அவன் எனது உறவினரின் குழந்தை. அவன் வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். சில நாட்கள் இருந்ததில் அவனுக்கு என்னுடன் ஊருக்கு வர வேண்டும் என்று தோன்றிவிட்டது. அவனுக்கு அப்போது இரண்டு வயது. அவன் அன்னை தந்தையைப் பிரிந்து இருந்தது இல்லை. இருந்தாலும் என்னுடன் ஊருக்கு வருகிறேன் என கூறினான். அப்போது சோழன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் வரை சென்று கொண்டிருந்தது. தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நாங்கள் ஆட்டோவில் புறப்பட்டோம் ; அவனது தந்தையும் ரயில் நிலையத்துக்கு எங்களுடன் வந்தார். உற்சாகமாக அவனுடைய அம்மாவுக்கு ஆட்டோவில் கையசைத்து விட்டு எங்களுடன் வந்தான். ரயில் நிலையத்தில் அவனது தந்தை இருந்ததால் அங்கும் உற்சாகமாக இருந்தான். ரயில் கிளம்பியது. அப்போது அவனுக்கு தந்தையைப் பிரிகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. தீவிரமாக அழ ஆரம்பித்து விட்டான். முன்பதிவு பெட்டியின் பயணிகள் அனைவருமே ஏன் ஒரு குழந்தை இவ்விதம் அழுகிறது என கரிசனத்துடன் நோக்கினார்கள். அவனை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. செங்கல்பட்டு வரை அழுகையை நிறுத்தவேயில்லை. செங்கல்பட்டு வந்து ரயில் நின்றதும் அழுகையும் நின்றது. சிரித்து விளையாடத் துவங்கி விட்டான். சக பயணி ஒருவர் ‘’அப்பாடா ! நல்ல வேளை ! செங்கல்பட்டோடு அழுகையை நிறுத்தி விட்டான். எப்படி விழுப்புரம் வரை பயணிக்கப் போகிறோம் என்று கவலைப்பட்டேன்’’ என்றார். அதன் பின்னர் ஊர் வரும் வரை சிரிப்பும் கொண்டாட்டமும் தான். ஊரில் ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருந்தான். பின் அவனை சென்னை கொண்டு சென்று வீட்டில் விட்டு விட்டு வந்தேன்.