Saturday, 28 June 2025

பெருநிலம்

 

 

பெருநிலம்

ஆந்திர மாநிலத்தைச் சுற்றி வர வேண்டும்  என மனம் மிகவும் விரும்பிக் கொண்டிருந்தது. ஆந்திரத்தை ஒரு சிறிய இந்தியா என்று கூற முடியும். ஆந்திர மண்ணின் இயல்பு அத்தகையது. லௌகிகப் பணிகள் அல்லது லௌகிகப் பொறுப்புகள் அல்லது லௌகிக பந்தங்கள் அதற்கான வாய்ப்பை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தன. அவற்றுடன் சமரசம் செய்ய முடியாது ; தற்காலிகமாகப் புறக்கணிப்பதே நடைமுறைத் தீர்வு என்பதால் ஒரு கணத்தில் சட்டெனப் புறப்பட முடிவு செய்தேன். முன்னர் புதிய நிலம் காண ரயிலில் செல்வேன் ; அதன் பின் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். இப்போது நான் உணர்வது அவ்வப்போது எவ்வகையான பயணம் வாய்க்கிறதோ அத்தகைய பயணங்களை சிறிதும் தள்ளிப் போடாமல் மேற்கொண்டு விட வேண்டும் என்பதே. எனக்கு மிகவும் பிடித்தது மோட்டார்சைக்கிள் பயணம் என்றாலும் ரயில் பயணமும் பிடித்தமானதே.

நான்கு நாட்கள் பயணம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது , நான்கு நாட்கள் பயணம் செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். கடைசி நிமிடம் வரை பயணம் உறுதியாகாமல் இருந்தது. சட்டென ஒரு தூண்டல் ஏற்பட்டு புறப்பட்டே தீருவது என முடிவு செய்தேன். புறப்பட்டே தீருவது என முடிவு செய்யும் மனமே பயணிக்குத் தேவை. நம் இடத்தில் நாம் இருந்தால் லௌகிகம் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் எண்ணத்தை நாம் அடைவோம் எனினும் அது முழு உண்மை அல்ல ; பகுதி உண்மையே. நமது லௌகிகம் நாம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல ; நம்முடன் இணைந்து செயல்படுபவர்கள், வாடிக்கையாளர்கள், சமூகம், சமூக மனநிலை என பல்வேறு கூறுகள் அதில் உள்ளன.

