நான் கைக்குழந்தையாக
பார்த்த பல குழந்தைகள் இன்று இளைஞர்களாக இருக்கின்றனர். எனினும் என்னுடைய உணர்வில்
அவர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். என் அகம் அவர்களை குழந்தைகளாக எண்ணுவதை அவர்களிடம்
கூறினால் தாங்கள் இப்போது குழந்தைகள் இல்லை என்று சொல்வார்கள். தங்கள் குழந்தைப்பருவத்தை
இன்னும் நான் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பதாகவும் அதை எப்போதும் நினைவுகூர்வதாகவும்
சொல்வார்கள். இந்திய மரபில் சிவகுமாரனான முருகன் இன்னும் குழந்தையாகத்தானே நினைக்கப்படுகிறான்.
மூத்த பிள்ளை விநாயகன் பிள்ளையாராகத்தானே எண்ணப்படுகிறான். ஆயர்பாடியில் வளர்ந்த சிறுவனைத்
தானே இன்னும் நாம் வணங்குகிறோம். குழந்தைகளின் உள்ளங்கள் படைப்பூக்கம் கொண்டவை என்பதை
நான் உணர்ந்திருக்கிறேன். எனவே குழந்தைகள் உடனிருப்பதையும் அவர்களுடன் உரையாடுவதையும்
நான் விரும்புவேன். அவ்வகையில் என்னுடைய நினைவில் இருக்கும் சில சம்பவங்களைக் குறித்து
எழுத விரும்பினேன். இந்த சம்பவங்களில் பல குழந்தைகள் இருக்கின்றன. எல்லா குழந்தைகளும்
ஒன்று தான் என்றும் தோன்றுகிறது.
எங்கள் பகுதிக்கு
புதிதாக ஒரு தம்பதி குடி வந்தனர். அவர்களுக்கு மகவு பிறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.
ஒரு வாரக் குழந்தையிலிருந்து கையில் தூக்கி வளர்த்த செல்வன் அவன். நாளின் பெரும்பாலான
பொழுதுகள் எங்கள் வீட்டிலேயே இருப்பான். உணவுண்பது உறங்குவது எல்லாம் இங்கேயே. அவனுடைய
அம்மா ஒரு ஹெர்குலிஸ் சிறிய உயரம் கொண்ட சைக்கிள் ஒன்று வைத்திருந்தார்கள். அவன் கைக்குழந்தையாக
இருக்கும் போதே அதன் பின் இருக்கையில் அமர வைக்கப்படுவான். சக்கரத்தினுள் கால் விட்டு
விடாமல் இருக்க சைக்கிள் சக்கரத்தையொட்டி ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதில்
அமர்ந்து கொண்டு அமைதியாக வருவான்.
ஒருமுறை அவன்
குடும்ப உறுப்பினர்களுடன் வைத்தீஸ்வரன் கோவில் சென்றிருந்தோம். அப்போது அவனுக்கு இரண்டு
வயது இருக்கலாம். அவனுக்கு ஒரு எள்ளடை வாங்கித் தந்தோம். சிறு குழந்தை என்பதால் கோயிலின்
பெரிய பரப்பில் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தான். சட்டென கணிசமான தூரம் சென்று
விட்டான். எங்கள் கவனம் அவன் மேல் இருந்தது. அவன் எங்கு இருக்கிறான் என நாங்கள் கண்காணித்துக்
கொண்டிருந்தோம். சட்டென வெகு தொலைவு சென்று விட்டதால் அவன் பார்வை எல்லைக்குள் நாங்கள்
இல்லை. கோயிலில் நிறைய கூட்டம். நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவன் அறிந்தவர்கள்
எவரும் இல்லை. இடம் தெரியாததால் எங்களை நோக்கி வருவதற்கு பதிலாக விலகிச் சென்றவாறு
இருக்கிறான். சில கணங்கள். அவன் அழவில்லை. அவனது கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.
ஒரு இடத்தில் நின்றான். தன் கையில் இருந்த எள்ளடையை மெல்ல சுவைத்தான். அப்போது நாங்கள்
அவன் முன் சென்று விட்டோம். அவனை அள்ளி தூக்கிக் கொண்டோம்.