்லும். ஊரிலிருந்து வடக்கிலும் மேற்கிலும் 40 கி.மீ காரில் பயணிப்பது என்பது இலகுவான செயல் அல்ல. எனினும் இப்போது சாலைகள் அகலமாக்கப்பட்டு பெரிய நான்கு வழிச்சாலைகள் இந்த இரு திசையிலும் அமைந்து விட்டன. 

எனது நண்பர் ஒருவர் மாவட்டத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் இருக்கும் சிறைக்கைதிகளுக்கு யோகா வகுப்பை தன்னார்வத்துடன் நடத்துகிறார். அதற்கு தேவையான புரொஜெக்டர், ஸ்கிரீன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல எனது ஆம்னி வாகனம் வசதியாக இருக்கிறது என்று கூறினார். அந்த நற்செயலுக்குப் பயன்படட்டும் என நண்பரிடம் வாகனத்தை அளித்துள்ளேன். 

தொழில் நிமித்தம் என்று பார்த்தால் எனக்கு இரு சக்கர வாகனமே வசதி. சிமெண்ட் கடை மற்றும் ஹார்டுவேர் கடைக்குச் செல்வதே பணி இருக்கும் போது முக்கிய வேலையாக இருக்கும். கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றாலும் இரு சக்கர வாகனமே வசதி. 

ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளுக்குச் செல்லவும் இரு சக்கர வாகனமே வசதி. எந்த சிறு சந்துகள் மற்றும் சிறு சாலைகளிலும் செல்ல முடியும். நமது வருகை எவருடைய கவனத்தையும் ஈர்க்காது. 

இரு சக்கர வாகனத்தை இயல்பாக ஒரு மரத்து நிழலில் நிறுத்தி விட்டு அந்த பகுதியின் இயல்பை அவதானிக்க நடந்து சஞ்சரிக்கலாம். இத்தனை வசதிகளை இழப்பதா என என் மனதில் கேள்வி. 

அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதால் நண்பர் இப்படி ஒரு யோசனையைக் கூறியுள்ளார். அது என் பாதுகாப்பு கருதி கூறப்பட்ட ஆலோசனை. எனவே நண்பரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு எனது பாதுகாப்பு கருதி இனி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் கட்டாயமாக அணியப் போகிறேன். 

சிறிய கார்கள் என்ன விலை விற்கின்றன என இணையத்தில் தேடினேன். சி.என்.ஜி எரிபொருள் பயன்படும் கார்களாகத் தேடினேன். டாடா பஞ்ச், ரினால்ட் கிவிட் ஆகிய வண்டிகள் விருப்பப் பட்டியலில் உள்ளன. No decision is also a decision என்று கூறுவார்கள். இம்முறையும் அம்முடிவாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது என உள்ளுணர்வு கூறுகிறது.