ஊருக்குப் பக்கத்தில் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் விற்பனைக்கு வருகிறது. நான்கு நாட்கள் முன்பு அந்த இடம் குறித்து என் கவனத்துக்கு வந்தது. இடத்தை நேரில் சென்று பார்த்தேன். எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. அதனை வாங்கி மனை அனுமதி பெற்று மனைப்பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பெரும் முதலீடு தேவைப்படும் இடம் அது. எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். தேவைப்படும் தொகையில் பாதியை தன்னால் முதலீடு செய்ய முடியும் என்று கூறினார் அவர். மீதி பாதி முதலீட்டினை எனது இன்னொரு நண்பரிடம் கேட்கலாம் என எண்ணினேன். அந்த நண்பரை சந்தித்து நீண்ட மாதங்கள் ஆகியிருந்தன. எனக்கு நண்பர்கள் பலர் உண்டு. பலரை பல மாதங்கள் பல ஆண்டுகள் கூட சந்திக்காமல் பேசாமல் இருப்பேன். இருப்பினும் சந்தித்தால் தினமும் சந்தித்து உரையாடும் நண்பர்களைப் போல பேசிக் கொண்டிருப்பேன். அது பழகக் கூடிய ஒரு விஷயம் தான். ஒரு நபரை நாம் புரிந்து வைத்திருக்கும் விதம் சரியாக இருக்குமென்றால் எவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பின்னும் அவர்களுடன் சகஜமாக இணைந்து கொள்ள முடியும். நான் சந்திக்கச் சென்ற நண்பர் சென்னையில் எல்.ஐ.சி கட்டிடம் அருகே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி நடத்துகிறார். முன்னர் அவருடைய நிறுவனம் கிண்டி தொழிற்பேட்டையில் இருந்தது. அப்போது அவருடைய அலுவலகத்திற்கு சென்றிருக்கிறேன். அது சிறிய அலுவலகம். ஊழியர்கள் பத்து பேர் இருப்பார்கள். இப்போது அவர் நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர் அலுவலகம் வாடகைக்கு இயங்குகிறது என எண்ணியிருந்தேன். உரையாடலின் போது அந்த கட்டிடம் தனக்கு சொந்தமானது என்று கூறினார்.
எனது வழக்கப்படி சென்னை செல்லும் போது எனது இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே வைத்து விட்டு மெல்ல நடந்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ஜங்ஷனுக்கு பஸ் பிடித்து ரயிலின் நேரத்துக்கு 20 நிமிடம் முன்பு ரயில் நிலையம் சென்றடைந்தேன். காலை 7.45க்கு ரயில் புறப்பட்டது.
எஸ். ராமகிருஷ்ணனின் ’’வீடில்லா புத்தகங்கள்’’ என்ற நூலை மட்டும் கையில் வைத்திருந்தேன். எஸ். ரா பழைய புத்தகக் கடைகளில் வாங்கிய அரிதான நூல்களைக் குறித்து எழுதியிருந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். எனக்கு புத்தகம் வாசிப்பது பிடிக்கும். அதிலும் புத்தகங்களைக் குறித்த புத்தகம் என்பது மிகவும் பிடித்தமானது.
அமெரிக்காவில் கருப்பினக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திய மேரி மெக்லியூட் பெத்யூன் குறித்து எழுதியிருந்ததைப் படித்தது மிக உணர்ச்சிகரமாக இருந்தது. தனிநபராக முயன்று ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் மேரி. பள்ளியைத் தொடர்ந்து நடத்த நகரின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்பு மணியை அழுத்தி கதவைத் திறந்து வருபவர்களிடம் தனது பணி குறித்து கூறி உதவி கேட்கிறார். பலர் முடியாது என மறுக்கின்றனர். ‘’எனது பேச்சை இவ்வளவு நேரம் கேட்டதற்கு நன்றி’’ எனக் கூறி அடுத்த வீடு நோக்கி செல்கிறார் மேரி. இந்த சம்பவத்தை வாசித்த போது மேரி ஏன் இல்லை என்று சொன்னவர்களுக்கும் நன்றி கூறினார் என யோசித்துப் பார்த்தேன். ஒருவர் நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார் என்பதால் நமது எண்ணங்களும் கோரிக்கைகளும் செயல் திட்டங்களும் கேட்பவரைச் சென்றடைகின்றன. அது ஒரு துவக்கம். இன்று மறுத்தவர் நாளை நாம் சொல்வதைக் கேட்கலாம் ; நாளை நம்முடன் இணையலாம். அதற்கான பல சாத்தியக்கூறுகளை ஒரு சிறிய உரையாடலால் உருவாக்க முடியும். மேரி அதற்காகத்தான் நன்றி கூறியிருப்பார் எனப் புரிந்து கொண்டேன். புத்தகத்தில் வாசிக்கும் ஒரு வரி என்னை இவ்விதமாக பல சஞ்சாரங்களுக்கு இட்டுச் செல்லும். மேரி தனது கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவுக்கு தனது அன்னையை அழைக்கிறார். அங்கே அவரிடம் பட்டம் பெறும் 400 குழந்தைகளைக் காட்டி ‘’நான் 400 குழந்தைகளைப் பெற்றிருக்கிறேன்’’ என்று கூறுகிறார்.
