உலகில் ஊடகப் பெருக்கம் அதிகம் இல்லாத ஒரு காலம் இருந்தது. குழந்தைகள் வீட்டு மனிதர்களுடன் நெடுநேரம் இருந்து மொழியும் காரியங்களும் பயின்ற ஒரு காலம். அக்காலகட்டத்தின் கதை தி.ஜா வின் ’’பாப்பா’’.
ஒரு வீட்டில் எட்டு வயது பெண் குழந்தை இருக்கிறாள். அவளது தந்தை உத்யோக நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அவர் சென்ற அன்று இரவு குழந்தையும் அன்னையும் தனித்து வீட்டில் இருக்கும் போது ஒரு திருடன் அந்த வீட்டில் நுழைந்து விடுகிறான். திருடன் நுழைந்ததை பெண் குழந்தை பார்த்து விடுகிறாள். தூங்குவது போல் நடிக்கிறாள் அந்த குழந்தை. பாப்பாவின் அன்னையை கட்டிப் போட்டு விட்டு வீட்டில் பண்டங்கள் இருக்கும் அறைக்குச் செல்கிறான் திருடன். அந்த நேரத்தில் குழந்தை எழுந்து சென்று அந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அண்டை வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி அழைத்து வருகிறாள். ஊராரிடம் சரண் அடைகிறான் திருடன். அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாப்பாவும் ஒரு சாட்சி. அவனுக்கு தண்டனை தரப்படுகிறது. பாப்பா மனதில் இப்போது உள்ள கேள்வி என்னவெனில் அவன் திருட வந்தான் ; ஆனால் திருட சந்தர்ப்பம் நேரவில்லை; பிடிபட்டுவிட்டான். அவ்வாறெனில் அவனை ஏன் மன்னிக்கக் கூடாது என்பது.