‘’விலை நிர்ணயம்’’ செய்து வைத்திருந்த மனை உரிமையாளரின் நண்பருக்கு அலைபேசியில் அழைத்து மூன்று நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன் ; அப்போது அலைபேசிக்கு அழைத்தால் அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது என்னும் செய்தியே கிட்டும் என்பதால் நான்கு நாட்கள் கழித்து செல்ஃபோனில் தொடர்பு கொள்ளவும் என்று கூறினேன். நான் அவருக்கு அழைத்த போது அவர் பக்கத்திலேயே மனை உரிமையாளர் இருந்திருக்கிறார். நான் கூறிய செய்தியை உடன் அவர் கூறி விட்டார். ‘’விலை நிர்ணயம்’’ செய்து வைத்திருக்கும் மனையை வாங்க இருப்பவருக்கும் ஃபோன் செய்தேன். மூன்று தினங்கள் ஊரில் இல்லை ; மூன்றாவது நாள் இரவோ அல்லது நள்ளிரவோ ஊர் திரும்பி விடுவேன் என்று சொன்னேன். நான் ஊர் திரும்பும் தினத்துக்கு மறுதினம் ஒரு சந்திப்பு தேவைப்படும் எனத் திட்டமிட்டிருந்ததாகக் கூறினார். நிச்சயம் வந்து விடுவேன் என்று கூறினேன். ஒருநாள் முன்னதாகத் திட்டமிட்டிருந்தால் நிச்சயம் ஆந்திரப் பயணத்தைக் கைவிட்டிருப்பேன். தொழில் தொடர்பான பணிகள் என்பவை எனது பணிகள் மட்டுமல்ல ; பல தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதில் இருக்கிறது. நாம் ஒரு விஷயம் திட்டமிடுகிறோம் என்றால் கண்ணுக்குத் தெரியாத பல வேலைவாய்ப்புகளும் பணிகளும் தொழிலாளர்களும் அதில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நண்பரின் மனைக்கு பட்டா விண்ணப்பித்திருந்தோம். அந்த மனையின் தனிப்பட்டா வந்து விட்டது. பட்டா வரைபடம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதற்கான பணியை செய்து கொடுப்பவருக்கு ஃபோன் செய்து இரண்டு நாட்கள் ஊரில் இல்லை ; மேலும் ஒருநாள் ஆனாலும் ஆகலாம்; நான் ஊர் திரும்பியதும் ஃபோன் செய்கிறேன் என்று சொன்னேன். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் எனது நண்பர். 15 நாட்களுக்கு முன் நாங்கள் சந்தித்திருந்தோம். அவருக்கும் தகவல் சொன்னேன். ஊர் திரும்பிய அடுத்த நாள் நாம் சந்திக்க வேண்டும் என்றார். ஊர் திரும்பியதும் ஃபோன் செய்கிறேன் என்றேன். உடனடி தகவல் தெரிவித்தல்கள் முடிந்தன. அவர்கள் எவருக்குமே நான் பயணத்தின் போது அலைபேசி வைத்துக் கொள்ள மாட்டேன் என்னும் தகவல் தெரியாது அல்லது நான் நேரடியாகத் தெரிவிக்கவில்லை ; மறைமுகமாக இந்த 3 நாட்களில் என்னைத் தொடர்பு கொள்ள முடியாது ; அலைபேசி தொடர்பு எல்லையில் இல்லை என்றோ ஸ்விட்ச் ஆஃப் என்றோ தகவல் தெரிவிக்கும் எனக் கூறியிருந்தேன். ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தவுடன் பயணம் புறப்பட்டு விட்டதான உணர்வு ஏற்பட்டது. கையில் ரூ.3000 மட்டும் பணம் இருந்தது. இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவது என்பதைப் போன்ற மகத்தான வழி இன்னொன்று இல்லை.

***

இரவு உணவாக வரகரிசிக் கஞ்சி தயாரித்திருந்தேன். தயாரித்து முடித்ததும் காவிரியில் மூழ்கி எழ வேண்டும் எனத் தோன்றியது. நதிக்குச் சென்று மூழ்கி எழுந்தேன். ஒரு பயணம் என்பது மிகவும் முக்கியமானது. பெரிய விஷயமாகும் அது. அதில் ஏற்படும் ஓர் அனுப்வம் மிக முக்கியமானதாக இருக்கலாம் ; நாம் இதுநாள் வரை நம்பிய விஷயத்தை மாற்றியமைக்கலாம். எனவே நம்மை விடப் பெரிய ஒன்றிடம் ஆசி பெறுவது நல்லது என நினைத்தேன். நதியில் மூழ்கி எழுந்ததில் நதியின் ஆசியைப் பெற்றதாக உணர்ந்தேன். வீட்டுக்கு வந்து வரகரிசிக் கஞ்சியைக் குடித்து விட்டு இரவு 10.15 சென்னை விரைவு ரயிலைப் பிடிக்கக் கிளம்பினேன்.

 இந்த ரயில் மிகவும் பரிச்சயமானது. நான் இந்த ரயிலை அடிக்கடி தாம்பரத்தில் மாலை 6.10க்குபிடித்து இரவு 10.20க்கு ஊர் வந்து சேர்வேன். இன்று அதன் இணை ரயிலைப் பிடித்து சென்னை செல்கிறேன். ராமேஸ்வரம் தாம்பரம் ரயிலும் தாம்பரம் ராமேஸ்வரம் ரயிலும் மயிலாடுதுறை சந்திப்பில் சந்தித்துக் கொள்கின்றன. பயணச்சீட்டு சாளரத்தில் நான் செல்ல இருக்கும் ஊரின் பெயரைக் கூறி இரண்டாம் வகுப்பு சாதாரண பயணச்சீட்டு கேட்டேன். அந்த ஊர் 1580 கி.மீ தொலைவில் இருக்கிறது. ரூ.385 கொடுங்கள் என்றார் சாளர எழுத்தர். இத்தனை கிலோமீட்டர் தூரத்துக்கு இத்தனை குறைவாகக் கட்டணம் வசூலிக்கும் ஒரு அமைப்பு உலகிலேயே இந்திய ரயில்வே மட்டுமே. ஒவ்வொரு இந்தியனும் இந்திய ரயில்வே சாதித்திருக்கும் விஷயங்கள் குறித்து அவசியம் பெருமை கொள்ள வேண்டும்.

