எனது நண்பரின் குழந்தை அவன். என்னுடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பான். அப்போது அவனுக்கு மூன்று வயது. ஊரில் இருக்கும் அவன் அடிக்கடி செல்லும் ஒவ்வொரு இடத்துக்கும் எப்படி செல்வது என வழி சொல்ல அவனுக்குத் தெரியும். அப்போது அவனுக்கு இரண்டரை வயது இருக்கும். பிரி கே.ஜி படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆங்கில சண்டைப் படங்கள் பிடிக்கும். அவன் முதல் முறை சினிமா பார்த்தது என்னுடன் தான். அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் நாங்கள் வெளியே வந்ததும் அந்த கிளைமாக்ஸ் குறித்து தனது அவதானத்தைக் கூறினான். எனக்கு பெருவியப்பாக இருந்தது. மொழி பயிலத் தொடங்கியிருக்கும் இக்குழந்தை எப்படி முதல் முறை ஒரு திரைப்படம் பார்த்து விட்டு முதல் முறையிலேயே நுட்பமாக முழுவதும் உள்வாங்கியிருக்கிறான் என. பின்னர் அவன் ஒரு சில ஹாலிவுட் படங்களைப் பார்த்து விட்டு அதன் ரசிகனானான். ஊரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் ஒன்றில் மிஷன் இம்பாசிபிள் - 2 என ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தது. அதன் காலைக் காட்சிக்கு அவனை அழைத்துச் செல்ல விரும்பினேன். இன்று ஒரு சினிமாவுக்கு போகலாமா என்று அவனிடம் கேட்டேன். ஆர்வமாக சரி சரி என்றான். அவனை இரு சக்கர வாகனத்தில் முன்னால் உட்கார வைத்து 50 மீட்டர் தூரம் சென்று இடது பக்கம் திரும்பினேன். ‘’மாமா ! சினிமா தியேட்டருக்கு ரைட்ல கட் பண்ணனும்’’ என்றான். இப்படியும் வழி இருக்கு என்று கூறி அவனை அழைத்துச் சென்றேன். எந்த தியேட்டர் எந்த தியேட்டர் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தான். அங்கு சென்றால் தெரியும் என்றேன். அவன் அப்போது சில நாட்களாகத்தான் எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றிருந்தான். தூரம் செல்ல செல்ல அங்கிருக்கும் மைல்கற்களில் எழுதியிருக்கும் பெயரைப் படித்து படித்து ‘’மாமா ! என்னை இந்த ஊருக்குத் தானே கூட்டிட்டு போறீங்க’’ எனச் சரியாக அந்த ஊரைக் கேட்டு விட்டான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஊர் எப்போது வரும் எப்போது வரும் எனக் கேட்டுக் கொண்டே வந்தான். அந்த ஊரை அந்த ஊரின் சினிமா தியேட்டரை அடைந்தோம். அன்று பராமரிப்பு பணி அந்த தியேட்டரில் நடந்ததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அந்த ஊரில் சர்பத் மிகவும் பிரசித்தி. அவனுக்கு ஒரு சர்பத் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். வீட்டுக்கு வந்ததும் அவன் சொன்னான். ‘’மாமா ! இனிமே வெளியூர்ல போய் படம் பாக்கணும்னா ஓலா புக் பண்ணிடுங்க’’