நேற்று சென்னையில் இருக்கும் எனது நண்பரான ஐ.டி நிறுவன உரிமையாளரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். முதல் நாள் எப்போது சந்திக்க வரலாம் என அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டேன். நேற்று காலை சில முக்கிய சந்திப்புகள் இருப்பதால் மதியம் 2 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியிருந்தார். முன்னரெல்லாம் 2 மணிக்கு மேல் என்றால் 2.01க்கு சென்று நிற்பேன். நேற்று 2.30க்கு அவருடைய நிறுவனத்துக்குச் சென்றேன். வெளிநாட்டிலிருந்து அவருடைய ‘’கிளைண்ட்’’ கள் வந்திருந்தனர். ‘’கான்ஃபரன்ஸ் ஹாலில்’’ அவர்களுக்கு நண்பர் வீடியோ பிரசண்டேஷனில் சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்ததை கண்ணாடி சுவர்கள் வழியே கண்டேன். நண்பரின் காரியதரிசி என்னை அந்த அலுவலகத்தின் ஒரு அறையில் அமர வைத்தார். அங்கே ஒரு வட்ட வடிவ மேஜையும் ஐந்து நாற்காலிகளும் இருந்தன. மேஜையின் நடுவே ஒரு குபேரன் சிலை இருந்தது. அதற்கு இரு மலர்கள் இடப்பட்டிருந்தன. சீன வாஸ்துவின் அடிப்படையிலான குபேரன் சிலை அது. இருப்பினும் சீனர்கள் இந்தியத் தொன்மங்களிலிருந்து குபேரனுக்கான உருவத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. இந்தியத் தொன்மங்களின் படி குபேரன் வயதானாலும் குழந்தையாகவே இருப்பவன். அடம் பிடிக்கும் குழந்தை. குபேரன் எடுப்பார் கைப்பிள்ளை. அவனது வாகனம் மனிதன். குபேரன் நர வாகனத்தில் பயணிப்பவன். என் கையில் மூன்று புத்தகங்கள் இருந்தன. ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தேன். இன்னொரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியிருந்தேன். 150 பக்கம் உள்ள அப்புத்தகத்தில் 30 பக்கங்கள் வாசித்திருந்தேன். அதனை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அளித்தனர். முழுவதும் பருகினேன். அலுவலகம் முழுதும் செண்ட்ரலைஸ்டு ஏசி என்றாலும் சென்னை வீதிகளில் கோடையில் பயணித்த தாகம் தீவிரமாக இருந்தது. முழு டம்ளரும் பருகப்பட்டிருப்பதைக் கண்டு இன்னும் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டார்கள். கொடுங்கள் என்றேன். அதனை அருந்தி விட்டு புத்தக வாசிப்பில் ஆழ்ந்து விட்டேன். இடைப்பட்ட நேரத்தில் இரண்டு பிஸ்கட்டும் பிஸ்தா, பாதாம், உலர் திராட்சை ஆகியவை கொஞ்சமும் கொண்டு வந்து தந்தனர். அவற்றை ஒவ்வொன்றாக மென்று கொண்டு நூல் வாசிப்பது மிகவும் பிடித்திருந்தது. ஒரு கோப்பையில் காஃபி கொண்டு வந்து தந்தனர். அவர்கள் அலுவலகத்தின் ஒரு பகுதியாக சிறு சமையலறை இருக்கும் என எண்ணினேன். சிறப்பான காஃபி. அந்த காஃபி தஞ்சை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் இருக்கும் உணர்வை உண்டாக்கியது. அந்த காஃபி போட்டவரை பாராட்டி சில சொற்கள் கூற வேண்டும் என்று தோன்றியது. நடுநடுவே அறைவாசியாக உடனிருக்கும் குபேரன் குறித்த உணர்வு ஏற்பட்டது. இந்திய மரபுப்படி கிழக்கு திசையின் தெய்வம் இந்திரன், மேற்கு திசையின் தெய்வம் வருணன், தெற்கு திசையின் தெய்வம் யமன், வடக்கு திசையின் தெய்வம் குபேரன். இந்த திசைகளின் தெய்வங்கள் என்றும் கூறலாம். இந்த திசைகளின் திசைக் காவலர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் என்றும் கூறலாம். குபேரனிடம் இருப்பது பெருஞ்செல்வம். எனினும் திருமகளின் உள்ளங்கையின் ஒரு ரேகைக்கு குபேரனின் முழுச் செல்வமும் ஈடாகாது. திருமகள் விஷ்ணுவின் இதயத்துக்குள் இருப்பவள். நண்பர் 4.30க்கு சந்திப்பு முடிந்து வந்தார். பின்னர் என்னுடனான சந்திப்பு தொடங்கியது. 15 நிமிடத்தில் நான் சொல்ல வந்த விஷயத்தை சொன்னேன். நண்பர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். எனது சந்திப்பின் நோக்கம் நிறைவேறியது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. நண்பருக்கு மாலை 5.30 மணி அளவில் இன்னொரு சந்திப்பு இருந்தது. அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில். என்னை அவருடைய காரில் அழைத்துச் சென்றார். நான் அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்கிறேன் என்றேன். நட்சத்திர ஹோட்டல் வரை காரில் பேசிக் கொண்டு சென்றோம். அவர் அங்கே இறங்கிக் கொண்டு கார் ஓட்டுனரிடம் என்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு விடுமாறு சொன்னார். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தேன்.