ரயில் வந்தது. முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டியில் ஏறிக் கொண்டேன். இருக்கைகள் முழுவதுமாக நிரம்பியிருந்தன. பதினைந்து பேர் நின்று கொண்டு பயணித்தனர். நான் புறப்பட்ட அன்று பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை நடைமேடையிலேயே அவதானித்தேன். ரயிலில் ஒரு தம்பதி . அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. குழந்தை அப்போது தூங்கி விட்டது. அவர்கள் மூவரும் மூன்று இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். குழந்தை தூங்கியதும் அந்த குழந்தையின் அன்னை அக்குழந்தையை தன் மடியில் அமர்த்திக் கொண்டார். ஒரு இருக்கை கிடைத்தது. அதில் அமர்ந்து கொண்டேன். ஊரிலிருந்து 6 கி.மீ தொலைவில் ஆனந்ததாண்டவபுரம் என்ற ஊர் உள்ளது. கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஊராகும் அது. அவரது ‘’நந்தன் சரித்திரத்தை’’ யாவரும் அறிவார்கள். அந்த ஊரின் பெயர் மிகப் பெரிதாக இருப்பதால் அதனை எங்கள் ஊர்க்காரர்கள் ஏ.டி.பி என்று சொல்வோம். எங்கள் ஊரின் ரயில் நிலையம் ரயில்வே சந்திப்பு ஆகும். வடக்கே விழுப்புரத்துக்கும் தெற்கே திருவாரூருக்கும் மேற்கே கும்பகோணத்துக்கும் செல்லும் ரயில் பாதைகள் சந்தித்துக் கொள்ளும் இடமாகும் எங்கள் ஊரின் ரயில்வே சந்திப்பு. எனவே இங்கு ரயில் பிளாட்ஃபாரங்களும் அதிகம். ஒப்பீட்டளவில் அதிக ரயில்களை உள்வாங்கி நிறுத்தி வைக்க முடியும். எனினும் இங்கும் அதிக ரயில்கள் இருந்தால் பயணத்தில் உள்ள ரயில்களை ஆனந்ததாண்டவபுரத்திலோ அல்லது குத்தாலத்திலோ அல்லது மங்கநல்லூரிலோ மட்டுமே நிறுத்தி வைத்து அந்த ரயில்களுக்கு வழியமைத்துக் கொடுக்க முடியும். எனவே ஆனந்த தாண்டவபுரம் என்னும் ஏ.டி.பி எங்களுக்கு மிகவும் பழக்கமான ஊர் அல்லது பழக்கமான பெயர். இந்த ஊர் குறித்து என்னிடம் ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. இது நான் பல வருடங்களுக்கு முன்னால் சிறுவனாக இருந்த போது கேட்டது. ஆனந்ததாண்டவபுரத்துக்காரர் ஒருவர் தென்னக ரயில்வேயின் பொது மேலாளராக இருந்தார். ரயில்வேயில் மிகப் பெரிய உயர் அதிகாரப் பதவி அது. அவரது பதவிக் காலத்தில் மெயின் லைன் வழியாக செல்லும் எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களும் இரண்டு நிமிடம் ஆ. தா. புரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு வெளியானது. எப்படி இருந்தாலும் அங்கே கிராஸிங் காக வண்டிகள் நிற்பது வழக்கமாகி விட்டதால் எல்லா வண்டிகளும் நின்று செல்லும் என்னும் வரவேற்பு எங்கள் ஊர் ரயில்வே சந்திப்பின் பணிகளை எளிதாக்கிக் கொடுத்தது என்பது உண்மை. இந்த தகவலை நான் சொல்லும் போது உங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் சதர்ன் ரயில்வேயின் பொது மேலாளரா என பலரும் ஆச்சர்யமாகக் கேட்பார்கள். அந்த 6 கி.மீ தொலைவில் இருக்கும் ஏ.டி.பி யில் உட்கார இடம் கிடைத்தது எவ்வளவு நல்ல விஷயம் என்பது 6 மணி நேரப் பயணத்துக்கு 5 நிமிடத்தில் இடம் கிடைத்த எனக்குத்தான் தெரியும். நான் முன்பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்தியிருக்கிறேன். எப்போதெனில் ரயில் நிலையங்களில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்னும் வசதி இருந்த போது. அதன் பின் இணையம் அந்த பணியை எளிதாக்கியது. அதனை ஸ்மார்ட்ஃபோன் மேலும் எளிதாக்கியது. நான் ஸ்மார்ட்ஃபோனுக்குள் வரவில்லை. அது என்னுடைய விருப்பம். என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இருப்பினும் என் மீது ஸ்மார்ட் ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை என்பது உறவினர்களால் நண்பர்களால் புகாராக முன்வைக்கப்படுகிறது. உலகில் எவ்வளவோ பொருட்கள் உள்ள்ன . எல்லாமும் எல்லாரிடமும் இருப்பதில்லை. அது போல ஒரு விஷயமே என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இருப்பதும். நான் முன்பதிவு இருந்தால் தான் பயணிப்பேன் என எண்ணுவதில்லை. ஒரு ஊருக்குக் கிளம்ப வேண்டும் எனத் தோன்றினால் கிளம்பி போய்க் கொண்டேயிருப்பேன். ரயில் விழுப்புரம் வந்ததும் எங்கள் பெட்டியில் பாதிக்குப் பாதி பேர் இறங்கி விட்டனர். நான் படுத்துத் தூங்கிக் கொண்டு சென்றேன். காலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடந்தேன். நான் 7 மணிக்கு கோரமண்டல் ரயிலைப் பிடிக்க வேண்டும். மின்சார ரயிலைப் பிடித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்துக்குச் சென்று எதிரில் இருக்கும் செண்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டும்.

