Monday, 16 June 2025

மூன்று நாட்கள்

 மூன்று தினங்களாக எனது உணவை நானே சமைத்து உண்கிறேன். எனது வாழ்வின் பெரும் அறிதல்களில் ஒன்று என சமையலை உணர்கிறேன். ஒட்டு மொத்த மானுடத்துக்கும் கூட அவ்வாறே இருக்கக் கூடும். தானியத்தைக் கொதிக்கும் நீரிலிட்டு அன்னமாக்கிய முதல் மானுடனும் இவ்வாறு உணர்ந்திருக்கக் கூடும். நவீன வாழ்வில் நாம் உணவுக்கென மிக அதிக நேரம் செலவழிக்கிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் உணவுப்பழக்கத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுத்து விடுகிறோம். காலை எழுந்தவுடன் தேனீருக்கு பால் தேவைப்படுகிறது. பாலுடன் சர்க்கரை சேர்க்கிறோம். பாலும் சீனியும் வயிற்றில் இருக்கும் சீரண சுரப்பிகளின் ரசாயனத்தை மாற்றியமைக்கக் கூடியவை. சீனி உடனடி குளுக்கோஸாக மாறுகிறது. உடல் அந்த குளுக்கோஸூக்கு ஏங்குவதால் நாம் அவ்வப்போது தேனீர் அருந்துகிறோம். தமிழகத்தில் நாம் அரிசி உணவுக்கு முழுமையாகப் பழகியிருக்கிறோம். ஒரு நாளின் உணவில் அரிசியின் வெவ்வேறு வகை மாதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். அரிசியை மாவாக அரைத்து அதனுடன் உளுந்தையையும் சேர்த்து மாவாக்கிப் புளிக்க வைத்து அந்த மாவை வேகவைத்து செய்யப்படும் இட்லி, அதே விதமாக சில மாறுதல்களுடன் செய்யப்படும் தோசை, பொங்கல் , மதிய உணவுக்கு அரிசிச் சோறு என ஒவ்வொரு நாளும் அரிசியின் வெவ்வேறு வகைகளை உணவாக உண்கிறோம். அரிசி உணவில் கார்போஹைட்ரேட் அதிகம். உணவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்கள் நம் சமூகத்துக்கு ஏற்படுகிறது. 

நாம் அரிசி உணவைப் பிரதானமாக உண்பதற்கு பல சமூகப் பொருளியல் காரணங்கள் உள்ளன. எனினும் எந்த மனிதனும் தனக்கு எது மிகுந்த நலம் பயக்கும் உணவு என அறிந்திருப்பது வாழ்க்கையின் அடிப்படையான விஷயம் என்று தோன்றுகிறது. நம் சமூகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்பும் கேழ்வரகும் பெரும்பான்மையானாரோல் உண்ணப்படும் உணவாக இருந்திருக்கிறது. கம்பு உணவும் கேழ்வரகு உணவும் தயாரிக்க எளியவை. அந்த இரண்டு தானியங்களும் தண்ணீரும் மட்டும் இருந்தால் போதும். அவற்றை முழுமையான உணவாக்கிட முடியும். இந்த உணவு தயாரிக்க மிகக் குறைவான நேரம் மட்டுமே தேவைப்படுகிறது. அதிகபட்சம் 30 நிமிடங்கள். ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவு தயாராகி விடுகிறது. நமக்கு உகந்த பொழுதில் தயாரித்துக் கொள்ள முடியும். முதல் நாள் இரவு தயாரித்து வைத்துக் கொண்டால் அடுத்த நாள் காலையும் இரவும் பயன்படுத்த முடியும். 

கம்மங்கூழ் குடித்தால் அது முழுமையாக ஜீரணம் ஆக ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதுவரை வயிற்றில் பசி ஏற்படுவது இல்லை. எட்டு மணி நேரம் கழித்தும் பசி மிக லேசாகவே இருக்கிறது. காலை 7 மணிக்கு வயிறு நிறைய கம்மங்கூழ் குடித்தால் அதன் பின் மாலை 5 மணி அளவில் அடுத்த வேளை உணவாக மீண்டும் கம்மங்கூழ் குடித்தால் அந்த இருவேளை உணவுகளே முழு நாளின் இயக்கத்துக்கும் உகந்ததாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத் தொழிலாளர்கள் விடிகாலை கூழ் அருந்தி விட்டு விவசாயப் பணிகளுக்குச் சென்றால் மீண்டும் மாலை உணவருந்திருயிருக்கிறார்கள். சென்ற 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் சமூகத்தில் மக்கள் மாதம் ஒருநாள் அமாவாசை தினத்தன்று இட்லி அல்லது தோசை செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். 

யோக வகுப்புகளில் உணவு குறித்தும் ஒருவேளை உணவுக்கும் இன்னொரு வேளை உணவுக்கும் இருக்க வேண்டிய நேர இடைவெளி குறித்தும் யோகப் பயிற்சிகள் செய்வதற்கு எத்தனை மணி நேரம் முன்பு உணவு உண்டிருக்க வேண்டும் என்பது குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தப்படும். இந்த மூன்று நாட்களில் அதனை அனுபவபூர்வமாக உணர்கிறேன். சிறு வயது முதல் கம்மங்கூழ் மற்றும் கேழ்வரகுக் கூழ் அவ்வப்போது வீட்டில் செய்யும் போது விரும்பி அருந்தும் வழக்கம் எனக்கு உண்டு. எனினும் முதல் முறை அதனை சமைக்கையில் தானியம் தானியமாகவே இருக்கும் போது அதன் நிலை என்ன மாவாக மாறும் போது எப்படி இருக்கிறது கொதிக்கும் நீரில் இட்டதும் அது ஆகும் நிலை என்ன களி பதத்துக்கு வரும் போது அதனில் நிகழ்வது என்ன என்பதை உடலும் மனமும் முழுமையாக ஈடுபட்டு உள்வாங்கிக் கொள்கிறது. நாமே சமைத்த உணவை நாம் உண்ணும் போது நாம் சமைத்த உணவு நம் உடலுக்குள் எவ்விதமான செயல்களில் ஈடுபடுகிறது என்பதை நம் உள்ளுணர்வு கவனிக்கிறது. 

இப்போது என் மனம் வேறு தானியங்களைக் கொண்டு எவ்விதம் கூழ் தயாரிக்கலாம் என யோசிக்கிறது. நவதானியங்களை முளைக்க வைத்து அவற்றை கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் இட்டு வேகவைத்து ஒருவேளை உணவாக அருந்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. 

சுயமாக சமைத்துக் கொள்வதன் மூலம் எனக்கு ஒரு புதிய உலகம் அறிமுகமாகியிருக்கிறது. அந்த உலகம் மகத்தானது.