கடந்த பதினைந்து நாட்களாக தொழில் நிமித்தம் நிறைய வேலைகள் இருந்தன; ஒன்றிலிருந்து இன்னொன்று என பெருகிக் கொண்டிருந்தன பணிகள். இந்த வாரம் மட்டும் சிறு இடைவெளி கிடைத்தது. அடுத்த வாரம் மேலும் அதிகமான பணிகள் இருக்கின்றன. கட்டுமானமும் ரியல் எஸ்டேட்டும் வாங்குபவர் விற்பவர் கட்டுனர் உரிமையாளர் ஆகியோர் சேர்ந்து செய்யும் பணிகள். நமது பணியை மட்டும் முழுமையாக செய்து முடித்தால் போதாது. மொத்த பணி மீதும் பணியின் முன்னேற்றம் மீதும் நம் கவனம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். மற்றவர்கள் முழுமையாக செய்து முடிக்காத செயலையும் ஊகித்து அறிந்து நாம் அதனைச் செய்து இட்டு நிரப்பிட வேண்டும். ஒத்த மனமும் ஒத்த தொழிற்பார்வையும் ஒத்த செயல்முறையும் கொண்டவர்கள் இணையும் விதமாக நம் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாறுபட்ட பார்வை கொண்டவர்களும் இணையலாம். சில பொது அடிப்படைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். நண்பர் கடலூர் சீனு ஊரில் இருக்கிறாரா எனக் கேட்டு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஐந்து நிமிடத்தில் ஒரு வார பெங்களூர் பயணத்தை முடித்து இப்போதுதான் வீடு திரும்பினேன் என பதில் அனுப்பினார். புதுச்சேரி சென்று வருவோம் என தகவல் கொடுத்தேன்.
கடலூர் சீனு என்னை விட வயதில் சில ஆண்டுகள் மூத்தவர். இலக்கிய வாசிப்பில் எனக்கும் அவருக்கும் ஒரே விதமான ரசனை உண்டு. நாங்கள் உடனிருந்தாலும் ஒன்றாகப் பயணித்தாலும் நாங்கள் பெரிதாகப் பேசிக் கொள்ள மாட்டோம். இருவரும் பெரும்பாலும் மௌனமாகவே இருப்போம். எனக்கு மனதில் இருக்கும் ஒரு கேள்வியை அவரிடம் கேட்பேன். அவர் விரிவாக பதில் சொல்வார். அந்த பதில் நான் நினைத்த பதிலாகவே இருக்கும். என் மனம் சஞ்சரித்த பகுதியை துலக்கப்படுத்தும் பதிலாக இருக்கும்.
புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டதும் அரவிந்தர் ஆசிரமம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். தமிழ் மக்களின் மனதில் அரசியல் , சமூக, பொருளாதார கருத்துக்கள் மிக அதிகமாக நிரம்பியிருக்கின்றன ; அவற்றைக் குறித்து நுட்பமாக சிந்திக்கும் இயல்போ அல்லது புரிந்து கொள்ளும் இயல்பு கொண்டதோ அல்ல தமிழ்ச் சமூகம். யாரோ கட்டமைக்கும் பரப்புரையை அவ்விதமே ஏற்றுக் கொண்டு அதனைச் சுமக்கும் இயல்பு தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கிறது என்று என அவதானத்தைச் சொன்னேன். அந்த சுபாவம் அவர்கள் அழகியல் உணர்வை இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்று சொன்னேன். இன்றைய தமிழ் சமூகத்துக்கு அழகியல் உணர்வு தேவை என்னும் விஷயத்தை முன்வைத்தேன். அவர் அதை பரிசீலித்துப் பார்த்து ஆமாம் என ஆமோதித்தார்.
ஒரு யோகி தான் வாழும் காலத்திலும் தனது காலத்திற்குப் பிறகும் மானுட வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் எது என்பதை தன் வாழ்வின் மூலம் உணர்த்துகிறார். அரவிந்தர் சன்னிதி முன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அவரது சமாதி தினமும் மலர்களால் அலங்கரிக்கப்படும் ; அகம் மலர்தல் என்ப்து அவர்களின் வழிமுறைகளில் ஒன்று. மலர்கள் அதற்கான அடையாளங்கள். இன்னும் நிறைய நேரம் இருக்க விரும்பினோம். காலை தரிசன நேரம் முடிந்து விட்டது என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம். ஆசிரமத்தின் புத்தகக் கடையில் சில நூல்களை வாங்கினோம்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த ஊரான ஓமந்தூர் புதுச்சேரிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் இருக்கிறது. அங்கே செல்வோம் எனக் கூறினேன். இருவரும் பேருந்தில் பயணமானோம். சித்திரை வெயில் அதிலும் அக்னி நட்சத்திரம் துவங்கியிருக்கும் ஆரம்ப நாட்கள் என்பதால் உஷ்ணம் எங்களை வாட்டி வதைத்து விட்டது. ஓமந்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓமந்தூரார் மணி மண்டபம் நோக்கி நடக்கும் போது நான் சீனுவிடம் சொன்னேன். ‘’சீனு ! மனித குல வரலாற்றில் மனிதன் பூமியைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும் எனக் கண்டறிந்தது மிகப் பெரிய பாய்ச்சல் அல்லவா?’’ அந்த இடமும் அந்த சூழலும் அந்த உஷ்ணமும் அதனை சிந்திக்கச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை மனிதன் தேடியிருக்கலாம். இப்போதும் அவனுக்கு நீரின் தேவை பல்லாயிரம் மடங்கு கூடியிருக்கிறது. சீனுவும் அவ்விதமே சொன்னார்.