சோழ மண்டலக் கடற்கரை என்னும் வார்த்தையே ’’கோரமண்டல்’’ என மருவியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சர்வதேச கடல் மாலுமிகள் நம் நாட்டின் கிழக்குக் கடற்கரையைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்த வார்த்தையும் அந்த வார்த்தையின் திரிபும் என்னை மிகவும் ஈர்க்கும். சோழ மண்டலக் கடற்கரை வழியே ஒரு மோட்டார்சைக்கிள் பயணம் நிகழ்த்த வேண்டும் என விரும்பினேன். நாட்டின் வட கிழக்கு பகுதிக்கு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள கோரமண்டல் வழியே கல்கத்தா செல்வது என்பது சிறப்பான வழி. அவ்வாறான ஒரு பயணத்தை விரைவில் நிகழ்த்துவேன். சென்னையையும் கல்கத்தாவையும் இணைக்கும் ‘’கோரமண்டல் எக்ஸ்பிரஸில்’’ பயணிக்க வேண்டும் என்னும் எனது நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியது. ரயிலைப் பிடிக்க எந்த நடைமேடைக்குச் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகையைக் கண்டேன். எந்த அறிவிப்பும் இல்லை. விசாரணை சாளரத்துக்குச் சென்று விசாரித்தேன். இணை ரயில் தாமதமாக வருகிறது என்பதால் கோரமண்டல் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 8.30க்கு புறப்படும் என்றனர். நடைமேடையில் பொதுமக்கள் கூடி நின்றிருந்தனர். பொதுப்பெட்டியில் ஏற இரயில் என்ஜின் இருக்கும் என உத்தேசிக்கும் பகுதியை ஒட்டியும் ரயிலின் பின் பக்கம் உள்ள ’’ ரயில் கார்டு’’ பெட்டிக்கும் அருகிலும் மக்கள் வரிசையில் நின்றனர். முன்பதிவு பெட்டிகளில் ஏற இருப்பவர்களும் குழுமி நின்றிருந்தனர். நான் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பகுதியில் இருந்தேன். அங்கே வரிசையைப் பராமரிக்க ரயில்வே காவல் படை காவலர்கள் மூன்று பேர் முயன்று கொண்டிருந்தனர். நான் வரிசையில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை எவ்வளவு என எண்ணிப் பார்த்துக் கணக்கிட்டேன். மொத்தம் 160 பேர் இருந்தனர். முன்னால் உள்ள பொதுப் பெட்டியில் 200 பேர் அமர முடியும். நான் சென்று தலைமைக் காவலரிடம் இந்த செய்தியைக் கூறி அவரது பணியை எளிதாக்கினேன். இன்னும் பலர் வரக்கூடும் என்றார். ரயிலின் நேரம் 7 மணி. 7 மணி ரயிலைப் பிடிக்க தாமதமாக வருப்வர்கள் கூட 7.10க்கோ 7.15க்கோ வருவார்கள். இப்போது நேரம் 8. இந்த ரயிலுக்கு இனி யாரும் புதிதாகக் கிளம்பி வர மாட்டார்கள் என்று சொன்னேன். அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. புன்னகைத்தார். நான் நடைமேடையில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ரயில் வந்தது. பொதுப் பெட்டி, முன்பதிவுப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி என அனைத்துக்கும் பெட்டிக்கு 3 தொழிலாளர்கள் என உள்ளே சென்று குப்பையைப் பெறுக்கி சுத்தப்படுத்தினர். கழிவறைகளைத் தூய்மைப்படுத்தும் ரசாயன திரவம் குழாய் மூலம் பாய்ச்சப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. வண்டி காலை 9 மணிக்குப் புறப்பட்டது.