கணித மேதை ஸ்ரீநிவாஸ ராமானுஜம் குறித்த ‘’அனந்தத்தை அறிந்தவன்’’ என்னும் நூல் குறித்து எழுதியிருந்த கட்டுரையை ஆர்வமாக வாசித்தேன். மார்டிமர் அட்லர் எழுதிய ‘’How to read a book'' என்ற கட்டுரையும் விருப்பமாக படித்தேன். அருண் ஷோரி எழுதிய ''Does he knows a mother's heart?'' என்ற நூல் குறித்த கட்டுரை ஆழமான துயரொன்றின் வலியை உணர வைத்தது. சென்னை செல்வதற்குள் 230 பக்கம் கொண்ட நூலில் 160 பக்கங்களை வாசித்திருந்தேன். 12.30க்கு தாம்பரம் சென்றடைந்தேன். அங்கிருந்து மின்சார ரயிலில் மீனம்பாக்கம் சென்றேன்.
சென்னை மெட்ரோ ரயிலேறி எல்.ஐ.சி சென்றேன். மெட்ரோவில் பயணித்த நேரத்திலும் மீதி இருந்த 70 பக்கங்களில் பத்து பக்கத்தை வாசித்தேன். எல்.ஐ.சி சென்றதும் அங்கே இருந்த பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தின் விளம்பரப் பதாகை ஒன்றைக் கண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்னால், நான் சென்னை அமெரிக்கன் நூலகத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஊரிலிருந்து அந்த நூலகத்துக்கு ஃபோன் செய்து அவர்களின் கேட்டலாக்-கில் உள்ள ஏதேனும் ஒரு புத்தகத்தைக் கேட்டோம் என்றால் நமக்கு அதனை கூரியரில் அனுப்பி வைப்பார்கள். நாம் அதனை வாசித்து விட்டு மீண்டும் கூரியரில் அனுப்பி விட வேண்டும். அல்லது சென்னை செல்லும் போது அளித்து விட வேண்டும். நான் பல புத்தகங்களைக் கூரியரில் பெற்று வாசித்து விட்டு மீண்டும் கூரியரில் அனுப்பியிருக்கிறேன். ரேச்சல் கார்சனின் ‘’தி சைலண்ட் ஸ்பிரிங்’’ என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது.
ஞாயிறன்று இரவே நண்பருக்கு மின்னஞ்சலில் இடத்தின் வாங்கும் விலை, அப்ரூவல் செலவு, சாலை அமைக்க ஆகும் செலவுகள், அப்ரூவல் பெற தேவைப்படும் கால அளவு, இடம் விற்பனைக்குத் தேவைப்படும் காலம் , உத்தேச லாபம் ஆகியவற்றை விரிவாக ஒரு அறிக்கையாக அனுப்பி வைத்திருந்தேன். நேரில் சந்திப்பது சூழலையும் சூழ்நிலையையும் அவதானிக்க ஒரு வாய்ப்பாக அமையும். நண்பரின் அலுவலகம் பெரிய கட்டிடம். எளிதில் கண்டடைந்தேன். ரொம்ப நாட்களுக்குப் பின் நண்பரைச் சந்தித்தது மகிழ்ச்சி. ரொம்ப சந்தோஷத்துடன் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அவரது ஊழியர்கள் சிலர் அவருடைய குறிப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். முக்கிய வேலை என்றால் அதனை மேற்கொள்ளுங்கள் ; நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டார். முழுக்க எனக்கான நேரம் என்று சொன்னார். மின்னஞ்சலில் அறிக்கையாக அளித்ததை நேரடியாகவும் விளக்கினேன். அவர் நண்பர் ஒருவருக்கு தனது ஐ-ஃபோனிலிருந்து ஃபோன் செய்தார். அவரும் விபரம் கேட்டுக் கொண்டார். ஃபோன் ஸ்பீக்கரில் இருந்தது. நான் தான் அவரிடம் விபரம் சொன்னேன். ஐ - ஃபோனில் குரல் பிசிறில்லாமல் கேட்கிறது என உணர்ந்தேன்.
நண்பர் என்னை அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவர் ஹோண்டா சிட்டி கார் பிரியர். கடந்த 15 ஆண்டுகளில் 3 கார் மாற்றியிருக்கிறார். ஒரு ஹோண்டா சிட்டியைக் கொடுத்து விட்டு இன்னொரு ஹோண்டா சிட்டி என. ஹோட்டலில் பட்டர் ரொட்டியும் பன்னீர் பட்டர் மசால், கோபி மஞ்சூரியன் ஆர்டர் செய்தோம். உணவு சிறப்பாக இருந்தது.
மீண்டும் அலுவலகம் வந்து உரையாடிக் கொண்டிருந்தோம். நண்பர் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருந்தார். முதலீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. நண்பரிடமிருந்து விடை பெற்றேன். மீண்டும் எல்.ஐ.சி மெட்ரோ - மீனம்பாக்கம். அங்கிருந்து தாம்பரம். தாம்பரத்தில் மாலை 6.10க்கு தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் சேவை துவங்கி ஒரு மாதம் ஆகிறது. பிரதமர் ராமேஸ்வரத்தில் இந்த ரயிலைத் துவங்கி வைத்தார்.
ரயிலில் எனக்கு எதிரில் அமர்ந்திருவர் கணிதத்தில் பட்டம் பெற்றவர். அன்று அவர் தனது பி. எச் டி ஆய்வை சமர்ப்பித்து நேர்காணலுக்குப் பின் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவருடன் விழுப்புரம் வரை கணிதம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். ஆய்லர் சீரிஸ், ஃபிபினோசி சீரிஸ் என நான் பொறியியலில் படித்ததை நினைவு கூர்ந்து கொண்டிருந்தேன். அவர் விழுப்புரத்தில் இறங்கிக் கொண்டார். ‘’வீடில்லா புத்தகங்களின்’’ மீதி இருந்த பக்கங்களை கடலூர் வருவதற்குள் வாசித்து முடித்தேன். இரவு 10.30க்கு ரயில் ஊருக்கு வந்தது. இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.