நண்பரின் கார் என்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டது. ஓட்டுநருக்கு நன்றி கூறி விட்டு பயணச்சீட்டு சாளரம் நோக்கி நடந்தேன். நான் அங்கே இருந்த போது நேரம் 5.25. மாலை 6.10க்கு தாம்பரத்தில் தாம்பரம் - இராமேஸ்வரம் ரயில் ஒன்று இருக்கிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னால் பாரதப் பிரதமர் அதனை இராமேஸ்வரத்தில் துவங்கி வைத்தார். தாம்பரத்திலிருந்து அதன் பயண மார்க்கம் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி , பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம். 6.10க்கு புறப்படும் வண்டி இரவு 10.10க்கு மயிலாடுதுறை வந்தடையும். எழும்பூரில் நேரம் இப்போது 5.25. ஏதேனும் ஓர் அதி விரைவு ரயிலில் சென்றால் மட்டுமே தாம்பரத்தில் அந்த ரயிலைப் பிடிக்க முடியும். அவ்வாறான ரயில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஹவுரா - திருச்சிராப்பள்ளி என ஒரு வண்டி இருந்தது. நேரம் 5.30. சாளரத்தில் பயணச் சீட்டு பெற்று அந்த ரயில் இருக்கும் நடைமேடைக்குச் சென்று ரயிலைப் பிடிப்பது சாத்தியம் இல்லை. எனவே சாளரத்தில் வரிசையில் நின்று மயிலாடுதுறைக்கு அதி விரைவு ரயில் என்று சொல்லி ஒரு பயணச்சீட்டு பெற்றுக் கொண்டேன். அப்போது விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி மார்க்கமாக ராமேஸ்வரம் செல்லும் விரைவு வண்டி புறப்படத் தயாராக இருக்கிறது என்ற அறிவிப்பைக் கண்டேன். அந்த நடைமேடைக்குச் சென்றேன். பொது இருக்கைகள் நிரம்பியிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் ஏதேனும் இருக்கை இருக்குமா என டி.டி.ஈ யிடம் விசாரித்தேன். எஸ் -8 பெட்டிக்கு சென்று அமருங்கள் ; வருகிறேன் என்றார். 5.50 அளவில் வண்டி புறப்பட்டது. துவக்கம் முதலே விரைவு எடுத்தது. 6.25 அளவில் தாம்பரம் சென்று சேர்ந்தது. என் அருகில் அமர்ந்திருந்தவரிடம் ‘’வேர் இஸ் மை டிரெயின் ஆப்’’ ல் தாம்பரம் - ராமேஸ்வரம் வண்டி சரியான நேரத்துக்குப் புறப்பட்டிருக்கிறதா என சோதிக்கச் சொன்னேன். அவர் சோதித்து புறப்பட்ட நேரம் சரியான நேரமே என்றார். செங்கல்பட்டிலும் நான் இருந்த வண்டி செல்வதற்குள் அந்த வண்டி புறப்பட்டு விட்டது. மேல்மருவத்தூரிலும் அவ்வாறே. அதே ஆப் ல் விழுப்புரத்திற்கு எங்கள் ரயில் போகும் நேரத்தையும் அந்த ரயில் போகும் நேரத்தையும் சோதிக்கச் சொன்னேன். அந்த ரயில் 8 மணிக்கு விழுப்புரம் செல்லும் என்கிறார்கள். எங்கள் ரயில் 8.30க்கு விழுப்புரம் செல்லும் என்றார்கள். அவர்கள் சொன்னது அந்த ரயிலின் விழுப்புரம் வருகை நேரம். புறப்பாட்டு நேரம் என்று கேட்டேன். அது 8.30. அதாவது எங்கள் ரயில் 8.30க்கு விழுப்புரம் சென்றடையும். அந்த ரயில் 8.30க்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும். அந்த ரயிலைப் பிடித்து விட்டால் நேரத்துக்கு ஊர் வந்து சேரலாம். இல்லையென்றால் விழுப்புரத்தில் அடுத்த ரயில் 10.15க்கு. ஊர் வந்து சேரம் 1.15 ஆகி விடும். எங்கள் வண்டி திண்டிவனத்தில் இருந்த போது அந்த ரயில் விழுப்புரத்தில் இருந்தது. ஜீரோ டார்க் 30 என ஒரு ஹாலிவுட் திரைப்படம். அதில் பயங்கரவாதி ஒஸாமா பின் லாடனை அமெரிக்க அதிரடிப்படை தேடிப் போவதைக் காணும் உணர்வு இருந்தது இந்த ரயில் துரத்தலில். 8.30க்கு எங்கள் ரயில் விழுப்புரம் நிலையத்துக்கு சென்று சேர்ந்தது. அங்கே திருவாரூர் மார்க்கமாக செல்லும் ரயில் நின்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு ரயிலின் கிராஸிங் க்காக காத்துக் கொண்டிருந்தது. அதில் சென்று ஏறிக் கொண்டேன். அந்த ரயில் பயணிகள் 8 மணிக்கு வந்த வண்டி இன்னும் எடுக்காமல் இருக்கிறார்கள் என அங்கலாய்த்தார்கள். நான் எனது கதையைக் கூறினேன். 8.45க்கு புறப்பட்டது. அதன் பின் அதிவேகமெடுத்து பறந்தது அந்த வண்டி . 10.10க்கு வைத்தீஸ்வரன் கோவிலைக் கடந்து விட்டது. இன்னும் 10 நிமிடத்தில் மயிலாடுதுறை என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதில் இருந்த பயணிகள். எனக்கு மட்டும் உள்ளுணர்வில் இது உழவன் வரும் நேரம் என்பது தோன்றியது. ஆனந்ததாண்டவபுரத்தில் வண்டி நின்றது. உழவனுக்காக கிராஸிங். 45 நிமிடம் ஆனது வண்டி புறப்பட. 6 கிலோ மீட்டர் தூரம். ஆனால் வந்து சேர ஐம்பது நிமிடம் ஆகி விட்டது. இரவு 11.10க்கு ஊர் வந்து சேர்ந்தது. ஒரு மணி நேரம் தாமதம். எப்படியோ எண்ணிய விதமாக ஊர் வந்து சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சி.