எனக்குப் பிடித்தமான இடது பக்க ஜன்னல் இருக்கை எனக்குக் கிடைத்தது. எனக்கு எதிரில் என்னுடன் அமர்ந்து பயணித்தவர் பெயர் அசோக் ஜகன்நாத். அவர் ஒரு தொழிலாளர். ராணுவ வீரர் போல ’’ஹேர் கட்’’ செய்திருந்தார். தினமும் ஜிம் சென்று உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அதனால் தான் அவரிடம் அப்படிக் கேட்டேன். தனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என சின்ன வயதில் ஆசை இருந்ததால் உடலை ராணுவ வீரன் போல பராமரிக்கிறேன் என்றார். எங்கள் அறிமுகம் இனிய அறிமுகமாயிற்று. அன்று இரவு வரை அவருடன் பல விஷயங்கள் பேசிக் கொண்டு விவாதித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு சென்றேன் என்பதே உண்மை. அவருக்கு ஒரிய பாஷை மட்டுமே நன்றாகத் தெரியும். ஹிந்தி கொஞ்சம் தெரிந்திருக்கிறது. என்னிடம் ஹிந்தியில் பேசினார். நான் அவரிடம் ஆங்கிலத்தில் பேசினேன். இருந்தாலும் இருவரும் பேசி உரையாடினோம் என்பதே உண்மை. இரு மனங்கள் உரையாடிக் கொள்ள வேண்டும் என நினைத்தாலே போதும் அவர்களுக்குள் உரையாடல் சாத்தியமாகும் என்பதை பயணிகள் அறிவார்கள். அவர் ஒடிஸ்ஸாவின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர். அவர் பெயர் அசோக். அசோகர் ஒடிஸ்ஸா அதாவது கலிங்கத்தின் மேல் படை எடுத்தவர். எனினும் ஏன் அவர் பெயர் ஏன் ஒடிஸ்ஸாவில் சூட்டப் படுகிறது ? அவர் போர் போதும் என நிறுத்திக் கொண்டவர் என்பதும் வன்முறையால் மனிதர்களை வெல்வதை விட அன்பால் மனித மனங்களை வெல்வதே மேலும் சிறப்பான வழி என்பதை அனுபவத்தால் உணர்ந்து மனம் திரும்பியவர். கலிங்கம் அவரை மன்னிக்கிறது என்பதற்கு நான் கண்ட மனிதரின் பெயரே சாட்சி. நான் காணும் நான் உணரும் வரலாறு இப்படிப்பட்டதே ! பயணத்தில் எனக்கு உற்ற துணைவராக இருந்தார். எந்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றாலும் உடன் இறங்கிச் சென்று இரண்டு வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவார். பயணத்தின் நடுநடுவே இவ்விதம் இறங்க எனக்குத் தயக்கமாக இருக்கும். ரயில் கிளம்பிப் போய் விட்டால் என்ன செய்வது என யோசிப்பேன். அவர் சில நிமிடங்களில் தண்ணீருடன் வந்து விடுகிறார்.

