எனது நண்பரின் சகோதரர் உடல்நலம் குன்றியிருக்கிறார். சென்ற வாரம் அவருக்கு ஒரு அறுவைசிகிச்சை நிகழ்ந்தது. அறுவைசிகிச்சைக்குப் பின்னான காலகட்டத்தில் இருக்கும் சில உடல் நல சிக்கல்கள் இப்போது அவருக்கு இருக்கின்றன. விரைவில் உடல்நலம் மீள்வார். எனினும் நண்பர் தற்போது வருத்தம் கொண்டிருக்கிறார். சகோதரரின் நலமின்மை அவரை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது. நண்பரின் வருத்தம் என்னையும் வருந்தச் செய்தது. சென்னை சென்று மருத்துவமனையில் பார்த்து விட்டு வரலாமா என யோசித்தேன். நண்பருடன் இந்த தருணத்தில் உடனிருக்க விரும்பினேன். அதை விட மேலான செயல் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்.
இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் ( காலை 3 மணி) எழுந்தேன். நீராடி காலை 3.30க்கு அமர்ந்தேன்.
காலை 3.30 லிருந்து காலை 6.30 வரை கண் மூடி மனத்துக்குள் ‘’குரு ஸ்துதி’’ ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தேன். அதிகாலைப் பொழுது இறைமையிடம் வேண்டிக் கொள்ள மிக உகந்த பொழுது. நண்பரின் சகோதரர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என இறைமையிடம் வேண்டிக் கொண்டேன். அடுத்த இரண்டு நாட்களும் இவ்விதம் வேண்டிக் கொள்ள இருக்கிறேன்.