ஓமந்தூரார் மணி மண்டபத்தில் அவரது சிலை முன் நில நிமிடங்கள் மௌனமாக நின்றோம். சோமலெ அவரைப் பற்றி எழுதிய ‘’விவசாய முதலமைச்சர்’’ என்னும் நூல் அவரது சரிதம் ஆகும். தமிழகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து அந்நூல் முழுமையாக எடுத்துச் சொல்கிறது. நான் அந்நூல் குறித்து என்னுடைய தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
மணி மண்டபத்திலிருந்து வெளியே வந்ததும் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இரண்டு சிமெண்ட் பெஞ்ச்கள் இருந்தன. ஒன்றில் நான் கொஞ்ச நேரம் கண் அயர்ந்தேன். சீனு ஆசிரமத்தில் வாங்கிய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் பேருந்தைப் பிடித்து புதுச்சேரி புறப்பட்டோம்.
பேருந்தில் நான் சொன்னேன். ‘’சீனு ! ஜனநாயக அரசியல்ல அரசாங்கம் என்பது ஒரு பெரிய கஜானா. அதுல இருக்கும் செல்வம் பெருஞ்செல்வம். எந்த சாமானியனுக்கும் அது ரொம்ப பெரிசுதான். அதுல இருந்து சிந்தற சில துளிகள் கூட செல்வத்தோட பெரிய அளவுதான். எந்த ஒரு கரப்டிவ் பொலிடீஷியனும் அது முன்னால வந்து நிக்கும் போது தன்னை ரொம்ப சின்னதா மட்டுமே ஃபீல் பண்ண முடியும். தான் ரொம்ப சின்ன ஒரு ஆளுன்னு தெரியாத உணராத கரப்டிவ் பொலிடீஷியன் கிடையாது. ஓமந்தூரார் ஒரு ஹானஸ்ட் மேன். தன்னோட சொத்து முழுசையும் தான் வாழும் காலத்திலயே சமுதாயத்துக்காக முழுசா கொடுத்துருக்காரு. இது ரொம்ப யுனீக்’’
பேருந்தில் வந்து கொண்டிருந்த போது ஒரு கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அருகே ஐந்து பேர் தரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். மது எவ்விதம் மனித மூளையை ஆக்கிரமித்து மனிதன் உடல்நிலையை அழிக்கிறது என்பதை ‘’ஆல்கஹாலிக் அனானிமஸ்’’ என்னும் 200 பக்க நூல் எடுத்துக் கூறுகிறது எனக் கூறி அந்த நூலில் தான் வாசித்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
புதுச்சேரி வந்து அங்கிருந்து கடலூர் வந்து சேர்ந்தோம். நேரம் அப்போது மாலை ஆறு மணி. நானும் சீனுவும் ஒரு திரைப்படம் பார்த்தோம். இரவு உணவு முடித்து விட்டு திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வந்தோம். ஊருக்கு செல்ல அடுத்த இரண்டு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில் நிற்காது ; அவற்றில் ஒன்றை பிடிக்க வேண்டுமானால் கடலூர் முதுநகர் செல்ல வேண்டும். நான் மூன்றாவது ரயிலைப் பிடித்துக் கொள்ளலாம் என திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனிலேயே இருக்கிறேன் எனக் கூறினேன். சீனுவை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். கடந்த பத்து நாட்களாக பயணத்தில் இருந்தவர் வீட்டுக்கு வந்து என்னுடைய குறுஞ்செய்தியைப் பார்த்ததும் சலிப்பில்லாமல் அடுத்த நாள் பயணத்துக்கும் தயாராகி விட்டார். அவரை வீட்டுக்குச் சென்று உறங்கச் சொன்னேன். சீனு சென்றதும் ரயில் நிலைய பெஞ்ச் ஒன்றில் படுத்து கண்களை மூடினேன். விழித்துப் பார்த்த போது நேரம் நள்ளிரவு 1.15. பதினைந்து நிமிடத்தில் ரயில் வந்தது. அந்த ரயில் ‘’அந்த்யோதயா’’ ரயில். அதாவது அதி வேக ரயில். எல்லா பெட்டிகளும் பொது பெட்டிகள். ரயில் கூட்டமாக இருந்தாலும் உட்கார இடம் கிடைத்தது. ஊர் வந்த போது நேரம் காலை 3.30. இந்த நேரத்தில் வீட்டுக்குச் சென்றால் எல்லாருடைய உறக்கமும் கெடும் என்பதால் ஊரின் ரயில் நிலையத்தின் பெஞ்ச் ஒன்றில் படுத்துத் தூங்கினேன். விழித்த போது நேரம் காலை 5.45. எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.