எனக்கு பயணம் என்பது காட்சிகள். அந்த ஒவ்வொரு காட்சியின் மூலமாக எனது மனம் பல விஷயங்களை அவதானம் செய்து கொள்ளும். எனது மனத்தின் ஒரு பகுதி அவை இரண்டையும் கவனிக்கும். அவற்றை மனம் தொகுப்பதும் உண்டு. தொகுத்தே ஆக வேண்டும் என மனதுக்கு எந்த கட்டாயமும் அளிக்க மாட்டேன். மனதில் மகிழ்ச்சியை உணர ஆரம்பித்து விட்டாலே நான் காண்பவை இனியவை ஆகி விடும். அசோக் ஜகன்நாதன் அந்த இனிமையைத் துவங்கி வைத்தார்.

ஆந்திரக் கடற்கரை 1000 கி.மீ நீளம் கொண்டது. இதுவே ஒரு பிரும்மாண்டமான விஷயம். வானியல் முன்னறிவிப்புகள் ஆகாசவாணியில் ஒலிபரப்பப்படும் போது ஆந்திராவை ராயல சீமா, சீமா ஆந்திரா, தெலங்கானா, கோஸ்டல் ஆந்திரா என்ற உட்பிரிவுப் பெயர்களுடன் கூறுவார்கள். சிறுவனாக இருந்த போது எனக்கு ராயலசீமா என்னும் பெயர் மிகவும் பிடிக்கும். ஏன் என்று தெரியவில்லை. அந்த பெயரின் மீது ஒரு வசீகரம் எனக்கு இருந்தது. ஆந்திர நிலத்தில் ராயலசீமாவில் நான் மோட்டார்சைக்கிளில் பயணித்திருக்கிறேன். ராயல என்னும் தெலுங்குச் சொல்லுக்கு கற்பாறை என்று பொருள். அங்கிருக்கும் குன்றுகள் சிறு சிறு கற்பாறைகளால் ஆனவை. அவற்றைக் காணும் எவருக்கும் பெரும் மலைப்பு ஏற்பட்டு விடும். ராயலசீமா பகுதியின் குன்றுகளின் தொடர்ச்சியை தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணலாம். கடலோர ஆந்திராவும் மிக நீண்ட ஒரு பிரதேசம். நம் நாட்டுக்கு தென்மேற்கு பருவ மழையும் வட கிழக்கு பருவ மழையும் மழை தருகின்றன. ஜூன் 1 ம் தேதி தென் மேற்கு பருவ மழை கன்னியாகுமரியில் பொழியத் தொடங்கும்.அங்கிருந்து அப்படியே முழு கேரளாவும் பெய்து கர்நாடகம், கோவா, மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் வழியாக தில்லி சென்று ஹரித்வார் வழியாக இமயத்தைத் தொடும் வரை தென்மேற்கு பருவ மழை பொழியும். நம் நாட்டின் எல்லா நதி உற்பத்தி இடங்களும் தென் மேற்கு பருவமழையால் மழையைப் பெறுப்வை. அக்டோபர் 1ம் தேதி வட கிழக்கு பருவ மழை தொடங்கும். பாக் ஜல சந்தி அருகே உற்பத்தி ஆகி தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடங்கி கடலோர தமிழகத்துக்கு மழையைக் கொடுத்து தொடர்ந்து கடலோர ஆந்திரத்துக்கும் ஒடிஸ்ஸா , மேற்கு வங்கம் மாநிலங்களுக்கும் வங்கதேசத்துக்கும் மழையைக் கொடுப்பது வட கிழக்கு பருவ மழையே. இந்த பருவ மழையின் போது தமிழகத்தில் உருவாக்கும் புயல் சின்னங்கள் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவையோ ஒடிஸ்ஸாவையோ அல்லது மேற்கு வங்காளத்தையோ தாக்கும். கடலோர ஆந்திரப் பிரதேசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் வட கிழக்கு பருவ மழையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகாசவாணியில் வானிலை அறிக்கை கேட்கும் வழக்கம் எனக்கு இருந்ததால் அதில் கூறப்படும் பல ஊர்களின் பெயரைக் கொண்டு நான் அவற்றை என் மனதுக்குள் கற்பனை செய்து கொள்வேன். நெல்லூர், ஓங்கோல், விசாகப்பட்டினம், தெனாலி, ஸ்ரீகாகுளம் எனப் பல பெயர்கள். இந்த முறை ரயில் பயணத்தில் கடலோர ஆந்திரத்தின் 1000 கிலோ மீட்டரையும் இருமுறை பயணித்துக் கடந்தேன்.

