Thursday, 1 May 2025

நிலப்பிரபுத்துவ காலகட்டம் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஒரு மாநகரின் கடைவீதியில் அமைந்திருக்கும் ஒரு ஏக்கர் பரப்பு கொண்ட மனை அது. அதன் சுற்றுச்சுவரின் தோற்றமும் அதில் இருந்த இரும்பாலான நுழைவாயில் கதவும் அவை அமைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டாவது ஆகியிருக்கும் என்பதை உணர்த்தின. அங்கே நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்ற போது நண்பர் ‘’ஒரு இடம் ரொம்ப வருஷமாக காலிமனையாகவே இருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டார். நண்பர் ஆர்வமாகக் கூறுகிறாரே அதனைப் பார்ப்போம் என அவருடன் சென்றேன். அந்த இடத்தை மாநகரின் இதயம் என்றே சொல்ல முடியும். பிரதான கடைவீதி, ரயில்வே சந்திப்பு, ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், பேருந்து நிலையம் என அனைத்துமே அந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருந்தன. கோடிக்கணக்கான ரூபாய் பெருமானம் கொண்ட சொத்து அது. இத்தனை ஆண்டுகள் எப்படி அந்த மாநகரின் வணிகர்கள் அதை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளாமல் இருந்தார்கள் என்பது வியப்பே. அந்த இடம் என் நினைவுகளில் எங்கோ ஒரு மூலையில் இருந்ததே தவிர எனது முக்கிய கவனத்தை விட்டு அகன்று விட்டது. சென்ற வாரம் ஐ.டி கம்பெனி வைத்திருக்கும் எனது நண்பரைக் காணச் சென்ற போது கூட அவருக்கு வேறு ஒரு ஊரின் இடத்தினைக் குறித்து எடுத்துரைக்கவே சென்றேன். ஊர் திரும்பியதும் இந்த மாநகரின் இடம் என் நினைவுக்கு வந்தது. ஒரு ஏக்கர் இடம் என்பது நினைவில் இருந்தது. எவ்வளவு விலை என்பது என் நினைவில் இல்லை. மீண்டும் அந்த இடத்தை நேரில் பார்க்கலாம் என அங்கு சென்றேன். ஒரு இடத்துக்கு நேரில் சென்றால் அந்த இடம் ஒவ்வொரு முறையும் சில சங்கேதங்களை அளிக்கும் என்பது ஒரு தொழில்முறை புரிதல். அந்த இடத்துக்கு நேரில் சென்று அதன் சுற்றுச்சூழலை அவதானித்தேன். அந்த இடத்தின் அண்டை வீட்டுக்காரர்களிடம் அந்த இடம் யாருக்கு உரிமையானது ; அவர்களுடைய முகவரி அவர்களுக்குத் தெரியுமா என விசாரித்தேன். அந்த கடைத்தெருவில் ஒரு கட்டுமானப் பொறியாளர் இருந்தார். அவர் ஏதும் அந்த இடம் குறித்து ஏதேனும் அறிந்திருக்கிறாரா என்று கேட்டேன். ‘’ சார் ! இந்த இடத்துக்கு என்ன மார்க்கெட் வேல்யூவோ அதான் கைடு லைன் வேல்யூவும். இவ்வளவு பெரிய இடத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கற பையர் ரொம்ப கம்மி’’. சிலரிடம் விசாரித்ததிலிருந்து உரிமையாளரின் தொடர்பு எண்ணைப் பெற்றேன். அந்த இடத்துக்கு எதிர்சாரியில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அதன் நிழல்பரப்பில் நின்றவாறு அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தேன். 

‘’வணக்கம். என்னோட பேர் பிரபு. கன்ஸ்ட்ரக்‌ஷன் என்னோட தொழில். நான் இப்ப உங்களோட ஒரு ஏக்கர் மனைக்கு பக்கத்துல இருந்து பேசறன். உங்க இடத்தோட நெய்பர் உங்க நம்பர் கொடுத்தாரு. உங்க இடம் ஸேல் பண்றதா?’’

‘’ஆமாம். ஸேலுக்கு இருக்கு’’

‘’என்னோட ஃபிரண்ட் ஒருத்தர் ஐ.டி கம்பெனி வச்சிருக்காரு. அவர் ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ண விருப்பமா இருக்காரு. அவருக்கு இந்த இடம் பொருத்தமா இருக்கும்னு என் மனசுக்கு படுது.இடத்தோட விபரங்கள் சொல்றீங்களா?’’

