அவன் எப்போதும் எங்கள் வீட்டில் தான் இருப்பான். தேனீர் அவனுக்கு மிகவும் பிரியமான பானம். நாளின் பெரும்பகுதி எங்கள் வீட்டில் இருந்து விட்டு மாலை அல்லது இரவு அவனது அன்னை வந்து அழைத்தாலும் அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் இங்கேயே இருக்கிறேன் என்று கூறுவான். அரிச்சுவடி புத்தகத்தில் அம்மா ஆடு இலை ஈ என்று இருக்கும் ; அவன் அத்தை ஆடு இலை ஈ என்று கூறுவான். என்னை அண்ணன் அண்ணன் என ஓயாமல் அழைத்துக் கொண்டேயிருப்பான். அவனை விட வயதில் பெரியவனான என்னுடன் குழந்தைப் பருவம் முதற்கொண்டு இருந்ததால் அவன் வயதில் பெரியவர்களோடு உரையாடுவதில் எப்போதும் ஆர்வமாக இருப்பான். யாருடனாவது சென்று பேசிக் கொண்டிருப்போம் என என்னை அழைப்பான். குழந்தையாயிருந்து மழலை பேசி பள்ளியில் அரிச்சுவடி பயின்று பள்ளிக்கல்வி முடித்து மருத்துவத்தில் பட்டம் பெற்று மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பும் நிறைவு செய்து இப்போது ஒரு பெரும் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணி புரிகிறான் அந்த தம்பி. அவனுடைய மனைவியும் ஒரு மருத்துவர். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டாவது பெண் குழந்தையைக் கண்ட போது தம்பியை குழந்தையாய்ப் பார்த்தது நினைவில் வந்தது. அச்சு அசல் அவன் குழந்தையாய் எத்தகைய தோற்றத்தில் இருந்தானோ அதே போன்ற தோற்றம் கொண்டிருந்தது அக்குழந்தை.