ஆந்திரத்தை அடைந்த சில மணி நேரங்களில் பெண்ணாறு ஆற்றைக் கடந்தோம். பெண்ணாறை நான் வணங்கினேன். அசோக் இந்த நதியின் பெயர் என்ன என்று கேட்டார். காவிரி தென்பெண்ணை பாலாறு புது வையை கண்டதோர் பொருநை நதி என மேவிய ஆறு பல ஓட மேனி செழித்த தமிழ்நாடு என்றான் மூதாதை பாரதி. அவனது சொற்கள் வழியாகவே நான் காணத் தொடங்கினேன். அவனது உணர்ச்சிகளை அவனது பாட்டின் மூலம் உணர்ந்தேன். பெண்ணாறு ஆந்திரத்தில் பென்னா என்றும் தமிழகத்தில் தென்பெண்ணை என்றும் ஓடுகிறது. விஜயவாடாவில் கிருஷ்ணா நதியைக் கடந்தோம். அதனையும் வணங்கினேன். இந்த பயணத்தின் முக்கியமான கட்டம் என்பது கோதாவரி பாயும் ராஜமுந்திரி என்னும் பிரதேசத்தைக் கண்டது தான். கம்பன் ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என்கிறான். கவிதையின் சொற்கள் பெருக்கெடுத்துப் பாய்வதைப் போல பாய்ந்து செல்லும் கோதாவரி. கோதாவரிப் பெருக்கைக் கூற கம்பன் ஏன் கவிதைப் பெருக்கைச் சொல்கிறான்?  கவிதைக்கும் நதிக்கும் ஊற்றுமுகங்கள் கண்ணால் காண இயலாதவை எனினும் பொங்கிப் பிரவகிப்பவை என்பதாலா? ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் கோதாவரியை வணங்கினர். கோதாவரி பாயும் பிரதேசத்தில் பலவிதமான விவசாயப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனக்கு கோதாவரியில் படகு ஒன்றில் நெடுஞ்தொலைவு பயணிக்க வேண்டும் என்றும் கோதாவரிக்கரையில் சில வாரங்கள், சில மாதங்களாவது வாழ வேண்டும் என்றும் ஆசை உண்டானது.

ஆந்திரத்தில் மிக அதிகமாக அபார்ட்மெண்ட் கட்டுமானப் பணிகள் நடப்பதை இந்த ரயில் பயணத்தில் கண்டேன். கிட்டத்தட்ட எல்லா ரயில் நிலையங்களும் பரப்பளவில் பெரிதாகக் கட்டப்படுவதைக் கண்டேன். நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வே அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம் நாட்டின் வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும் என்னும் உணர்வு ஏற்பட்டது.

பயணத்தில் நான் காணும் காட்சிகளும் அடையும் உணர்வுகளும் விதைகளைப் போன்றவை. அவை மனதில் தூவப்படுகின்றன. ஆழுளத்திலிருந்து அவை என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு விதத்தில் முளைக்கக் கூடும். ஒரு பயணம் அடுத்த பயணத்துக்கான தூண்டுதலாகவும் அமைகிறது. ஒவ்வொரு பயணமுமே நதியில் முழுக்காடுவது போன்றவையே. மூழ்கும் போது ஒருவராக இருக்கும் நாம் மூழ்கி எழும் போது வேறொருவராகிறோம். நிலக்காட்சிகளைக் காண்பதற்கென்றே மேற்கொண்ட இப்பயணம் என்னளவில் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒரு மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினை பகல் பொழுதில் ரயிலில் பார்க்கும் வண்ணம் ரயில் பயணங்களை அடிக்கடி நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் உண்டாகியிருக்கிறது !!