இடத்தின் நீள அகலம் , பரப்பு, விலை ஆகியவற்றைச் சொன்னார். 

‘’உங்களை நேரில் பாக்கணும்’’ என்றேன். 

‘’இப்ப சென்னையில இருக்கன். இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு வந்துடுவன். ஃபோன் பண்ணிட்டு வாங்க’’

அவரது வீடு இன்னொரு மாநகரில் இருந்தது. இரண்டு நாட்களில் அவரைக் காணச் சென்றேன். 

அவரது வீடு இருந்த மனை ஒரு ஏக்கர் பரப்பு கொண்டதாக இருக்கும் எனத் தோன்றியது. வீட்டின் முகப்பு குறைந்தது 200 அடி அகலமாகவது இருக்கும். அந்த வீடு கட்டி குறைந்தபட்சம் 125 ஆண்டுகளாவது இருக்கும் என அனுமானித்தேன். அப்போதே தரைத்தளம் முதல்தளம் எனக் கட்டியிருக்கிறார்கள். ரெட் ஆக்சைடின் பளபளப்பு கொண்ட ஃபுளோரிங். ஒன்றே கால் அடி அகலம் கொண்ட சுவர்கள். அங்கிருந்த அறைக்கலன்கள் கூட நூறாண்டு காலம் தொன்மையானவை எனத் தோன்றியது. அந்த வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த இடம் நிறைய காளை மாடுகள் கட்டப்பட்டிருந்த இடம் என்று தோன்றியது ; இப்போது அங்கே மாட்டு வண்டிகளோ மாடுகளோ இல்லை என்றாலும் கூட அவை அவற்றுக்கான இடம் என்றே மனம் எண்ணியது. 

அந்த வீட்டின் பணியாளர் என்னை வீட்டினுள் அழைத்துச் சென்றார். வீட்டின் உரிமையாளர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருக்கு வயது எண்பது இருக்கக் கூடும். அப்போது தான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன் ; அந்த வீட்டில் அவர் மட்டுமே தனித்திருக்கிறார். 

சோஃபாவில் அமர்ந்திருந்த நான் அவரிடம் என்னுடைய விசிட்டிங் கார்டை அளித்தேன். அவர் அதனைக் கண்டார். 

‘’பெரிய புராணத்தோட முதல் வார்த்தையை உங்க இ-மெயில் ஐ.டி யா வச்சிருக்கீங்க. வெரி நைஸ்’’ என்றார். 

அவருக்கு தமிழிலக்கிய அறிமுகம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்‘’அந்த வார்த்தை ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தத்துலயும் இருக்கு. கம்பன் உலகம் யாவையும் னு தன்னோட காவியத்தை ஆரம்பிக்கிறான் ‘’  

பேச்சு கம்பராமாயணம் குறித்து திரும்பியது. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த உரையாடல் ஒரு நற்துவக்கமாக அமைந்தது. 

இடத்தின் விபரங்கள், விலை ஆகியவற்றைக் கூறினார், சொத்து அவருடைய தகப்பனார் வாங்கியது. அவருக்குப் பின் அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சொந்தமாகிறது. எல்லாருமே சென்னையில் இருக்கிறார்கள். அவரும் சென்னையில் தான் இருக்கிறார். பதினைந்து நாளுக்கு ஒரு முறை ஓரிரு நாள் இங்கே வந்து விட்டு செல்வார். இந்த முறை ஒரு வாரம் இங்கே இருப்பார். அதன் பின் 15 நாட்கள் ஊட்டியில் இருக்கும் தனது எஸ்டேட்டில் இருப்பார். எனது நண்பரை இங்கே அழைத்து வந்தாலும் பேசிக் கொள்ளலாம் அல்லது ஊட்டிக்கு அழைத்து வந்தாலும் பேசிக் கொள்ளலாம் என்றார். 

அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். 

அவர் வீட்டிலிருந்து வீதியில் இறங்கி பேருந்து நிலையம் நோக்கி நடந்த போது 1900ம் ஆண்டிலிருந்து 2025ம் ஆண்டுக்கு வந்தது போல் இருந்ததை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டேன்.