எனது நண்பர் ஒருவர் மும்பையில் பணிபுரிகிறார். ஊரில் அவர் ஒரு சொத்தை வாங்க விரும்பினார். அந்த சொத்தினை வாங்க வங்கிக்கடன் ஏற்பாடுகளை நான் ஒருங்கிணைத்தேன். அவர் மும்பையில் இருப்பதால் உள்ளூர் வங்கி கோரும் சொத்து குறித்த விபரங்களை நானே திரட்டி அளித்தேன். அவரது மொத்த வருட வருமானம் அரை கோடிக்கும் மேல். மாத சம்பளப் பட்டியல் அதனைக் காட்டியது. நண்பர் 50 லட்சம் வங்கிக் கடனாக எதிர்பார்த்தார். வங்கி அவருடைய ஊதிய ஆவணங்களைப் பரிசீலித்து இரண்டு கோடி ரூபாய் வரை கடன் அளிக்க முடியும் என்றனர். நண்பருடைய மாத ஊதியப் பட்டியல் வங்கி நடைமுறைகளை மிகவும் எளிதாக்கி விட்டது. வங்கியின் ஊழியர்கள் அந்த ஊதியப்பட்டியலை ஒவ்வொருவரும் வியப்புடன் நோக்கி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நான் அதில் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். நண்பரின் ஆண்டு வருமானம் அரை கோடிக்கு மேல் என்பதால் அவர் செலுத்தும் வருமான வரி ஆண்டுக்கு பன்னிரண்டு லட்சம் என்பதாக இருந்தது. அவரது நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்ச ரூபாயை வருமான வரி பிடித்தம் செய்கிறது. வங்கி ஊழியர்கள் என்னிடம் ‘’சார் ! உங்க ஃபிரண்டு மாசம் இன்கம் டாக்ஸே ஒரு லட்சம் கட்டுரார்’’ என்றார்கள்.
எனக்கு இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு ஐ.டி கம்பெனி நடத்துகிறார். மதிப்பு மிக்க ஒரு சொத்தைக் குறித்துக் கூறி அதனை வாங்குமாறு கூறினேன். அந்த சொத்தின் பரப்பும் மிக அதிகம். விலையும் அவ்விதமே. நண்பர் என் பரிந்துரையை ஏற்று வாங்கி விடலாம் என முடிவு செய்தார். நான் அவரிடம் ‘’இந்த சொத்தை வாங்கி அதனை இவ்விதமாகப் பிரித்து விற்றால் வாங்கிய தொகையைப் போல் இரு மடங்கு கிடைக்கும். மொத்த செயல்பாடுகளையும் ஒரு வருடத்தில் முடித்து விடலாம் ‘’ என்று கூறினேன். அவர் சொத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினாரே தவிர அதனை விற்பனை செய்வதில் அவருக்கு பெரிய ஆர்வமில்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
மனதில் இந்த விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்த போது மும்பை நண்பரின் ஊதியப் பட்டியல் கதை என் நினைவுக்கு வந்தது. ஐ டி கம்பெனி உரிமையாளரிடம் உள்ள தொகை முழுவதும் அவரிடம் வங்கி டெபாசிட் ஆக உள்ளது. அவர் நடத்துவது ஐ டி நிறுவனம் என்பதால் அவருடைய எல்லா பரிவர்த்தனைகளும் வங்கிக் கணக்கின் வழியாகவே நடக்கின்றன. நம் நாட்டில் வங்கிகள் தங்கள் கணக்கில் இருக்கும் பணத்துக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி அளிக்கின்றன. அந்த வட்டியும் வருமானமாகக் கணக்கிடப்படும். அவர் ஆண்டு லாபத்துடன் இந்த வட்டி வருமானமும் சேரும். அத்தொகையில் 30 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். அவ்வாறெனில் வங்கிக் கணக்கில் அவர் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டி என்பது மிக மிகக் குறைந்து விடும்.
விலை மதிப்பு மிக்க இடத்தை வாங்கி அதனை தன் வசம் வைத்திருந்து எவ்வளவு காலம் தள்ளி விற்பனை செய்கிறாரோ அந்த அளவு அவருக்கு லாபம். நிலம் வாங்குவதை அவர் வங்கி அளிக்கும் வட்டியுடன் ஒப்பிட்டே செய்வார். வாங்கி ஒரு ஆண்டில் இரு மடங்கு லாபம் கிடைப்பதை விட வாங்கி ஐந்து ஆண்டில் மூன்று மடங்கு லாபம் கிடைப்பதே அவருக்கு மேலும் உகந்தது.
ஒரு விஷயத்தை மைக்ரோவாகக் காண்பதற்கும் மேக்ரோவாகக் காண்பதற்கும் உள்ள வேறுபாடு !