Wednesday, 7 May 2025

ஈராயிரம் தேர்ப்புரவிகள்

 நூல் : கர்மபூமி தொகுப்பாசிரியர் : டி.கே.சந்திரன் பக்கம் : 104 விலை : ரூ.130 பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், 1/28,நேரு நகர்,கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர், 641041.

ஒரு நூல் நம் இதயத்தைத் தொடுவது என்பது ஓர் அரிய நிகழ்வு. சொற்களைத் துணையாகக் கொண்டு பெருஞ்செயல் ஒன்றை நிகழ்த்துவது என்பதும் மேலும் அரிதான ஒன்று. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் எழுதாக்கிளவியாக மறை ஓதப்படுகிறது. ஓதுவிக்கப்படுகிறது. மறையொலி எழும் பிரதேசங்கள் அனைத்திலும் அதன் சப்த எல்லைகளுக்கு மிக அருகாமையில் நூற்பின் ஒலியும் கேட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. இப்போதும் கேட்கிறது. 

‘’கர்மபூமி’’ சிறுநூல். சில கடிதங்கள், சில கட்டுரைகள், சில புகைப்படங்கள் ஆகியவையே இந்நூலில் அடங்கியிருக்கின்றன. எனினும் இந்நூல் ஒரு மகத்தான கனவை மகத்தான இலட்சியவாதத்தை முன்வைக்கிறது. இந்நூலில் அச்சிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெயருமே மகத்தான பெருஞ்செயலை செய்தவர்கள் ; மகத்தான அர்ப்பணிப்பை மேற்கொண்டவர்கள்.

இந்த நூலை வாசிக்கையில் நம் மூதாதை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை நினைத்துக் கொண்டேன். அவனது காலத்தில் இந்நாட்டில் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் பெரும்பாலானவர்களாக இருந்தனர். பொழுது விடிந்ததிலிருந்து மண்ணுடன் உறவாடுபவர்கள். உழைத்து உழைத்து காய்த்துப் போனவர்கள். அன்னிய ஆட்சி அவர்களைச் சுரண்டியது. சமூகச் சூழல் அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்தது. மகாத்மா விவசாயிகளான அவர்களுக்கு மேலும் ஒரு செயல் அளித்து அவர்களைப் பகுதி நெசவாளிகளாக ஆக்கினார். குழந்தைகளை, பெண்களை, முதியவர்களை, இளைஞர்களை நெசவுக்குள் கொண்டு வந்தார். கைத்தறி நெசவுத் துணி ‘’கதர்’’ எனப்படுகிறது.  ’’கதர்’’ என்ற சொல்லுக்குப் ‘’புரட்சி’’ என்று பொருள். தேசத்தை ஒருங்கிணைக்க நெசவையும் தன் வழிமுறைகளில் ஒன்றாகக் கொண்ட புரட்சியாளர் காந்தி. 

’’கர்மபூமி’’ நூல் நாச்சிமுத்து நகர் குறித்து ஜனபதா சேவா டிரஸ்ட் குறித்து கூறிச் செல்கிறது. காந்தி என்ற விளக்கின் சுடரிலிருந்து காலகாலத்துக்கும் உருவாகி வரும் தீபங்கள் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றனர். 

நூலில் ஒரு இடத்தில் நெசவாளியான ஒரு முதியவர் தன் தறியை ஈராயிரம் தேர்ப்புரவிகள் கொண்ட தேர் என்றும் தன்னை பார்த்தசாரதி என்றும் கூறுகிறார். தன் தேரில் அமர்ந்திருக்கும் போது பிறப்புக்கு முன் தான் இருந்த நிலை என்ன இறப்புக்குப் பின் தான் அடையப்போகும் நிலை என்பதை பலமுறை உணர்ந்ததாகக் கூறும் இடம் மகத்தானது. 

நூலின் சொற்கள் அளவுக்கே அந்நூலில் இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படங்களும் முக்கியமானவை. நூல் சொல்லாத பல கதைகளை அவை கூறுகின்றன. 

உணர்வாழம் கொண்ட முக்கியமான நூல் ‘’கர்மபூமி’’